miscellaneous

நடுவுல கொஞ்சம் மூளையைக் காணோம்... அயர்லாந்தின் 84 வயது விந்தை மனிதர்!

ம் அன்றாட வாழ்வில் யாரேனும் ஒருவரையாவது "உனக்கு மண்டையில மூளை இருக்கா...?" என்று கேட்டிருப்போம். அப்படி யாராவது இவரிடம் கேட்டால், இவர் "கொஞ்சம் மட்டும் இல்லைங்க" என்றுதான் சொல்வார். ஆம், இவருக்கு நிஜமாகவே ஒரு பாதி மூளை இல்லை.

அயர்லாந்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத அந்த முதியவருக்கு வயது 84. சென்ற மாதம், சில நாள்களாக அவருக்கு மயக்கம் வந்துகொண்டே இருந்துள்ளது. வயதானவர்களுக்கு இது சாதாரணமானதுதான் என்று நினைத்த அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாள்கள் போகப்போக தனது இடது கை மற்றும் கால் மிகவும் பலவீனமடைந்ததைப்போல் உணர்ந்ததால், சிகிச்சைக்காக வடக்கு அயர்லாந்தில் உள்ள காஸ்வே மருத்துவமனையை நாடியுள்ளார். சில அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்துபார்த்த மருத்துவர்கள், மூளையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்கூட இப்படி நடக்கலாம் என்பதால் தலையை ஸ்கேன் செய்துபார்க்க முடிவு செய்தனர்.

ஸ்கேன் செய்யும்போது அதிர்ந்துபோன டாக்டர்கள், ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையைத் தேடத் தொடங்கிவிட்டனர். மண்டையோட்டின் வலதுபுறத்தில் மூன்றரை இன்ச் அளவிற்கு இருக்க வேண்டிய பகுதி அவரது தலையில் வெற்றிடமாக இருந்துள்ளது.

பொதுவாக முகத்திலோ, தலையிலோ ஏதேனும் பலமான அடிபட்டால் அதன் தாக்கம் மூளைக்கும் செல்லும், அப்போது அதில் தாக்கப்படும் பகுதி சிதைந்து அங்கே இம்மாதிரியான வெற்றிடம் உருவாகி காற்று அடைத்துக்கொள்ளும். அவருக்கு அப்படி எதுவும் காயம் ஏற்படவில்லை. ஒருவேளை மூளைக்கட்டி (Brain Tumour) இருந்து அதற்காக அறுவைசிகிச்சை ஏதாவது செய்திருந்தால்கூட இப்படி ஏற்படலாம். அவர் அப்படி எதுவும் சிகிச்சை தனது இளமைக்காலத்தில் செய்திருக்கலாம், அதைத் தங்களிடம் தெரிவிக்க மறந்திருப்பார் என்ற கோணத்தில் அவரது பழைய மருத்துவ வரலாற்றினை ஆராய்ந்தார்கள். ஆனால், சிகிச்சை செய்ததாகத் தகவல் எதுவும் இல்லை.

Photo Courtesy:  BMJ Case Reports

குழம்பிப்போன மருத்துவர்கள் அவரது மூளைப்பகுதியை மேலும் ஆழமாக ஆராய்ந்தபோது, மூளைக்கும் நாசிக்குழிக்கும் இடையிலான தொடர்பு ஏற்படுத்தும் மூக்கடி எலும்பின் மீது மற்றொரு எலும்பு வளர்ந்திருந்தது தெரியவந்தது. அந்த எலும்பு வெற்றிடத்தில் இருக்கும் காற்று வெளியே வர முடியாதவாறு அடைத்திருந்ததும், அந்தக் காற்றின் அழுத்தத்தால் மூளைத்திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புமே இவரது தலை சுற்றலுக்கும், கை கால் பலவீனத்துக்கும் காரணம் என்று புரிந்துகொண்டார்கள்.

அறுவைசிகிச்சையின் மூலம் அதைச் சரிசெய்து விடலாம் என்றாலும், அது மிகவும் சிக்கலான சிகிச்சை என்றும் அதில் ஆபத்துகள் நிறைந்துள்ளன என்பதையும் டாக்டர்கள் அவரிடம் விளக்கியுள்ளனர். அனைத்தையும் கேட்டுவிட்டு அவர் அறுவைசிகிச்சை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

1.4 கிலோ எடைகொண்ட மூளையில் பாதியைக் காணவில்லை என்று கூறினால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது? அதுவும் மருத்துவ வரலாற்றில் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், புகைப்பழக்கம்கூட இன்றி இதுவரை ஆரோக்கியமாகவே வாழ்ந்திருக்கிறார் இந்த முதியவர். அப்படியிருக்க இதைக் கேட்டபோது அவருக்கும் அதிர்ச்சியாகத்தானிருந்தது. அறுவைசிகிச்சை செய்துகொள்வதைத் தவிர்த்துவிட்டாலும், அவரை 2 வாரங்களுக்கு மருத்துவமனையில் இருக்க வைத்து மீண்டும் கை, கால் பலவீனம், தலைச்சுற்றல் போன்ற இன்னல்கள் வராமல் இருக்க சில அடிப்படை சிகிச்சைகளைச் செய்துள்ளார்கள். அதன் மூலமே அவர் தற்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.

Photo Courtesy:  BMJ Case Reports

இந்தப் பிரச்னை இருந்தாலும், இதுவரை மிகவும் ஆரோக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். சென்ற மாத இறுதியில்தான், தன் மூளையைக் காணோம் என்பது இவருக்கே தெரிந்திருந்தாலும், அதற்குள் அவரை வைத்து ஆராய்ச்சிகள் பல செய்து பார்த்துவிட்டார்கள் மருத்துவர்கள். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஃபின்லே பிரவுன் (Dr. Finlay Brown) அவரது குறைபாடு பற்றி முழுமையான ஆய்வு செய்ய முயன்று கொண்டிருக்கிறார். இதுபோன்று இதுவரை எந்த நிகழ்வுகளும் நடந்ததாகப் பதிவுகள் இல்லாததால், குறிப்புகள்கூட இல்லாமல் சிரமப்படுவதாகவும், இருந்தாலும் நிச்சயம் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அறிவியல் உலகில் அதிசயங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவற்றுக்கான விடைகளைத் தேடி ஆராய்ச்சியாளர்களும் சளைக்காமல் முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க மூளைய காணோமுன்னு போலீஸ்ல புகார் கொடுத்துடுங்க தாத்தா!