temples

பூட்டு காணிக்கை வாங்கும் அய்யன் திருமாளிகை முனியப்ப சாமி!

மிழக கிராமங்களை நோக்கி நாம் எங்கு பயணித்தாலும், ஒவ்வோர் ஊரின் எல்லையிலும் அந்த ஊரின் காவல் தெய்வங்கள் காத்து நிற்பதை பார்க்கலாம். அரிவாளுடன் நிற்கும் பிரமாண்டமான காவல் தெய்வங்கள், தீயவர்களைக் குதிரைகளில் துரத்திச்செல்லும் கருப்பண்ணசாமி சிலைகள் எனப் படை வீரர்களுடன் அவை நம்மை வரவேற்கும். இந்தக் காட்சி தமிழகத்து கிராமங்களில் எங்கு நுழைந்தாலும் காணக்கிடைக்கும். சேலம் மாநகரிலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் இருக்கிறது, அய்யன் திருமாளிகை என்னும் கிராமம். சேலம் கலெக்டர் அலுவலகம் இங்குதான் அமைந்துள்ளது. இதன் எதிர்புறத்தில் அமைந்துள்ளது பூட்டு முனியப்பன் கோயில். 

'என்னது பூட்டு முனியப்பனா?' 

"முனியப்பனுக்குப் பூட்டு முனியப்பன் என்று பெயர் வந்தது எப்படி?" 

கோயிலின் பூசாரி அர்ஜுனனிடம் கேட்டோம். 

 ''நமது தினசரி வாழ்க்கை அவசரகதியில் இயங்கினாலும், நமது உடைமைகளைப் பாதுகாக்க நாம மறக்கறதில்ல. திருடர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றிக்கொள்வதற்காக திண்டுக்கல் பூட்டை வாங்கிப் பூட்டுவோம். அதன்பிறகே நாம் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வோம். அப்படிப் புறப்பட்டால்தான் நமக்கு நிம்மதி. அப்போதான் மனதில் ஒரு தைரியம். 

இதேமாதிரி,  நம்முடைய கஷ்டங்கள், துயரங்கள், பிரச்னைகள் எல்லாவற்றையும் பூட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால்..? ஆஹா! கேட்கவே ஆனந்தமாக இருக்கிறதே. அப்படி ஒரு பூட்டு எங்குகிடைக்கும் என்றுதானே நாம் தேடுவோம். அதுதான் நம்ம சேலம் பூட்டு முனியப்பன். 

சுமார் 150 வருஷங்களாக, ஆலாங்கொட்டை கிராமத்தின் காவல் தெய்வமாக வீற்றிருப்பவர்தான் இந்த முனியப்பன். கண்களை மூடியபடி தியான நிலையில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு முறை பக்தர் ஒருவர், அவருடைய துயரத்தைப் போக்கும்படி  வேண்டிக்கொண்டு ஒரு பூட்டை அங்குள்ள வேலியில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார். சில நாள்களுக்குப் பின்பு திரும்பிய அந்த பக்தர், தன் துயரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகக் கூறி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். 

அன்று முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இந்தக் கோயிலுக்கு வந்து குவியத் தொடங்கினர். பூட்டுப்போட்டால் பிரச்னைகள் தீரும் என்று அனைவரும் அங்குள்ள வேலிகளில் வேண்டுதல் பூட்டுகளைப் போட ஆரம்பித்தனர். 

முதலில் மரத்தடியில் மட்டுமே இருந்த முனியப்பன் கோயில் படிப்படியாக விரிவாக்கம் பெற்றது. வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வரத்தொட ங்கினர்" என்கிறார் அவர். 

இந்தப் பூட்டு வேண்டுதலை எப்படி மேற்கொள்ளுவது?'' 

'' முதலில்,  நீங்கள் வாங்கிக்கொண்டு செல்லும் பூட்டை முனியப்பனிடம் வைத்து பூஜை செய்து உங்களது துயரம் தீர பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். பிறகு பூஜித்த பூட்டை அங்குள்ள வேலிகளில் போட்டு பூட்ட வேண்டும். தேவையானால், பூட்டுக்கு அடையாளம் வைத்துக் கொள்ளலாம். சாவியை எடுத்துக்கொண்டு திரும்பிவிட வேண்டும்.

 உங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு கோயிலுக்குச் சென்று பூட்டை அடையாளம் கண்டு திறக்கவேண்டும். வேண்டுதலுக்காக கிடா, கோழி போன்றவற்றைக் கொடுப்பதாகவோ அல்லது பொங்கல் வைப்பதாகவோ வேண்டியிருந்தால் அதை நிறைவேற்றலாம். 

பிரச்னைகள் தீர்ந்தபிறகு, திறந்த பூட்டுகளைப் போடுவதற்கு தனியாக தொட்டி கட்டப்பட்டுள்ளது. நல்லபடியாக அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறிய பிறகு, பூட்டை கோயிலில் உள்ள தொட்டியில் போட்டுவிட்டால் போதும்..."

 "ஒரு வேலை பூட்டை அடையாளம் காண இயலவில்லை என்றால், என்ன செய்வது?" 

"அதற்கும் வழி உண்டு. உங்களது சாவியை மட்டும் தொட்டியில் போட்டுவிட்டால் போதும். பூட்டு தவிர இந்த முனியப்பனுக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. குடிகாரர்களை இங்கு கூட்டிவந்து முனியப்பன் முன்னால் நிற்கவைத்து, 'இனி குடிக்க மாட்டேன்'  என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிச்  சத்தியம் செய்த பலர் குடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 

முனியப்பனிடம் பூ  போட்டு வாக்கு கேட்க விரும்புகிறவர்கள், காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இங்கு வந்து கேட்டுச் செல்லலாம்" எனக் கூடுதல் தகவலும் தருகிறார் அர்ஜூனன்.