miscellaneous

''பிரசவத்துக்குப் பிறகு 118 கிலோ... இப்ப 58 கிலோ!" மிஸஸ் குளோப் வென்ற கோவை ஜெயா

``23 வருஷத்துக்கு முன்னாடி, 118 கிலோ வெயிட் போட்டிருந்தேன். நடக்கவே முடியாத நிலை. அப்பறம் பயிற்சி எடுத்து உடம்ப குறைச்சேன். இப்ப 58 கிலோ வெயிட்ல இருக்கேன், அழகுங்கறது உருவம் சம்பந்தப்பட்டது இல்லை. அது எண்ணம் சார்ந்தது" என்று ஒவ்வொரு வார்த்தையும் அளந்து அழகாகப் பேசுகிறார் கோவையைச் சேர்ந்த ஜெய மகேஷ். 

கடந்த ஏப்ரல் மாதம் "உடல் பருமன், பறிபோன பார்வை... மீண்டெழுந்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய பெண்!" என்ற தலைப்பில் இவரைப் பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தோம்!

கலிபோர்னியாவில் நடைபெற்ற, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான, `மிஸஸ் குளோப் கிளாஸிக்' அழகுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு ரன்னர் அப் ஆக மகுடம் சூட்டியுள்ளார் இந்த 49 வயதினிலே. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து, 85 பேர் `மிஸஸ் குளோப் கிளாஸிக்' போட்டியில் கலந்து கொண்டனர். இதில், `மிஸஸ் போட்டோ ஜெனிக்', `மிஸஸ் இந்தியா ஓசன்' பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார் ஜெயா. இவர் ஏற்கெனவே, 2006-ம் ஆண்டில் `மிஸஸ் கோவை', 2016-17-ம் ஆண்டில் `மிஸஸ் இந்தியா' பட்டங்களையும் கைப்பற்றியவர். இவரது சமூகப் பணிகளை பாராட்டி, தென் அமெரிக்கா பல்கலைக்கழகம், சமீபத்தில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ஆணாதிக்கம் எங்கும் பரவிக் கிடக்கும் இந்தச் சமுதாயத்தில், திருமணத்துக்குப் பிறகும், முடங்கிக் கிடக்காமல், சமூக ஆர்வலராகவும், பாடி ஸ்கல்ப்டிங் நிபுணராகவும் வலம் வந்து, பெண்களுக்கு முன் உதாரணமாக தன்னம்பிக்கை டானிக் விதைத்து வருகிறார் ஜெயா.

கலிபோர்னியாவில் மகுடம் சூட்டி, கோவை வந்திருந்த ஜெயாவைச் சந்தித்துப் பேசினோம், ``மிஸஸ் இந்தியா' போட்டியில பட்டம் வாங்கின உடனேயே, `மிஸஸ் குளோப் கிளாஸிக்'கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு வந்தது. இதுல கலந்துக்கிட்ட பலரும் என்னைவிட வயசுல சின்னவங்க. 85 பேர்ல இருந்து 21 பேர ஷார்ட் லிஸ்ட் பண்ணாங்க. பெர்சனாலிட்டி, போட்டோ ஷுட், சைக்காலஜி டெஸ்ட், ஸ்கின் கேர், காஸ்ட்யூம், தனித்திறன், சமூகப் பணி இப்படின்னு பல விஷயங்களை வெச்சுத்தான் என்ன ரன்னர் - அப் ஆ தேர்ந்தெடுத்தாங்க. நான் யாருன்னு, எனக்கு நானே, நிரூபிக்கிறதுக்கான ஒரே வாய்ப்புன்னுதான் இந்தத் தருணத்தை நினைக்கிறேன். 

என் அப்பா போலீஸ் கமிஷனர். அம்மா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு ரெண்டு சகோதரிங்க. நான் வீட்டுக்கு, ரெண்டாவது பொண்ணு. ரொம்ப வாலு. வீட்லயும் என்னை ஸ்ட்ரிக்டா எல்லாம் வளர்க்கல. இதனால, ஒரு பையன் மாதிரிதான் நான் வளர்ந்தேன். என்னோட சைல்ட் வுட் ஃப்ரெண்டு மகேஷ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு, டெலிவரி ஆகும்போது, 58 கிலோல இருந்து, 118 கிலோவுக்கு வெயிட் போட்டுட்டேன். நடக்கவே முடியலை. கண் பார்வையிலேயும் பிரச்னை இருந்துச்சு. குழந்தையைக்கூட சரியா கவனக்க முடியாத ஒரு மோசமான சூழ்நிலை. ஒருகட்டத்துல எனக்கே என்னைப் பிடிக்காமப் போய்டுச்சு. எப்படியாவது அந்தச் சூழ்நிலைல இருந்து வெளிய வரணும்னு நினைச்சேன். மூணு வருஷம் போராடி அந்தப் பிரச்னைகள்ல இருந்து வெளிய வந்தேன். அதுக்கப்புறம், பெண்களுக்கு இருக்கற உடல் ரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கணும்னு நினைச்சேன். மருந்துகள் இல்லாம, ஃபிட்னஸ், கவுன்சிலிங் மூலமாகவே தீர்வு கொடுத்துட்டு இருக்கேன். எங்கனால முடிஞ்ச, சமூக சேவைகளை செஞ்சுட்டு இருக்கோம். என் பொண்ணுக்கு 23 வயசாகுது. சஞ்சனா, மும்பைல படிச்சுட்டு இருக்கா.

திருமணத்துக்கப்புறம், அவ்வளவுதான் இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு பெண்கள் சோர்ந்து உக்காந்திரக் கூடாது.  எல்லா விஷயத்தையும் நம்பிக்கையோடவும், முழு ஈடுபாட்டோடவும் செய்யறப்ப நமக்கான அங்கீகாரம் கிடைச்சுட்டே இருக்கும். நம்ம எல்லாருக்குள்ளும் ஒரு ஃபைட்டர் இருக்காங்க. நாம நம்மை நம்புறப்பதான் அந்த ஃபைட்டர் வெளிய வருவாங்க. நம்மைப் பத்தி நாம மேன்மையா நினைக்கணும். நம்மளை மீறி அதைச் சரியான வழியில பயன்படுத்தினாலே போதும்" என்கிறார்.

வாழ்த்துகள் ஜெயா!