gods

பீமனைக் காத்த தர்மரின் நீதி! - இரங்கேச வெண்பா ஞானநூல் விளக்கும் கதை!

ரளவுக்குமேல் செல்வம்-சொத்து என்று இருந்துவிட்டால், அலட்சியமும் மிதப்பும் வந்துவிடும். அதுவும் அளவில்லாமல் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டாம். எங்கு எது இருக்கிறது என்பதே தெரியாது. உலக அளவில் அப்படிப்பட்ட பெரும் பணக்காரா்கள், தமிழா்களாகிய நாம்தாம். ஞானச்செல்வமாகிய சொத்துகள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன. அவற்றின் உரிமையாளா்களான நமக்கு, அவற்றின் அருமை, பெருமை தெரிவதில்லை. இதன் காரணமாகவே, அளவில்லாத அருந்தமிழ் நூல்கள் பல அழிந்துபோய்விட்டன.

உரிமை கொண்டாடாத சொத்துகளை, யார் யாரோ உரிமை இல்லாதவா்கள் அனுபவிப்பதைப்போல, நம்மால் கவனிக்கப்படாத பற்பல தமிழ் நூல்கள், அயல்நாட்டுக்காரா்களால் வேற்று மொழியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. அந்த நூல்களை அவா்கள் வியந்து பாராட்டி அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வியக்கவேண்டிய அப்படிப்பட்ட நூல்கள் இன்னும் பல, இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. அப்படி, திருக்குறளை அடிப்படையாகவைத்தே ஏராளமான நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த நூல்களின் அமைப்பே அபூா்வமாக இருக்கும்.

ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகள் கொண்டதாக இருக்கும். அவற்றின் பின்னிரண்டு அடிகளில் ஒரு திருக்குறள் அப்படியே முழுமையாக இடம்பெற்றிருக்கும். பாடலின் முற்பகுதியில், திருக்குறள் கருத்தினை எளிமையாகப் பதியவைக்கும் இதிகாச-புராண-காப்பிய நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். நல்லொழுக்கத்தைக் கூறும் கதைகளும் திருக்குறளுமாக இணைந்து, பாடல் வடிவில் அற்புதமான முறையில் உருவான நூல்கள் அவை.

ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வொரு திருக்குறளாக 133- திருக்குறளும், அதை விளக்கும் 133-கதைகளும் அந்த நூல்களில் இடம்பெற்றிருக்கும். அந்தமுறையில் உருவான சில நூல்களில் 'இரங்கேச வெண்பா' என்பது ஒன்று. பிறசை சாந்தக் கவிராயர் என்னும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூல் இது.

திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் திருவரங்கநாதரை முன்னிலைப்படுத்திப் பாடிய பாடல்களாக இந்த நூல் அமைந்துள்ளது. அதிலிருந்து ஒருகதையும் அதற்கு அடிப்படையாக அமைந்த திருக்குறளும் இதோ!

தா்மா் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார். யாகசாலையைத் தூய்மை செய்வதற்காக அவா் பீமனை அழைத்து, " பீமா! நீ போய் புருஷாமிருகத்தை அழைத்து வா!" என ஏவினார். புருஷா மிருகம் என்பது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. புதுமனைப் புகுவிழாவின்போது, பசு மாட்டையும் கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்கிறோமல்லவா? அதுபோல, அந்தக் காலத்தில் யாகசாலையில் புருஷா மிருகத்தை உலாவரச் செய்வார்கள். அதை முன்னிட்டே தா்மா், புருஷா மிருகத்தை அழைத்து வருமாறு பீமனை ஏவினார்.

பீமன் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான். புருஷா மிருகம் ஒப்புக்கொண்டது. ஆனால் ஒரு நிபந்தனை விதித்தது. "பீமா! நான் உன் பின்னால் வருகிறேன். ஆனால், உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் (ஏறத்தாழ 60 கி.மீ.) இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி குறைந்தால், நான் உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன். இதற்கு நீ ஒப்புக்கொண்டால், நான் உன்னுடன் வருவேன்" என்றது புருஷா மிருகம்.

பீமன் ஒப்புக்கொண்டான். புருஷா மிருகம்,"சரி! பீமா! நீ முன்னால் ஓடு! நீ நான்கு காத தூரம் தாண்டியதும் நான் இங்கிருந்து புறப்படுகிறேன்" என்றது. மிருகமாக இருந்தாலும் என்ன ஒரு நியாயம்!

ஓட்டப்பந்தயம் தொடங்கியது. புருஷா மிருகத்துக்கு ஒரு பழக்கம் உண்டு.எங்காவது சிவலிங்கத்தைப் பார்த்தால் சிவபூஜையை முடித்துவிட்டுத்தான் அது புறப்படும். அந்தத் தகவலை ஏற்கெனவே அறிந்திருந்த பீமன், சில சிவலிங்கங்களைத் தயாராகவைத்திருந்தான். பீமனும் புருஷா மிருகமுமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

வேக வேகமாக ஓடிய புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது. அதைப் பார்த்த பீமன், புருஷா மிருகத்தின் பார்வையில்படும்படியாக, ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு ஓடினான். புருஷா மிருகமும் பூஜையை முடித்துவிட்டு, பிறகு ஓட்டத்தைத் தொடா்ந்தது. இப்படி அடிக்கடி நடந்தது.

கடைசியில் பீமன் வெகு வேகமாக ஓடி, தன் எல்லைக்குள் ஒரு காலை வைத்தான். அடுத்த கால் எல்லைக்கு வெளியே இருந்தது. பின்தொடா்ந்து ஓடிவந்த புருஷா மிருகம், எல்லைக்கு வெளியே இருந்த பீமனின் ஒரு காலைப் பிடித்துக்கொண்டு,"பீமா! உன்னைப் பிடித்துவிட்டேன். இனி நீ எனக்கு உணவாகவேண்டியதுதான்" என்றது.

பீமனோ அதை மறுத்து வாதாடினான். முடிவாக, தா்மரிடம் போய்ச் சொல்லலாம்.அவா் தா்மம் தவற மாட்டார். அவா் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம் என்று முடிவானது. அதன்படியே தா்மரிடம் போய்ச் சொன்னார்கள்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த தா்மா், " பீமா! உன் ஒரு கால், புருஷா மிருகத்தின் எல்லையில் இருக்கும்போது, அது உன்னைப் பிடித்துவிட்டதால், உன் உடலின் பாதிப் பகுதியைக் கூறாக்கி, புருஷா மிருகத்திடம் கொடுத்துவிட வேண்டும்" எனத் தீா்ப்பு வழங்கினார்.

சொந்தத் தம்பியாக இருந்தாலும், அவன் பக்கம் பட்ச பாதமாகத் தீா்ப்பு வழங்காமல், தா்மநெறிப்படி நடந்துகொண்ட தா்மரை அனைவரும் பாராட்டினார்கள். தா்மப்படி நடந்துகொண்ட தா்மரைப் பாராட்டிவிட்டு, புருஷா மிருகம் மறைந்தது.

தா்மரின் நடுநிலை தவறாத தன்மை, பீமனின் உயிரைக் காத்தது.

நடுநிலை தவறுவதால் வரும் செல்வமோ, உயா்வோ, மேன்மையோ... எதுவாக இருந்தாலும் சரி! அதை விட்டுவிட வேண்டும். நடுநிலை தவறக் கூடாது எனத் திருக்குறள் கூறுகிறது. அந்தத் திருக்குறளையும் அதற்கு உண்டான கதையையும் நான்கே வரிகளில் ஒரு பாடல் சொல்கிறது.

இரங்கேச வெண்பா எனும் நீதி சூடாமணி சொல்லும் அந்தப் பாடல் !

`வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி

ஈதல் அழகு என்றான் இரங்கேசா - ஓதுங்கால்

நன்றே தரினும் நாடு இகந்து ஆம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.’ (நீதி சூடாமணி-12ம் பாடல்)

சாஸ்திரம் தவறாத தா்மா், தன் முயற்சியில் மனம் தளராத பீமனின் நடவடிக்கைகள், விலங்காக இருந்தாலும் புருஷா மிருகத்தின் நீதி - நோ்மை, தம்பியாக இருந்தாலும் நீதி தவறாத தா்மரின் தீா்ப்பு எனப் பல செய்திகளையும் இந்தப் பாடல் விளக்குகிறது.