miscellaneous

``#SaveShakthi-யைப் பெண்கள் பாதுகாப்புக்கான ட்ரஸ்ட்டா மாத்திட்டிருக்கோம்!’’ - வரலட்சுமி

புடவை, வெஸ்டர்ன் உடைகள், கரகாட்ட உடைகள் என எல்லா உடைகளிலும் தனக்கென தனிப்பட்ட ஸ்டைலைக்கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார், சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில், புதுப்பிக்கப்பட்ட லைஃப் ஸ்டைல் ஸ்டோரைத் திறந்துவைத்தார். டீன் ஏஜ் பெண், நடனக் கலைஞர், போலீஸ் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துபவர். படங்களில் இவரின் ஆடைத் தேர்வு பற்றி நமக்குத் தெரியும். ஆனால், தனிப்பட்ட நபராக வருவின் காஸ்டியூம் சாய்ஸ் எப்படி?

அவரிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அதற்கு, ``கம்ஃபர்ட்டபிளா இருக்கிற உடைகள்தாம் என் சாய்ஸ். டிசைன், பேட்டர்ன், கலர் இது எல்லாத்தையும்விட எனக்கு உடுத்திக்க ஈஸியா இருந்தா அதுதான் என் ஃபேவரிட். அப்படி எனக்கு ரொம்பவே பிடிச்ச டிரெஸ் ஜீன்ஸ்-டீஷர்ட்தான். என்னைப் பொறுத்தவரைக்கும் இது எனக்கு ரொம்ப கம்ஃபர்ட்டபிளான உடை."

எந்த ஒரு நடிகையும் நடிக்க வந்து குறுகிய காலத்துலேயே ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களுள் ஒன்று, `தாரைதப்பட்டை' சூறாவளி கதாபாத்திரம். தன் முதல் படத்தில் பப்ளி மாடர்ன் பெண் தோற்றம். இரண்டாவது படத்தில் அதற்கு முற்றிலும் எதிர்மாறான கிராமத்துப் பெண் தோற்றம். அதிலும், கரகாட்டப் பெண் வேடம். துணிச்சலாய் முன்னின்று, அந்தக் கதையின் உயிர்நாடியாய் வாழ்ந்திருப்பார் வரலட்சுமி. அதில் அவர் உடுத்தியிருந்த உடை, நடிகைக்கான சீரமைப்புகள் ஏதுமின்றி, கரகாட்டக் கலைஞர்களின் அசல் உடையை அணிந்திருப்பார். உடைகள் மட்டுமல்ல, ஒப்பனைகள், பாவனைகள் என நிஜ கரகாட்டப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். அவரிடம், ``துணிச்சலான அந்தக் கதாபாத்திரத்துக்கான உடைகளை அணிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்டேன்.

``என் கதாபாத்திரத்துக்கு அந்த காஸ்டியூம் ரொம்பவே முக்கியம். ஒரு கதாபாத்திரத்துல முழுசா இறங்கிட்டோம்னா அதுவாவே மாறிடணும். அப்படித்தான் எனக்கு அந்த டிரெஸ் போட்டிருந்தபோ இருந்துச்சு. நூறு சதவிகிதம் பெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கிறப்போ, நாம இப்படி இருக்கோம் அப்படி இருக்கோம்னு தோணாது. அதுலயும் நம்ம நாட்டு கலைகள்ல ஒன்றான கரகாட்டத்துக்கான டிரெஸ் அது. எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. பெருமையாவும் இருந்துச்சு."

``உங்க ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்ன?"

``என் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்... ஃபீல் கம்ஃபர்ட். எந்த டிரெஸ்ஸுமே உடுத்திக்க எனக்குக் கஷ்டமா இருந்தாலோ, நம்ம எண்ணமெல்லாம் போட்டிருக்க டிரெஸ் மேலயே போறதுபோல தோணினாவோ அதை நான் செலெக்ட் பண்ணவே மாட்டேன். போட்டுக்கிற உடை உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது."

` `Casting Couch' பிரச்னை திரைத் துறையில் நடந்துகொண்டிருக்கிறது' என்பதை கோலிவுட்டில் தைரியமாக வெளியே சொல்லியவர் வரலட்சுமி. அதை தொடர்ந்து `Save Shakthi' எனும் பிரசாரத்தையும் மேற்கொண்டார். இது, பெண்களுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான தொல்லைகளை உடனுக்குடன் பதிவுசெய்வதற்கும், விரைவான தீர்ப்பு வழங்குவதற்கும் பெரிதும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ``அதுக்கான பெட்டிஷன், சட்ட அமைச்சருக்கும் எல்லா மாநிலங்களின் முதலமைச்சருக்கும் அனுப்பியிருக்கோம். நல்லவிதமா பில்டு பண்ணிட்டிருக்கோம். சொல்லப்போனா, `சேவ் ஷக்தியை' ஒரு ட்ரஸ்ட்டா மாத்திட்டிருக்கோம். முன்னேற்றத்துக்கான மாற்றத்தைப் பார்க்கிறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பெண்கள் பாதுகாப்புக்குத் தேவையான எல்லாமே பண்ணுவோம்" என்று கூறிவிட்டு விரைந்தார் `Bold Queen' வரலட்சுமி.