நீலகிரி: கொரோனா பாசிடிவ் என தெரிந்தே மருந்தகத்தை திறந்து அலட்சியம் - சீல் வைத்த அதிகாரிகள்

சதீஸ் ராமசாமி
சீல் வைத்த அதிகாரிகள்.
சீல் வைத்த அதிகாரிகள்.
Tamilnadu

வட மாநிலங்களை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தனது கோர முகத்தை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் காட்டத்துவங்கியுள்ளது. இரண்டாம் அலையின் அசுர வேகத்தை மட்டுப்படுத்த வரும் திங்கள் கிழைமை முதல் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி

தமிழகத்திலேயே மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டமான நீலகிரியிலும் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 150-ஐ கடக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அணைத்து விதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஊட்டியில் கமர்சியல் சாலையில் இயங்கிவரும் ஒரு தனியார் மருந்தகத்தின் உரிமையாளருக்கு அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால்,அவரது மருந்தகம் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வந்தது. ஊழியர்கள் யாரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை. கிருமிநாசினி போன்றவையும் தெளிக்கப்படவில்லை. இதனை அறிந்த ஊட்டி உதவி ஆட்சியர் மற்றும் சில அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு,மருந்தகத்துக்கு சீல் வைத்தனர்.

சீல் வைத்த அதிகாரிகள்.

அலட்சியமாக செயல்பட்ட தனியார் மருந்தகம் குறித்து பேசிய ஊட்டி உதவி ஆட்சியர் மோனிகா ராணா,``தனியார் மருந்தக உரிமையாளருக்கு கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு பணிபுரிபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க வேண்டும். அதன் பின்னரே மருந்தகத்தை திறக்க அனுமதி வழங்கப்படும். மேலும் திறப்பதற்கு முன்னர் மருந்தகத்தை கிருமிநாசினி தெளித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி அலட்சியமாக செயல்படும் கடைகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT