temples

அரிச்சந்திரன் காசு, கறி சோறு, மாசான சாமி ஆட்டம்... களைகட்டும் கட்டை ஏறும் பெருமாள் சாமி வழிபாடு!

நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டுக் களம் விரிவானது. இறப்பைக் கண்டு அஞ்சும் மனிதன் சுடுகாட்டுத் தெய்வத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்புதான். தென் மாவட்டங்களில் சுடலை மாடனும், மாசான சாமியும் பலதரப்பட்ட மக்களால் வணங்கப்படுவதை இதற்குச் சான்றாகக் கூறலாம். திருநெல்வேலி மாவட்டம் நாட்டுப்புறத் தெய்வங்களின் விளைநிலமாக உள்ளது. இம்மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது சிவசுப்பிரமணியபுரம் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கன்குளம் எனும் ஊரின் கிழக்குப் பக்கத்தில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  கட்டை ஏறும் பெருமாள் சாமி முறுக்கு மீசையும் கையில் அருவாளுமாக அச்சுறுத்தும் விதமாக இருக்கிறார். அதனையடுத்து, பேச்சியம்மன் சிலை. கோயிலின் வெளிப்பகுதியில், தெற்குப்பக்கம், வடக்குப்பார்த்த வண்ணம் காலசாமி பீடமும் கிழக்குப்பக்கம் மேற்குப்பார்த்த வண்ணம் மாசான சாமி கற்சிலையும் உள்ளன. மாசான சாமி சிலை முன்பு மயானக் குழி ஒன்றும் மூடியநிலையில் இருக்கிறது.

கட்டை ஏறும் பெருமாள்சாமி கோயிலின் தோற்றம்குறித்து இவ்வூரில் வாழும் மக்களிடம் இரண்டு வாய்மொழிக்கதைகள் உள்ளன. 
“இவ்வூரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தெங்கம்புதுர் என்ற ஊரில் பெண் எடுத்திருந்தார். அவர் தனது மனைவி ஊரில் நடைபெற்ற மாசானசாமி கொடைவிழாவில் கலந்துகொண்டார். கொடைவிழா முடிந்த அன்று, கோயிலில் வழங்கப்பட்ட கறிச்சோறைப் பொதிந்து எடுத்துகொண்டு ஊருக்குத் திரும்பினார். கறிச்சோற்றுடன் மாசான சாமியும் கட்டை ஏறும் பெருமாள்சாமியும் பேச்சியம்மையும் உடன் வந்தனர். உடன் வந்த வாதைகள், ஊரின் ஓடைகரைப்பகுதில் குடியமர்ந்தன. பின்பு ஆடு மாடுகளுக்கு நோயை ஏற்படுத்தி, ஒருவரின் கனவில் தங்களின் வருகையைத் தெரிவித்தன. மக்களும் அஞ்சு பீடங்கள் அமைத்து பூஜை செய்து வழிபட்டனர்" என்று முடிகிறது ஒரு வாய்மொழிக்கதை.

மற்றொரு வாய்மொழிக்கதை, “இளைய நயினார்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கீரிப்பாறை பகுதிக்கு ஆடு மாடு மேய்க்கச் சென்றனர். அங்கு ஒரு கருநொச்சி மரத்தில் ஆடு மாடுகள் மேய்க்கச் சில கம்புகளை வெட்டினர். அந்த நேரத்தில், அங்கு ஒருவன் வந்தான். அவன் கம்புவெட்டிய கருநொச்சி மரத்துக்கு குங்குமம் பூசி அதில் குடியிருந்த வாதைகளுக்குப் பன்றி பலி கொடுத்து, பூசை செய்து வழிபட்டான். இதைக் கண்டு அஞ்சிய மக்கள் உடனே ஊர் திரும்பினர். வாதைகளும் வெட்டிய கம்புகளுடன் இளைய நயினார்குளம் வந்து சேர்ந்தன. அவர்கள் கொண்டுவந்த கம்புகளை வீட்டுக்கு வெளியில் போட்டிருந்தனர்.

அவை, உடனே வேர்விட்டு முளைத்தன. மறுநாள் காலை ஆடு மேய்க்க வேர்விட்ட கம்பை அசைத்துப் பிடிங்கினர். அன்று மாலையே அனைவரும் காய்ச்சல் வந்து படுக்கையில் விழுந்தனர். எனவே, மக்கள் அவர்களை அம்மன் கோயிலுக்கு அழைத்துச்சென்று தண்ணீர் எறிந்தனர். அப்போது அம்மன் கோமரத்தாடி மீது ஏறி, மூன்று வாதைகள் வருகையையும் அவற்றுக்கு வழிபாடு செய்யுமாறும் கூறியது. மக்கள், 'வாதைகளுக்கான வழிபட்டுமுறை தங்களுக்குத் தெரியாது' என்றனர்.

அம்மன், கீரிப்பாறை புலயனை அழைத்துவந்து பூஜை செய்யுமாறு கூறினாள். பிறகு, கருநொச்சி மரத்துக்கு பன்றி பலியிட்டு பூஜை செய்தவனை அழைத்துவந்து, வாதைகளுக்குப் பீடம் அமைத்து, ஒத்தமுரசுகொட்டி, பன்றி பலியிட்டு கொடைவிழா நடத்தினர். அதுபோல அடுத்த ஆண்டும் அவ்வாறே அவனை அழைத்துவந்து விழா எடுத்தனர். அவன் விழாவை நடத்திக்கொடுத்துவிட்டு ஊர் திரும்புகையில் சிவசுப்பிரமணியபுரத்தில் வந்து ஒரு வாகை மரத்தடியில் தூங்கினான். அந்த இடத்திலேயே இறந்துபோனான்" என்று நீள்கிறது இன்னொரு கதை.

கட்டை ஏறும் பெருமாள் சாமிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடைவிழா நடத்தப்படுகிறது. கொடைவிழா ஆடிமாதம் முதல்கிழமை, வியாழன் மாலை தொடங்கி சனிக்கிழமை அதிகாலை நிறைவு பெறும். விழா எடுப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பு வரி போடுவர். கோமரத்தாடி எட்டு நாள் விரதம் இருப்பார். விழா தொடங்கும் முன்பு கோயிலை சுத்தம் செய்து, வெள்ளையடிப்பர். மேலும் கடல்நீர் தெளித்து புனிதப்படுத்துவர்.

வியாழன் மாலை அனைத்து தெய்வப் பீடங்களுக்கும் படையலிட்டு பூஜை செய்வர். இரவு சாஸ்தாகதை வில்லுப்பாட்டாகப் பாடப்படும். இரவு சாஸ்தா, பெருமாள், பிரம்ம சக்தி ஆகிய தெய்வங்களுக்குச் சாம பூஜை நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை பூஜையுடன் மார்க்கண்டேயன் கதை வில்லுப்பாட்டுப் பாடப்படும். மதிய பூஜையில் காலசாமி மஞ்சள்நீராடி அருள்பாலிக்கும். மாலைவேளை மாசானசாமிக்கு அலங்காரம் நடைபெறும். அப்பொழுது மாசான சாமிக்கு வேட்டிகட்டும் சடங்கு நடைபெறும். வேட்டிகட்டுகையில் முந்தியில் கால் பணம் முடிந்துவைப்பர். அது ‘புலயன் காசு’ எனப்படும். அரிச்சந்திரனுக்குச் சுடுகாட்டை ஆளுவதற்குச் செலுத்தப்படும் கூலிக்காசு என்றும் கூறுகின்றனர். அதன்பின்பு கட்டை ஏறும் பெருமாள் சாமிக்கு சைவமுறைப்படி பூஜை நடைபெறும். அப்போது அரிச்சந்திரன் கதை வில்லுப்பட்டாக பாடப்படும்.

வில்லுப்பாட்டில் அரிச்சந்திரன் கதை மயான காண்டத்தை எட்டும் வேளை மாசான சாமியின் முன்பாகத் தோண்டப்பட்ட மயானக்குழிக்குள் 21 வகை விறகுகள் போடப்படும். மேலும், குழியின் மேல் 3 பெரிய கள்ளிக்கட்டையையும் போட்டு வைப்பர். பின்னர் பனை மட்டையில் சூலாயுதம் செய்து அதில் கழுகு நிறச் சேவலை உயிருடன் குத்திவைப்பர். அப்போது மாசானசாமி கோமரத்தாடிமீது ஏறி ஆடும். மயான கொள்ளிச்சடங்கு ஆரம்பமாகும். குடிமகன் பலியாடு பலிக்குச் சம்மதித்ததும் அதன் தொண்டையில் கீறுவான். மாசானம் ஓடிவந்து உதிரம் குடிக்கும். மக்கள் மாசானத்தின் ஆவேசத்தைத் தணிக்க இழுத்துச்சென்று நீராட்டுவர். இறந்த ஆட்டை ஒரு வெள்ளைத்துண்டால் மூடி வைப்பர். பின்னர் ஆட்டை சிதையின் மீது வடக்கே கால் வைத்தும் தென்திசையில் தலை வைத்தும் கிடத்துவர். மீண்டும் மாசானம் கோமரத்தாடி மீது ஏறி ஆடத் தொடங்கும். சில சடங்குகளுக்குப் பிறகு, மாசான கோமரத்தாடி சிதைக்கு தீமூட்டும். மக்கள் எரியும் சிதைக்குள் பூ, பருத்திக் கொட்டை, நெல்லுப்பொரி ஆகியவற்றை அள்ளி இடுவர். மேலும், ஆட்டின் குடல், கறுப்பு ஈரல், வெள்ளை ஈரல், சிறுநீரகம், கால், தலை ஆகியவற்றையும் சிதையில் இட்டு எரித்து சாம்பலாக்குவர். மாசானசாமி ஆட்டம் நிறைவு பெறும். 

சிதையில் இருந்த ஆடு நன்றாகவெந்த பின்பு எடுத்து கறியாகச் சமைப்பர். அதனுடன் சோறும் சமைப்பர். பின்பு மயானக்குழியை மூடிவிடுவர். சமைத்த கறி சோற்றை 21 பனை ஓலை பட்டையில்வைத்து வழிபடுவர். பின்னர் படைப்பை விலக்கி அனைவரும் கோயிலைவிட்டு வெளியேறுவர். பூசாரி ஒற்றைத் தேங்காயை வெட்டி வாதைகளுக்கு வழி திறப்பார். அதன்பின்பு யாரும் கோயிலுக்குள் செல்லமாட்டார்கள். சென்றால் வாதைகள் அடித்துவிடும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனையடுத்து அனைவருக்கும் கறி சோறு வழங்கப்படும். எட்டாம் நாள் ஒருபடைப்பு போட்டு வெண்பொங்கலிட்டு பூஜைசெய்து வழிபடுவர். அத்துடன் விழா நிறைவுபெறும்.