miscellaneous

"உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்" - கல்லறை ராஜுவின் கதை

ல்லறை... இனம்புரியாத தனிமை, வெறுமை, திகிலூட்டும் அமைதி என விதவிதமான உணர்வுகளைக் கிளர்த்திவிடும் ஓர் இடம். மயானம், கல்லறை, சுடுகாடு என்றாலே சிலருக்கு பயம் தொற்றிக்கொள்ளும். `சுடுகாட்டில் பேயைப் பார்த்தேன்’, `ஆவியைப் பார்த்தேன்’ என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இதுபோன்ற கதைகள் இப்போது மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், `அமானுஷ்யங்களின் உறைவிடம்’ எனப் பலர் கருதும் கல்லறையிலேயே குடும்பம் நடத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ராஜு, கல்லறைத் தோட்டத்தில் வசிப்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கிளம்பிவிட்டேன். 

சென்னை சென்ட்ரலுக்கு அருகிலிருக்கும் வியாகுல மாதா தேவாலயத்துக்குச் (Vyakula matha church) சொந்தமான கல்லறைத் தோட்டம் அது. இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு முன்பாக மண்டியிட்டு, சாம்பிராணி காட்டி, ஜெபம் செய்து, வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, அருகில் கல்லறை ஒன்றின் மீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர் எழுந்து அமர்ந்தார். 

"தம்பி, கல்லறைக்கு ஜெபம் பண்றதையே ஆச்சர்யமாப் பார்க்குறீங்களே... இறந்து போனவங்களோட ஆவிங்க அவங்களோட கல்லறைக்கே வந்து அஞ்சலி செலுத்துறதை எப்பவாவது பார்த்திருக்கீங்களா?’’ என்று கேட்டு திகிலூட்டினார்.

அப்போதுதான் கல்லறைகள் நிறைந்த மண்ணில் நிற்கிறேன் என்கிற உணர்வே வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆங்காங்கே புதர் மண்டிக் கிடந்தது. சட்டென்று லேசாக ஒரு பயம் பற்றிக்கொண்டது. ``என்னது... ஆவிங்க ஜெபம் பண்ணுமா?’’ என்று அவரிடமே கேட்டேன்.

"ராத்திரி பதினோரு மணிக்கு மேலே வந்து பாரு... தெரியும்’’ என்று சொல்லிவிட்டு, கல்லறைக்குக் கீழே விழுந்து கிடந்த தலையணையை எடுத்தார். மீண்டும் கல்லறையின் மீது வைத்தார். திரும்பப் படுத்துக்கொண்டார். கொஞ்சம் தயக்கத்தோடு, ``கல்லறை ராஜுவைப் பார்க்கணும். அவரு எங்கே இருக்காரு?’’ என்று கேட்டேன்.

``இன்னைக்கு அவரோட அப்பாவுக்கு சாமி கும்புடுறாங்க. கொஞ்சம் நேரத்துல வந்துடுவான், வரலேன்னா அவனோட வீட்ல போய்ப் பாரு’’ என்று சொல்லிவிட்டு, கண்களை மூடிக்கொண்டார். 

நான் மறுபடியும் அந்தக் கல்லறைத் தோட்டத்தை நோட்டம்விட்டேன். உட்காருவதற்குத் தோதான இடம் ஒன்றுகூடத் தென்படவில்லை. வேறு வழியில்லாமல், ஒரு கல்லறையின் மீதே உட்கார்ந்தேன். சற்று தூரத்தில் கூவம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து வீசும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. அந்த துர்நாற்றத்துக்கு நடுவிலேயும் பன்னீர் மணம்!

என் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவராகவோ, என்னவோ... ``இங்கே இப்படித்தான் தம்பி... உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும். எங்களுக்கு இதெல்லாம் பழகிடுச்சு...’’ படுத்திருந்தவர் உடம்பைக்கூடத் திருப்பாமல் குரல் கொடுத்தார். 

தேவாலயத்துக்கு அருகே இருந்த வீட்டிலிருந்து நாற்பது வயதுடைய ஒருவர் அவரது மனைவியுடன் வெளியே வந்தார். அவர் கைகளில் மலர் மாலைகள், கூடவே சாம்பிராணிப் புகை. அவர்கள் இரண்டு கல்லறைகளை அலங்கரித்தார்கள். அவற்றின் முன்னால் நின்று ஜெபம் செய்தார்கள். சாம்பிராணியை தலைக்கு மேலே தூக்கி கல்லறைகளுக்குக் காட்டினார் அவர். அவர்தான் `கல்லறை’ ராஜுவாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். அவர்கள் வழிபட்டு முடிக்கும்வரை காத்திருந்தேன். பிறகு அவரிடம் போய் அறிமுகம் செய்துகொண்டேன்.

``உங்களப் பத்திச் சொல்லுங்க...’’ என்று ஆரம்பித்தேன்.

``என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு தம்பி. இந்த கல்லறைத் தோட்டத்துல கிட்டத்தட்ட 28 வருசமா வேலை பார்த்துகிட்டிருக்கேன்.  எங்களுக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன்...’’

``இந்தக் கல்லறையில் என்ன வேலை செய்றீங்க?’’ 

``கல்லறைக்கு கொண்டுவர்ற பிணங்களை அடக்கம் செய்ய, குழி தோண்டுறதுலருந்து புதைக்கிற வரைக்கும் எல்லா வேலைகளையும் நான்தான் செய்யுறேன். சிலர் என்னை `கல்லறைக்காரன்  ராஜு’னு கூப்பிடுவாங்க; சிலர் `வெட்டியான்’னு கூப்பிடுவாங்க" என்று சிரித்தபடியே கூறியவர், ``இங்கே நின்னுக்கிட்டே பேச வேண்டாம். வாங்க... அமைதியான, நிழலான ஒரு இடத்துல உட்கார்ந்து பேசலாம்" என்று அழைத்துச் சென்றார்.

கல்லறைகளுக்கு நடுவே கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். கிரானைட் கற்கள் பதித்திருந்த ஒரு கல்லறையைக் காட்டி, ``இங்கே உட்கார்ந்து பேசுவோம். எந்தத் தொந்தரவும் இருக்காது" என்று எங்களை உட்காரச் சொல்லி, அவரும் அமர்ந்தார்.
அது, 2006-ம் ஆண்டு இறந்த ஒருவருடைய கல்லறை.  

``இங்கேயே பிறந்து, வளர்ந்து, 28 வருசமா வேலை பார்க்குறீங்க. உங்களுக்கு பயமா இல்லையா?’’

``ஒரு காலத்துல பயம் இல்லாமத்தான் இருந்துச்சு. ஆனா, இப்பல்லாம் ராத்திரியானாலே வெளிய வர பயமா இருக்கு. எத்தனையோ நாள்கள் வாசல்லயே உட்கார்ந்து ஒண்ணுக்கு போயிருக்கேன்... அவ்ளோ பயம்.”

``எப்போலேருந்து இந்த மாதிரி பயப்பட ஆரம்பிச்சீங்க?" 

``முன்னாடியெல்லாம் இங்கே இயற்கையா இறந்தவங்களை மட்டும்தான் புதைச்சிக்கிட்டு இருந்தோம். அப்போல்லாம் பிரச்னை எதுவும் தெரியலை. ஆனா இப்போ, சின்ன வயசுல தற்கொலை பண்ணிக்கிட்டவங்களையெல்லாம் அடக்கம் செய்யறோம். அதெல்லாம்தான் பயத்தை உண்டாக்குது. ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட கடல்ல விழுந்து செத்துப்போன ரெண்டு பேரை அடக்கம் செஞ்சோம். இந்த மாதிரி சின்ன வயசுல செத்தவங்க ரொம்ப தொல்லை கொடுப்பாங்கனு நான் கேள்விப்பட்டிருக்கேன். அதனாலேயே எத்தனையோ நாள் தூங்க முடியாம தவிச்சிருக்கேன் தம்பி.’’

``ஆவி, பேய் மாதிரியான அமானுஷ்ய அனுபவங்களெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா?’’

``என் முதல் குழந்தை பிறந்து ஒரு மாசம் இருக்கும். அப்போ, தீக்குளிச்சு இறந்துபோன ஒரு சின்னப் பையனை இங்கேதான் அடக்கம் பண்ணினோம். உடம்பு வெந்துபோய், பார்க்கவே முடியாத அளவுக்கு அந்தப் பிரேதம் இருந்துச்சு. ராத்திரி வீட்ல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தோம். திடீர்னு நடுராத்திரில ஒரு அழுகுரல் கேட்டுச்சு. யாரோ ரொம்ப தொலைவுல தேம்பித் தேம்பி அழுதா எப்படி இருக்கும், அந்த மாதிரி கேட்டுச்சு. அழற சத்தம் கேட்டதுமே நாங்க எல்லோரும் முழிச்சிக்கிட்டோம். கைக்குழந்தை இருந்ததால நாங்க லைட்ட ஆஃப் பண்ண மாட்டோம். அழுகைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமா எங்க வீட்டை நோக்கி வர்றது மாதிரி இருந்துச்சு. அழுகை சத்தம் கேட்க ஆரம்பிச்சதுலருந்து எங்க வீட்ல இருந்த மூணு நாய்ங்களும் குலைக்க ஆரம்பிச்சுடுச்சுங்க. அழற சத்தம் ஒரே இடத்திலிருந்தே கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாய்களும் விடாம குலைச்சுதுங்க. நாய்ங்க  குலைச்சதுனாலயோ என்னவோ யாரும், எதுவும் எங்களை நோக்கி வரலை. வீட்டுக்குள்ள இருந்த நான், என் பொண்டாட்டி, என் மாமியார் மூணு பேரும் உயிரைக் கையில புடிச்சுகிட்டிருந்தோம். அழற சத்தம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, தூரமாப் போக ஆரம்பிச்சு, மெதுவாக் கேட்டுச்சு. நாய்ங்களும் அந்தச் சத்தம் வந்த திசையில குலைச்சுகிட்டே போச்சுங்க. நான் கதவைத் தொறந்து எட்டிப் பார்த்தேன். பௌர்ணமி வெளிச்சத்துல அன்னிக்கிப் புதைச்சேனே... அந்தப் பையன் உருவம் தூரத்துல நடந்துபோற மாதிரி ஒரு பிரமை. வாழ்க்கையில அந்த ராத்திரியை மட்டும் என்னால மறக்கவே முடியாது தம்பி” இதைச் சொல்லும்போது ராஜுவின் குரலில் சிறிது நடுக்கம்.

``இதே மாதிரி இன்னொரு சம்பவம்... சின்ன வயசுல தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்துபோன பொண்ணு அது. அந்தப் பொண்ணோட உடலை அடக்கம் செஞ்ச அன்னிக்கி ராத்திரி, வீட்டுக்கு வெளியே என் கூட்டாளியோட தள்ளுவண்டியில படுத்திருந்தேன். அப்போல்லாம் வெளியேதான் தூங்குவேன். தூங்கிட்டிருந்த என் மேலே யாரோ உட்கார்ந்து அமுக்கின மாதிரி இருந்துச்சு. என்னால சத்தம் போட முடியலை, மூச்சுவிட முடியலை, எழுந்திருக்க முடியலை. கண்ணைத் தொறந்தா ஒரு பொண்ணு  மாதிரி உருவம் மஞ்சள் கலர்ல பட்டுப்புடவை கட்டிக்கிட்டு, கை நெறைய வளையல் போட்டுக்கிட்டு என்னை அமுக்கிக்கிட்டிருந்துச்சு. அந்தப் பொண்ணோட முகத்தை மட்டும் என்னால பார்க்கவே முடியலை. எங்க வீட்டு நாயி குரைக்கிற சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாங்க அம்மா. அவங்களைப் பார்த்ததும் அந்த உருவம் மறைஞ்சிடுச்சு. அப்புறம்தான் என்னால மூச்சுவிடவே முடிஞ்சுது.”

அவர் பேசிகொண்டிருந்தபோதே தொலைவில் ஒரு நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது.``இங்கே இப்படித்தான் தம்பி. நம்ம கண்ணுக்குத் தெரியாத எதுவோ, நாய்ங்க கண்ணுக்குத் தெரியும்போல...’’ என்று சொல்லி பயமூட்டினார். 

``இந்த இடம் உங்களுக்குப் பாதுகாப்பா இருக்கா?’’

``இறந்து போனவங்களால எந்தப் பிரச்னையும் இல்லை தம்பி. ஆனா பொழுது எறங்குனாப் போதும், நெறையப் பேரு இங்கே வந்து குடிக்கிறாங்க. போலீஸ்கிட்ட கம்ப்ளெயின்ட்கூடப் பண்ணிட்டேன். போலீஸ் ரவுண்ட்ஸ் வர்றப்போ ஓடிப் போயிடறானுங்க. இதுவரைக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. நெறையவாட்டி எங்க வீட்ல பாம்பைப் பாத்திருக்கோம். ஆனா  எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. ஒருநாள் தூங்கிட்டிருந்தப்போ, ஓடிக்கிட்டிருந்த சீலிங் ஃபேன் கீழே விழுந்துருச்சு. என் மூத்த குழந்தையும், ரெண்டாவது குழுந்தையும் எங்களுக்கு நடுவுல படுத்திருந்தாங்க. ஃபேன்,  என் குழந்தையோட காலுக்கு நடுவுல விழுந்திருந்துச்சு. யாருக்கும் எதுவும் ஆகலை. கடவுள் காப்பாத்துனாரா, வேற ஏதாவது சக்தி காப்பாத்திச்சானு தெரியலை. இதுவரைக்கும் எங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.’’

``இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க?’’ 

``நான் ஆறாவது படிச்சுக்கிட்டிருந்தேன். அது, அரையாண்டு பரீட்சை நடந்துகிட்டு இருந்த நேரம்.  பள்ளிக்கூடக் குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்பை திருடுறாங்கன்னு ஒரு வதந்தி பரவிக்கிட்டிருந்தது. அதுக்கு பயந்துகிட்டே படிப்பை நிறுத்தினவன்தான். அப்புறம் அப்பாதான், `வீட்ல சும்மாதானே இருக்கே... என்கூட வந்து சுடுகாட்டுல குழி தோண்டு’னு கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சார். அப்பருந்து இதுதான் என்னோட வேலைனு ஆகிப்போச்சு."

``எத்தனை தலைமுறையா உங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க இந்தத் தொழில்ல இருக்கீங்க?’

``என்னோட பாட்டன், அதாவது என்னோட தாத்தாவோட அப்பா காலத்துலேர்ந்து, நாலு தலைமுறையா இந்த வேலையைச் செஞ்சிகிட்டு இருக்கோம். எங்க அப்பா 98 வயசு வரைக்கும் இந்த வேலைதான் பார்த்தாரு. அவரால முடியாத காலத்துலகூட தண்ணி கொண்டு வந்து கல்லறைகளை சுத்தம் செய்வாரு...’’

``உங்க வருமானம் போதுமானதாக இருக்கா?’’

``சர்ச்சுலேருந்து மாசம் 5,000 ரூபாய் சம்பளமா கொடுக்கறாங்க. தங்கறதுக்கு வீடு கொடுத்திருக்காங்க. அவ்ளோதான். அரசாங்கத்தோட கட்டுப்பாட்டுல இருக்குற கல்லறையில வேலை பார்க்குறவங்களுக்கு மாசம் 15,000 ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்குறாங்க. ஆனா, இந்த கல்லறைத் தோட்டம் சர்ச் கட்டுப்பாட்டுல இருக்குறதால எங்களுக்கு அவ்வளவு சம்பளம் இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட அமைச்சர் ஒருத்தர் இங்கே வந்து பார்த்துட்டு, எங்களுக்கு நல்ல சம்பளம் குடுக்கறதாகவும், எங்க குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்து படிப்புச் செலவை ஏத்துக்கும்னும் சொன்னாரு. ஆனா, இதுவரைக்கும் எதுவும் நடக்கலை. இனியும் நடக்குமானு தெரியலை.’’

``5,000 ரூபாய் சம்பளத்தைவெச்சிக்கிட்டு எப்படி சமாளிக்கிறீங்க?’’

``அடக்கம் பண்ண வர்றவங்க ஏதாவது காசு கொடுப்பாங்க. அதைவெச்சுகிட்டுதான் எங்க குடும்பத்தோட பிழைப்பு ஓடிக்கிட்டிருக்கு. எல்லாரும் நல்லாயிருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, செத்தவங்களாலதான் எங்க பிழைப்பு ஓடுது. எப்படா பிணம் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருக்கவேண்டியிருக்கு. இது ஒரு பொழைப்பா தம்பி?’’

``குழந்தைங்க படிப்பு எப்படிப் போகுது?’’

``நாலு குழந்தைகளும் நல்லாப் படிக்கறாங்க. இங்கே யாராவது வெளிநாட்டுக்காரங்க வந்தா மூத்த பொண்ணுதான்  இங்கிலீஷ்ல பேசி பதில் சொல்லுவா. இவ படிக்கிற ஸ்கூல்ல வேலை பார்க்குற சிஸ்டருங்களே இவ படிப்பைப் பார்த்து ஆச்சர்யப்படுற அளவுக்கு நல்லா படிக்கறா. மத்த குழந்தைகளும் கான்வென்ட், மெட்ரிக்குலேஷன்னு படிக்கறாங்க.’’

``உங்களுக்காக பள்ளிக்கூடத்துல ஃபீஸ்ல எதையாவது குறைச்சிருக்காங்களா?’’

``அதெல்லாம் ஒண்ணுமில்லை தம்பி. `இஷ்டமிருந்தா படிக்கட்டும், இல்லைனா, வேற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சுக்கங்க’னு சொல்றாங்க. கடன் வாங்கித்தான் படிக்கவெச்சுக்கிட்டு இருக்கோம்.’’

``இங்கே கல்லறைகளுக்கு நடுவுல தங்கியிருக்கறதுனால உங்க குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏதாவது இருக்கா?”

`இங்க தனிமையிலேயே இருக்கறதுனால என் குழந்தைங்க ஸ்கூல்ல யாருகூடவும் சரியாப் பேசறதில்லைனு சிஸ்டர்ஸ் சொல்றாங்க. சில நேரத்தில கேலி கிண்டலுக்கு ஆளாகிட்டு வந்து அழுவாங்க...  அப்போ நான் அவங்கள்ட்ட `நீ படிச்சுப் பெரியாளா ஆகிட்டா, அதுக்கப்புறம் உன்னை யாரும் அப்படிப் பேச மாட்டாங்க. அதையெல்லாம் காதுல வாங்கிக்காம நல்லா படி’னு சொல்லுவேன். கல்லறையில தங்கியிருக்கறதனாலயே என் குழந்தைங்ககிட்ட யாரும் நல்லாப் பழக மாட்டாங்க. என் குழந்தைகளுக்கு ஃபிரெண்ட்ஸே இல்லை.’’ - சொல்லும்போதே ராஜுவின் கண்களில் லேசாக நீர் திரள்கிறது.

``உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்காங்களா?”

``என் பொண்ணுங்களைப் பார்க்க பள்ளிக்கூடத்துக்குப் போறப்போ ஒரு நண்பர் கெடச்சாரு. என்கூட உட்கார்ந்து சாப்பிடுவாரு, டீ குடிப்பாரு. ரெண்டு பேரும் பல விஷயங்களை மனம்விட்டுப் பேசுவோம். ஒருநாள் யாரோ ஒருத்தரோட உடம்பை அடக்கம் பண்றதுக்கு வந்தவங்களோட இங்கே வந்திருந்தாரு. என்னைப் பார்த்து, `நீங்க இங்கேதான் வெட்டியான்  வேலை பார்க்குறீங்களா?’னு ஆச்சர்யமாக் கேட்டாரு. அதுக்கப்புறம் அவர் என்னைப் பார்த்தாலும் பேசுறதில்லை. என்கூடப் பொறந்தவங்களே சில நேரத்துல 'வெட்டியான் வேலை பார்க்குறப்பவே நீ இப்பிடி இருக்கியே, வேற வேலை பார்த்தா என்ன செய்வே?’னு குத்திக் காட்டுவாங்க. என் வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சு. என் பிள்ளைங்க வாழ்க்கையாவது நல்லாயிருக்கணும்னு கஷ்டப்பட்டு அவங்களை நல்ல பள்ளிக்கூடமாப் பார்த்து படிக்கவெச்சுக்கிட்டிருக்கேன்...

ஊருக்குள்ள கார்பென்டர், பெயின்டர், கொத்தனார்னு எல்லா வேலைக்கும் அங்கீகாரம் இருக்கு. ஆனா, நாலு தலைமுறையா புனிதமான இந்த 'வெட்டியான்' வேலை பார்க்குற எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. நல்ல சம்பளமும் இல்லை. ராத்திரி முழுக்க எதெதுக்கோ பயந்துகிட்டு, மரியாதை இல்லாம வாழுற வாழ்க்கை என்னோட முடிஞ்சி போகட்டும்.’’ குரலில் வேதனை தொனிக்கச் சொல்கிறார் ராஜு. 

நான் திரும்பி வரும்போது ராஜுவின் வீட்டுச் சுவரை யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். சுவரில் அவரது பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இணைப்பாக, `I.A.S.’, `I.P.S.’, `M.B.B.S.’ என்று அடைமொழிகள்!