miscellaneous

“பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸாக மாறுவதற்கான நான்கு காரணங்கள் என்னனு தெரியுமா?” - அனுஹாசன் #LetsRelieveStress

'ந்திரா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, வித்தியாசமான கதாபாத்திரங்களால் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் அனுஹாசன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவருக்கென்று தனியிடம் உண்டு.

தற்போது சன் டிவியில், 'வாங்க பேசலாம்' என்ற நிகழ்ச்சியை வழங்கிவருகிறார். எப்போதும் பரபரவென்று இயங்கிக்கொண்டிருக்கும் அனுஹாசன், ஸ்ட்ரெஸ்ஸை எப்படி எதிர்கொள்கிறார்?

“2017, எனக்கு கடினமான ஆண்டு. அம்மா, அப்பா ரெண்டு பேரையும் இழந்திருக்கேன். அந்த டைம்ல ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்துல இருந்தேன்.

எப்பவுமே, பெரிய சோகம் நிகழும்போது நமக்கு ஒண்ணுமே புரியாது. என்ன நடக்குதுங்கிறதுகூட நம்ம மனசுலயோ மூளையிலயோ பதிவாகாது. ரொம்ப வேகமா எல்லாம் கடந்து போயிடும். சில நாள்களுக்குப் பிறகுதான் அதோட வலியே நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

அப்பா, அம்மாவை இழந்த வலி ஒரு பக்கம். எனக்கான பொறுப்புகள் ஒரு பக்கம். என்ன பண்றதுனே தெரியலை. சோகம் பெரிய அலையா வந்து என்னை மூழ்கடிச்சிடுமோன்னு தோணுச்சு.

அதுக்கப்புறம் கொஞ்சம் நிதானமா யோசிச்சேன். என்னென்ன வேலைகள் எனக்கு முன்னால இருக்குனு ஒரு லிஸ்ட் போட்டேன். அந்த லிஸ்ட்டுல இருந்த வேலைகளை ரொம்ப கவனமா செஞ்சுமுடிச்சுட்டு ஒண்ணு ஒண்ணா டிக் பண்ணினேன்.

எப்போ வேலை செய்யணுமோ அப்போ செஞ்சேன். எப்போ அழணுமோ அப்போ அழுதேன். எந்தச் சூழல்லயும் சோர்ந்துபோய் உட்காரவேயில்லை. ஸ்ட்ரெஸ் ஏற்பட்டுச்சுனா அடுத்தது என்னனு பார்க்க ஆரம்பிச்சிடுவேன். எங்க குடும்பத்தில எல்லாருமே அப்படித்தான். அந்தப் பயிற்சிதான் என்னை மீட்டெடுத்துச்சு.

நாம போனை எடுத்தோம்னா யாரை வேணும்னாலும், எப்போ வேணும்னாலும் கூப்பிடலாம். நம்முடைய இமெயிலை எங்கே வேணும்னாலும் செக் பண்ணலாம். எங்க இருந்து வேணும்னாலும் ஓர்க் பண்ணலாம். ஆனா, நமக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான இடம் எங்கேனு பார்த்தா எங்கேயுமே கிடையாது.

நமக்கு ஏற்படுற அழுத்தத்துல இருந்து நாம எங்கயுமே தப்பிச்சு ஓட முடியாது. நாம் வேலை பார்க்கிற நேரத்துக்கும், நமக்காகச் செலவிடுகிற நேரத்துக்கும் இடையில் இருக்கும் எல்லை மங்கலாகிக்கிட்டே போகுது. அதனால நமக்கு பிரஷர் ஏற்படுது.

நம்ம வேலையை நல்லா செய்யணும். அதைத் தக்கவெச்சிக்கணும், இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும், நம்முடைய தோற்றம் இன்னும் அழகா இருக்கணும், அடுத்த சினிமா, அடுத்த அவார்டுனு நமக்கு ஏகப்பட்ட பிரஷர்... இதெல்லாம் போக நம்ம ஃபேமிலியை கவனிக்கவேண்டிய சூழல்...

உண்மையில் எனக்கு பிரஷர் பிடிக்கும். அதை வரவேற்கவும் எதிர்கொள்ளவும் கத்துக்கிட்டேன். அப்போதான் நம் மீது ஒரு எதிர்பார்ப்பு நமக்கே ஏற்படும்.

புதுசு புதுசா இதுவரைக்கும் ஒர்க் பண்ணாத புது ஸ்டைல்ல நாம ஒர்க் பண்ணலாம். நமக்கான பிரஷர்தான் நம்மை ஓடவைக்குது; ஊக்குவிக்குது. எப்போ இது கஷ்டமாகுதுன்னா நம்முடைய எதிர்பார்ப்புகளை நம்மால் எப்போ நிறைவேற்ற முடியாதுனு தோணுதோ அப்போ நம்முடைய பிரஷர், 'ஸ்ட்ரெஸ்'ஸா மாறிடுது. ஸ்ட்ரெஸ் நல்ல விஷயம் கிடையாது. யாருக்கு வேணும் மனஅழுத்தம்?

பிரஷர், ஸ்ட்ரெஸ்ஸா மாறுறதுக்கு நாலு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, என்ன ஆயிடுமோங்கிற பயம். ரெண்டாவது, என்ன ஆகப் போகுதுங்கிறது தெளிவாகத் தெரியாத நிலைமை. மூன்றாவது எதிர்பார்ப்புகள். நான்காவது இயலாமை. யாரும் நமக்கு உதவலையேங்கிற சுயபச்சாதாப நிலை.

என்ன ஆயிடுமோங்கிற பயத்தை நான் எப்படி ஹேண்டில் பண்றேன்னா, மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடப்போகுதுனு நினைப்பேன். கான்ஃபிடென்ஸ் வர்ற வரைக்கும் என்னைத் தயார்படுத்துவேன்.

என்ன ரிசல்ட் வருங்கிறதைப் பத்தி கவலைப்படாம, நாம் என்ன பண்ணினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்ங்கிறதுக்கான செயல் முறையில கவனம் செலுத்துவேன்.

எதிர்பார்ப்புகளைப் பொறுத்தவரை, என்னால பெஸ்ட் ரிசல்ட் எப்படி கொடுக்க முடியும்ங்கிறது மட்டும்தான் என்னுடைய எதிர்பார்ப்பா இருக்கும்.

நாலாவது, இயலாமை என்னும் பலவீனம் எனக்குள் ஏற்பட்டால் மூன்று விஷயங்களில் கவனம் வைப்பேன். திட்டமிடுதல், ஆய்வு செய்தல், செயல்படுதல்னு முன்று நிலைகள்ல செயல்படத் தொடங்கிடுவேன்.

மனஅழுத்தத்துக்குக் காரணம், நம் வேலைக்கான டெட் லைனை எப்படி மீட் பண்ணப் போறோம்ங்கிறதுதான். அதுக்குத் திட்டமிடணும். இங்கிலீஷ்ல ஒரு பொன்மொழி இருக்கு. `If you fail to plan, you are plan to fail'-னு சொல்வாங்க. அதுதான் என் தாரக மந்திரம்" என்கிறார் அனுஹாசன்.