`நீட் வேண்டாம்; நீர் வேண்டும்!’ - கடலூர் போராட்டத்தில் ஒலித்த குரல்

ஜி.சதாசிவம்
மோதல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் உரிமைக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முன்னதாக, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடலூரிலிருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை நோக்கிச் செல்லும் இருசக்கரவாகனப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.
வாகனப் பேரணிக்கு இயக்குநர் கௌதமன் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், காவல்
துறையினர் வாகனப் பேரணிக்கு அனுமதி தரவில்லை, ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி தந்தனர். இதனைத் தொடர்ந்து
மஞ்சக்குப்பம் மைதானத்தில் `நீட் வேண்டாம், நீர் வேண்டும்’ என்ற தலைப்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இயக்குநர் வ. கௌதமன் தலைமை தாங்கினார். இதில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி மகேந்திரன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ், இயக்குநர்கள்
வீ.சேகர், வெற்றிமாறன், பேரரசு,வேலுபிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் வ. கௌதமன் பேசும் போது, ``தமிழகத்தில் வரும் 6ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. இந்தத் தேர்வு நடக்காது. அப்படி மீறி நடந்தால் தேர்வு நடைபெறும் மையத்தை முற்றுகையிடுவோம்’’ என்றார். இயக்குநர் பாரதிராஜா
பேசும்போது, ``இங்கு ஒரு பிள்ளை அழுகிறது, நீங்கள் காதுகுத்து விழாவிற்குச் செல்கிறீர்கள். நாங்கள் தண்ணீர் கேட்டால்
கர்நாடகா தேர்தலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நம்மைப் பிடிக்கவில்லை, மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள்.
அதான் பிடிக்கவில்லையே, எங்களைத் தனித்து விட்டுவிடுங்கள் என்று கேட்கிறோம். நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு
தனி நாடு கேட்டோம். இப்பொழுது மீண்டும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன கேட்கிறோம்,
ஒரு தமிழ் தேசம், ஒரு தமிழ்க் கொடிதான் கேட்கிறோம். இங்கு ஒரு சுடர் ஏற்றப்பட்டுள்ளது. இந்தச் சுடர் நன்றாகக்
கொழுந்துவிட்டு எரிந்து தமிழ்நாட்டில் குப்பைகளை எரித்துச் சுத்தப்படுத்தும். தமிழக மக்கள் தேசியக் கட்சிகளைப்
புறக்கணித்து மாநில கட்சிகளை ஆதரிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார். 

அதன்பின்னர் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``ஒரு மருத்துவரை உருவாக்க அரசு ரூ.11 லட்சம் செலவு செய்கிறது. நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் மருத்துவர்களிடம் சேவை மனப்பான்மை இருக்காது கல்வி, மருத்துவம்,போக்குவரத்து போன்ற சேவைகள் அரசு வசம் இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு அரசிற்கு என்ன வேலை. உலகத்திலேயே தனித்து இயங்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மொழிதான். நீட் தேர்வு மூலம் அனைவரையும்
மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் படிக்கவைத்து மறைமுகமாக இந்தி திணிக்கப்படுகிறது.

நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் உள்ள 24 மருத்துவக் கல்லூரியையும் பூட்டுவோம். நீட் தேர்விலிருந்து விலக்குக் கொடு இல்லையெனில் விலக்கி விடு, காவிரியில் தண்ணீர் கொடு இல்லையெனில், தனித்து விடு. தண்ணீர் தராவிட்டால் ஒரு யூனிட்
மின்சாரத்தைத் தர மாட்டோம். முட்டுக்கு எதிர் முட்டு, வெட்டுக்கு வெட்டுதான் தீர்வு. மத்திய அரசு நம்மைப்
புறக்கணித்தால், நாம் வரும் தேர்தலில் அவர்களைப் புறக்கணித்துப் பாடம் புகட்டுவோம்’ என்று பேசினார். பின்னர் நீட் தேர்வை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. 

SCROLL FOR NEXT