miscellaneous

எம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..!

கோவை சிங்காநல்லூர் பகுதியில் அரவான் கோயிலுக்கு முன்புறம் செல்லும் சிறிய சந்தில் இருக்கிறது அந்த வீடு. கான்ங்கிரீட் காடாக மாறி வரும் கோவையில், தற்போதும் பழைமை மாறாமல் இருக்கிறது அந்தச் சிறிய ஓட்டு வீடு! ஓயாமல் உழைத்து, 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என எளிதில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டுச்சென்றிருக்கும் கருணாநிதி ஒரு காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார்!

1945 ம் ஆண்டு, ஏ.எஸ்.சாமி இயக்கத்தில், `ராஜகுமாரி' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில், பி.யூ.சின்னப்பாதான் அந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. பிறகு, சில காரணங்களால் சின்னப்பா விலகவே, அப்போது துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமும் ராஜகுமாரிதான். இந்தப் படத்திலிருந்துதான் எம்.ஜி.ஆர். - கருணாநிதி இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ஸ்டுடியோவில் உருவான இந்தப் படத்தில் பணியாற்றுவதற்காக கோவை வந்த கருணாநிதி, மனைவி பத்மாவதியுடன் சிங்காநல்லூரில் உள்ள இந்த வீட்டில்தான் குடியேறியுள்ளார்.

பின் நாளில் தன் வாழ்க்கை வரலாறான `நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தில் கருணாநிதி இதுகுறித்து எழுதியுள்ளார். `கோவை சிங்காநல்லூரில், 10 ரூபாய் வாடகைக்கு வீடு பிடித்து, நானும் என் மனைவி பத்மாவதியும் தங்கியிருந்தோம். பத்துக்குப் பத்து அளவுகொண்ட அந்தக் குருவிக் கூட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது' என்று சிங்காநல்லூர் வீடு குறித்து நினைவு கூர்ந்துள்ளார் கருணாநிதி.

``அண்ணாசாமி என்பவர்தான் அந்த வீட்டின் உரிமையாளர். ஒருமுறை, சேலம் ரயிலில் குடியரசு நாளிதழைப் படித்தபடி பயணித்துக் கொண்டிருந்த அண்ணாசாமியை, சாமியார் ஒருவர் சீண்டியிருக்கிறார். அப்போது, அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த கருணாநிதி, அந்த சாமியாரை விரட்டியுள்ளார். அங்குதான், அண்ணாசாமிக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான், கருணாநிதியை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார் அண்ணாசாமி. சுமார், 4 ஆண்டுகள் கருணாநிதி இங்கு தங்கியிருந்தார். இங்கிருந்து, எல்லா இடத்துக்கும் தலைவர் நடந்தே செல்வார். ராஜகுமாரியைத் தொடர்ந்து, `அபிமன்யு' என்ற படத்துக்கும், இங்கிருந்தபடியேதான் தலைவர் வசனம் எழுதினார்.

பிறகு, தி.மு.க தலைவர், முதல்வர் என்று வளர்ந்தாலும், 1993 ம் ஆண்டு அண்ணாசாமியின் மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக அந்த வீட்டுக்குத் தலைவர் வந்தார். அதன் பிறகு, தந்தை வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, தளபதி மு.க. ஸ்டாலின் ஒருமுறை இந்த வீட்டுக்கு வந்துள்ளார். தலைவர் பயன்படுத்திய மேஜை உள்ளிட்ட பொருள்கள் தற்போதும், அதே இடத்தில்தான் இருக்கின்றன. இந்த வீட்டைத் தலைவரின் நினைவாக நூலகமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்" என்று சிலாகிக்கின்றனர் தி.மு.க தொண்டர்கள்.

``தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர், ஆரம்ப காலகட்டத்தில் இங்கு தங்கியிருந்தார் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீட்டை விற்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால், அதைப் பற்றி சிந்திக்கலாம்" என்று அண்ணாசாமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

``கலைஞருக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையில் இருந்தேன். பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்தது. இதனால், தன் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிய கலைஞர், என் வீட்டில் வந்து தங்கினார். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம், அவரை என் பக்கம் இழுக்க முயற்சி செய்தேன். ஆனால், நிலைமை எப்படி ஆயிற்று? நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன்" என்று கருணாநிதியுடனான கோவை வாழ்க்கை குறித்து எம்.ஜி.ஆர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

1975 ம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு, 2010 ம் ஆண்டு கொடிசியா அரங்கில் நடந்த செம்மொழி மாநாடு என்று அரசியல் ரீதியாகக் கோவையை நினைத்து சிலாகிக்கப் பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், அந்த 10 ரூபாய் வாடகை வீடுதான் கருணாநிதியின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது!