miscellaneous

ஸ்மார்ட் சிட்டிக்குள் ஒரு கிராமச் சந்தை! - அசத்திய கோவைவாசிகள்

பளபளக்கும் நெகிழிப் பைக்குள் அடைத்து விற்கப்படும் பொருள்கள்மீது வந்துள்ள அதீத ஆர்வம் காரணமாகவும், கார்ப்பரேட்டுகளின் திணிப்புகள் காரணமாகவும், நம் பாரம்பர்ய மக்கள் இணையும் இடமானது  சந்தை, இப்போது நகரங்களில் குறைந்து, கிராமங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், "நம்ம ஊரு சந்தை" என்னும் பெயரில், சமூக ஆர்வலர்கள் அழகேஸ்வரி, அசோக், ரவீந்திரன், அகிலா மற்றும் பலர் இணைந்து திருப்பூரிலும் கோயம்புத்தூரிலும் நகர மக்களை இணைக்கும் நோக்கத்தோடும், நம்மாழ்வாரின் தற்சார்பு நிலையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் மாதம் ஒருமுறை சந்தையை ஒருங்கிணைந்து, வடகோவை மாநகராட்சிப் பள்ளியில் ஆணையர் விஜயகார்த்திகேயன் உதவியுடன் நடத்தினர்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பரபரப்பாக வேலைசெய்துகொண்டும், எல்லாரிடமும் "சாப்டீங்களா?" என வினவிக்கொண்டும் இருந்த ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான அழகேஸ்வரியிடம் கேட்டவுடன், பளிச்சென ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு "சாப்டீங்களா?" என்றார். "நாங்க, மக்களை மீண்டும் பழைய முறைக்கு எடுத்துச்செல்லப்போகிறோம். நவநாகரிகம் என்னும் பெயரில் நெகிழிப் பைக்குள் அடைத்துவைத்திருக்கும் பொருள்களை எளிதாக வாங்கிச் செல்லக்கூடிய முறையே மக்களை சோம்பேறியாக மாற்றியுள்ளது. இந்த நிலையிலிருந்து  மாற்றி , நுகர்வோரை குறைத்து, உற்பத்தியாளர்களைப் பெருக்கி, பழைய பண்டமாற்று முறைக்குக் கொண்டுசெல்லவே இம்முயற்சி" என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலைக்குள் மூழ்கிவிட்டார். 

விதவிதமான பொருள்களைப் பெரிய பெரிய அங்காடிகளில் மட்டுமே பார்த்துப் பழகிய கோவை நகர மக்கள் இப்போது, 5 மாதங்களாக இயற்கைப் பொருள்களையும் அதன் செய்முறை விளக்கங்களோடு விரும்பி வாங்கினர். "நூறு எலுமிச்சையின் சக்தி... ஆனால் நுரை வராது!" என இயற்கையான அழுக்கு அகற்றிகளை விற்பனை செய்துகொண்டிருந்தார் சித்ரா. வீணாக வீசியெறியும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனமற்ற அழுக்கு அகற்றிகளை வீட்டிலேயே தயாரித்து விற்கிறார். தொடர்ந்து, குவியும் வாடிக்கையாளர்களைச் சமாளிக்கத் தனது பேரக் குழந்தைகளுடன் மீண்டும் வியாபரத்துக்குள் இறங்கிவிட்டார் சித்ரா.

அடுப்பில்லாமல் சமைக்கலாம் வாங்க என்று வாழைப்பூ பசும் பொரியலுடன் வரவேற்றார் படையல் சிவகுமார். இயற்கை பிறந்தநாள் கேக், இயற்கை லட்டு, இட்லி, பீர்க்கங்காய் சாண்ட்விச், புடலங்காய் கட்லெட் என ஐந்நூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்து விற்பதாகவும், பயிற்சி வகுப்புகள் எடுப்பதாகவும் சொன்னவர், அடுத்த உணவை வெண்டைக்காய் வைத்து தயாரிக்கத் தொடங்கிவிட்டார். இஞ்சி , சம்பரம் மாங்காய், பூண்டு, தக்காளி, வெங்காயம் , எலுமிச்சை எனப் பலவகை ஊறுகாய் வகைகளை எல்லாம் "நம்ம வூட்டுலேயே வினிகர் இல்லாம சமைச்சது தானுங்கோ" எனத் தன் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் "பரண் ஊறுகாய்" என்னும் சத்தான, பழைமை மாறா முறையில் செய்வதாகச் சொல்லிக்கொண்டே எல்லா ஊறுகாயையும் வாழை இலையில் வைத்து சுவைக்கத் தந்தார். 

அடுத்து, கலர் கலரான கைவினைப் பொருள்களோடு, "பனையேறிகள் " என்னும் கிராமப்புற பெண்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்திக் கொண்டே, பனை மரங்களின் அருமை பெருமைகளை விளக்குவதே அவர்கள் நோக்கம் எனச் சொன்னார். தாங்கள், "பைகள், பருப்புப் பெட்டி, அரசிப் பெட்டி, அலங்கார கைவினைப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், பனையோலை அழைப்பிதழ்" என பெருமைபொங்கக் காட்டி மகிழ்தார், சௌமியா.

இவற்றுக்கு நடுவில், எம்.என்.சி-யில் இரவு முழுக்க கம்ப்யூட்டரில் வேலைசெய்த கையோடு, காய்கறிகளை அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார், ரமேஷ் ராஜு. ''தூங்கக்கூட நேரம் குறைவாக இருக்கும் நிலையில், தனது வாடிக்கையாளர்களின் ஆர்வமே தனது மகிழ்ச்சி எனவும், அடுத்ததாக இயற்கை உணவளித்து நாட்டுகோழி முட்டை தயாரிப்பில் ஈடுபடப் போகிறேன்'' எனக் கூறினார் சபாஷ் ஐ.டி ராஜு.

ரசாயனம் கலக்காத செம்பருத்தி ரசம், மணக்கும் மூலிகைத் தேநீர், இயற்கை இனிப்பு வகைகள், நம்மாழ்வார் புத்தகங்கள் , மருத்துவ அரங்கம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் , இன்னொருபுறம் வரிசைகட்டும் வாடிக்கையாளர்கள் என கோவைக்குள் ஒரு குட்டி கிராமச்சந்தை புகுந்து சந்தோஷம் தந்தது.