திருவள்ளுவர் தினத்தில் மயிலாப்பூர் ஆலயத்தில் திருவிழா..!

மு.ஹரி காமராஜ்
பல்சுவை

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத வள்ளுவப் பெருந்தகையின் பிறந்த இடம் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் பின்புறமாக உலகப் புகழ் பெற்ற வள்ளுவரின் அவதாரத்தலம் அவரது கோயிலாக அமைந்துள்ளது. வள்ளுவர், வாசுகி தம்பதியருக்கு தனித்த அழகிய சந்நிதியும் வள்ளுவர் தோன்றிய இலுப்பை மரத்தின் தண்டுப்பகுதியும் இங்கு அமைந்துள்ளது. உலகெங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களின் போற்றுதலுக்குரிய தலமான திருவள்ளுவரின் ஆலயத்தில் வரும் ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 10 அளவில் கடவுள் வாழ்த்தும் போட்டிகளும் நடக்க உள்ளது. `வள்ளுவப்பெருந்தகை பெரிதும் வலியுறுத்துவது தனிமனித மேம்பாடா சமூக மேம்பாடா' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது. அன்றிரவு 7 மணி அளவில் வள்ளுவப்பெருமான், வாசுகி அம்மையார் சிறப்பு வீதி உலாவும் மேளதாளங்கள் முழங்க நடைபெற உள்ளது.

தமிழரின் தனிப்பெரும் தெய்வப் புலவரான பொய்யாமொழிப் புலவர் ஐயன் வள்ளுவரை அவரது தினத்தில் சென்று தரிசித்து பலன் பெறுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

SCROLL FOR NEXT