temples

"மருத்துவம், இலக்கியம், சித்தர் வாக்குனு ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடிக்கணும்!’’ - 73 சுவடிகளைப் பதிப்பித்த தாமரைப்பாண்டியன் #VikatanExclusive

லைச்சுவடிகள்... நமது பாரம்பர்யத்தின் அடையாளங்களைச் சொல்லும் காலக்கண்ணாடி. தமிழர்களின் கலை, கலாசாரம், வாழ்வியல் என ஓலைச்சுவடிகளில் இடம்பெறாத விஷயங்களே இல்லை. காலகாலமாக பனையோலைகளில் எழுதப்பட்டு வந்த காவியங்கள் யாவும் கரையான்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் இரையாகிப்போன பின்னரும் இன்னமும் நம்மிடையே கொஞ்சம் மிஞ்சியுள்ளன. அரசு ஆவணக் காப்பகங்களிலும், நூலகங்களிலும் அலங்காரமாக வீற்றிருக்கும் இந்த ஓலைச்சுவடிகள் மறைத்து வைத்துள்ள விஷயங்கள் எத்தனையோ இருக்கலாம்.

அவற்றையெல்லாம் தேடித்தேடி எடுத்து பதிப்பித்து வருகிறார் ஒரு பேராசிரியர். அவர் பெயர் தாமரைப் பாண்டியன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'ஓலைச்சுவடி புலம்' என்ற துறையில் பணியாற்றுகிறார். ஓலைச்சுவடிகள் சேகரிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர். 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அதில் 73 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்துள்ளார். 

"திருநெல்வேலி மாவட்டம், சிவசுப்ரமணியபுரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். நாகர்கோவிலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளை முடித்தேன். நான் பிறந்த பகுதிகளில் நாட்டார் தெய்வங்களும், பழைமையான வரலாற்றுத் தகவல்களும் நிறைந்து கிடக்கின்றன. அதுவே, மக்களைக் குறித்த தேடல்களை நோக்கித் தள்ளியது. தென்தமிழகம் எங்கும் நாடோடி போல திரிந்தேன். கிடைத்ததை உண்டு, கோயில்களில் படுத்து வாழ்ந்தேன். அப்போது திரட்டிய நாட்டார் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் என்னை எழுதத்தூண்டின. திருச்சி, நாமக்கல், கோவை போன்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நாள்களிலும் எனது களப்பணியும் எழுத்துப்பணியும் தொடர்ந்தது. அந்த வேளையில் பல அரிய வகையான ஓலைச்சுவடிகளும் எனக்குக் கிடைத்தது. அவற்றைப் படிக்கத் தெரியாமல் ஆரம்பத்தில் நான் திணறினாலும், மெள்ள மெள்ள எடுத்துக்கொண்ட பயிற்சியால் படிக்கவும் தொடங்கினேன்'' என்றவரிடம் அவருடைய  புத்தகங்கள் குறித்துக் கேட்டோம்.

''முனைவர் தி.ராஜரத்தினம் உதவியோடு நான் பிரதி எடுத்து எழுதிய முதல் ஓலைச்சுவடி பாடல் புத்தகம் 'வல்லாள மகராஜன் கதை'. அந்தப் புத்தகம் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. ஊர்தோறும் அலைந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டினேன். உண்மையை சொல்லப்போனால் நான் முனைவர் பட்டம் பெறும்வரை ஓலைச்சுவடிகளைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அப்படித்தான் இன்று வரை நமது பாடத்திட்ட முறைகள் இருக்கின்றன. என் சிறுவயதில் கிராமங்களில் பெரியவர்கள் இறந்து போனால், அவர்களோடு அவர்கள் எழுதிய ஓலைச்சுவடிகளையும் எரிப்பது சடங்கு. அப்படி எத்தனை சாவுகளையும், எரிந்து போன சுவடிகளையும் பார்த்திருக்கிறேன் தெரியுமா. ஓலைச்சுவடிகள் அல்ல அவை, நமது முன்னோர்களின் அறிவுத் திறனையும் கலைத்திறனையும் பறைசாற்றும் பொக்கிஷங்கள். 

ஒருமுறை எனது உறவினரிடமே ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருப்பதை அறிந்து அவரிடம் படியெடுக்கக் கேட்டேன். வயதான அவரும் அறுவடை வேலை முடிந்ததும் தருவதாகச் சொன்னார். நான் எனது பணியிடத்துக்குச் சென்று விட்டு 25 நாள்கள் கழித்து அந்த ஊருக்குச் சென்றேன். அவர் மறைந்து போய், 3 நாள்கள் ஆகிவிட்டதாகவும், அதன்பிறகு அந்த ஓலைச்சுவடிகள் பக்கத்தில் இருந்த பாழுங்கிணற்றில் போட்டு விட்டதாகவும் சொன்னார்கள். துடித்துப்போன நான் உடனே பாழுங்கிணற்றில் கயிற்றின் உதவியால் இறங்கினேன். சொத சொதவென இருந்த சேற்றில் ஓலைச்சுவடிகள் யாவும் ஊறி வீணாகிவிட்டது. அன்றைக்கு நான் வெகுநேரம் அழுதேன். எத்தனை ஆண்டுகள் அவரது முன்னோர்கள் எழுதிய குறிப்புகள் அவை. எல்லாமே எத்தனை எளிதாக அழிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதே வேலையாக இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்தேன். அதற்கேற்றவாறு எனது வேலையைத் தேர்ந்தெடுத்தேன்''

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓலைச்சுவடி துறையில் எனக்குப் பணி கிடைத்தது. அது கடவுள் எனக்களித்த வரம். இதுவரை 73 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து, 23 புத்தகங்கள் எழுதியுள்ளேன். மக்களிடையே இருக்கும் ஓலைச்சுவடிகளில் கொஞ்சமே நாம் மீட்டெடுத்து இருக்கிறோம். அதுவே லட்சக்கணக்கில் நம்மிடமிருந்து வருகிறது. அதில் வெறும் 7 % மட்டுமே இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சார்புள்ள நூலகங்கள், ஆவணக் காப்பகங்களைத் தாண்டி பல லட்சம் ஓலைச்சுவடிகள் தனியார் வசம் உள்ளன. அவற்றை உடனடியாகத் திரட்ட வேண்டும். மருத்துவக் குறிப்புகள், கலை, கலாசாரப் பதிவுகள், அகராதிகள், நிகண்டுகள், ஜோதிடம், கணிதம், வரலாறு, கூத்துப்பாடல்கள், வாழ்வியல் சான்றுகள் என அரிய பொக்கிஷங்கள் யாவும் ஓலைச்சுவடிகளில் ஒளிந்திருக்கின்றன. அதை அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறோம். வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு ஓலைச்சுவடிகள் நம்மிடம் உள்ளன. அவற்றை திரட்டும் பணியை விட, இருக்கும் லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியை வேகமாகச் செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக ஓலைச்சுவடிகள் குவிந்திருக்கும் நூலகங்களும், ஆவணக் காப்பகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டுமொத்த எண்ணிக்கை அறியப்பட வேண்டும். ஓலைச்சுவடிகள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் அரசு செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கின்றன. ஓலைச்சுவடிகளைப் படிக்கத் தெரியாத, அதன் பெருமைகளை அறிந்துகொள்ளாத சந்ததிகளைத்தான் இன்று கண்டு வருகிறோம்'' என்று ஆதங்கத்துடன் பேசுகிற தாமரைப்பாண்டியன் ஓலைச்சுவடிகள் உள்ள நூலகங்கள் பற்றிய தகவல்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

''சென்னை அண்ணா நூலகத்தில் மட்டுமே 75,000 - க்கும் மேலான ஓலைச்சுவடிகள் உள்ளன. இன்னும் சரஸ்வதி மஹால், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், காஞ்சி சங்கரா பல்கலைக் கழகம், மதுரைப் பல்கலைக்கழகம் என்று பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை யாவும் பதிப்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கவேண்டும். தற்போது காலியாக உள்ள இடங்களையும் நிரப்ப வேண்டும். தற்போது தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பணியாற்றும் புலவர் மணிமாறன்தான் தனி ஒருவராக இந்தப் பணியினை செய்து வருகிறார். அவரால் எத்தனை ஓலைகளைத்தான் பதிப்பிக்க முடியும். ஓலைச்சுவடிகளுக்கு என்று தனியாக ஒரு பல்கலைக் கழகமே ஆரம்பிக்கலாம். அத்தனை விஷயங்கள் இதில் உள்ளன. பட்டுப்புடைவையைக்கூட வீடு வீடாக வாங்கும் இந்த நேரத்தில் தென்மாவட்டங்களில் மக்களிடையே இருக்கும் அரிய ஓலைச்சுவடிகளை அரசே நல்ல சன்மானம் கொடுத்து வாங்கலாம். இதனால் ஓலைச்சுவடிகளைக் கடத்தும் கும்பலிடம் இவை போகாமல் தடுக்கப்படும். மூடத்தனத்தின் பேரால் அழிக்கப்பட்ட பல லட்சம் ஓலைகளைத் தாண்டி இன்னும் சிலமட்டுமே நம்மிடம் உள்ளது. மருத்துவம், மரபு, இலக்கியம் என அவற்றிலும் எத்தனையோ அரிய பல விஷயங்கள் இருக்கலாம். எனவே, இருக்கும் சில ஓலைச்சுவடிகளையும் தேடிப்பிடித்து, புத்தகமாகப் பதிப்பிக்கவேண்டும்.

பழம்பெருமை வாய்ந்த இந்த ஓலைச்சுவடிகளைக் காக்க அதைப்பற்றிய விழிப்பு உணர்வும், பாடத்திட்டமும் மாணவர்களிடையே கொண்டு வரவேண்டும். ஓலைச்சுவடிகளைப் படிக்கும் முறையை கொண்டு வரவேண்டும். எங்கெங்கோ மறைந்திருக்கும் ஓலைச்சுவடிகளைத் திரட்டி படியெடுக்க வேண்டும். நூலாகப் பதிப்பிக்க வேண்டும். அழிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் மிஞ்சி இருப்பவற்றை காக்க வேண்டும். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்..." என்கிறார் தாமரைப்பாண்டியன்.