temples

திருமணத் தடை நீக்கும் 'கஞ்சாம்' நிமிஷாம்பாள் தரிசனம்! #KarnatakaTemple

கர்நாடக மாநிலத்தில் ஶ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சாம் என்ற தலத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு நிமிஷாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தில் அன்னை நிமிஷாம்பாள் மட்டுமின்றி, அருள்மிகு மவுத்திகேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான், ஶ்ரீலட்சுமி நாராயணர், ஶ்ரீவிநாயகர், சூரியபகவான் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

காவிரிக் கரையின் எழிலார்ந்த சூழலில் கவினுறக் காட்சி தருகிறது அன்னையின் ஆலயம். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தாலும், ஆரவாரம் இல்லாத சூழல் நம்மைப் பரவசப்படுத்துகிறது.

காவிரியின் படித்துறையில் விநாயகர், அனுமன் போன்ற பல விக்கிரகங்கள் ஒழுங்கற்ற முறையில் இருந்தாலும்கூட, அந்த விக்கிரகங்களுக்கும் காவிரித் தாய்க்கும் பெண்கள் பக்திபூர்வமாக பூஜை செய்வதைக் கண்டு சிலிர்த்துப்போனோம். 

முற்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் கஞ்சாம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தவர் முக்தராஜன். அன்னை பராசக்தியிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த அவர், தினமும் அன்னையை வழிபட்ட பிறகே, அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அம்பாளின் அனுக்கிரகத்தால் அவர் சிறப்பான முறையில் தன்னுடைய நாட்டை ஆட்சி செய்துவந்தார். 

முக்தராஜன் அம்பிகையிடம் கொண்டிருந்த பக்தியைக் கண்டு பொறுக்க முடியவில்லை ஓர் அசுரனுக்கு. அவன் பெயர் ஜானுசுமண்டலன். எனவே, முக்தராஜனையும், அவன் நாட்டு மக்களையும் பல வகைகளிலும் துன்புறுத்தத் தொடங்கினான். தன் மக்களுக்கு அசுரனால் ஏற்பட்ட தொல்லைகளைக் கண்டு மனம் வருந்திய முக்தராஜன், அசுரனை அழிப்பதற்குத் தன்னால் முடியாது என்ற காரணத்தினால், அன்னையை வேண்டி பிரார்த்தித்தான். உணவும் நீரும் இன்றி கடும் தவம் இருந்து பிரார்த்தித்த முக்தராஜனுக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, உக்கிர வடிவினளாகத் தோன்றி அசுரனை சம்ஹாரம் செய்தாள்.

முக்தராஜனின் துயரத்தைப் போக்க நொடிப் பொழுதில் தோன்றி, அசுரனை சம்ஹாரம் செய்த காரணத்தால் அம்பிகைக்கு நிமிஷாம்பாள் என்ற பெயர் ஏற்பட்டது. தன் பிரார்த்தனைக்கு இரங்கி, அசுரனை வதம் செய்த அம்பிகை, அந்தத் தலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அம்பிகையும் அப்படியே அருள்புரிந்ததுடன், அசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்கவேண்டி, சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து தியானித்து தவம் மேற்கொண்டாள். 

Photo Courtesy: Nimishambal Devasthanam

அம்பிகையின் தவம் கண்டு மனம் கனிந்த சிவபெருமான், அம்பிகைக்கு தரிசனம் தந்ததுடன், அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தையும் போக்கி அருள்புரிந்தார். அன்னையின் வேண்டுகோளின்படி ஐயனும் இங்கே மவுத்திகேஸ்வரர் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி, நாளும் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார்.

அசுரனை வதம் செய்யச் சென்ற தன் சகோதரி இன்னும் திரும்பவில்லையே என்ற கவலையில், சகோதரியைத் தேடிக்கொண்டு, இந்தத் தலத்துக்கு வந்த ஶ்ரீநாராயணனும் தன் சகோதரியான நிமிஷாம்பாளின் வேண்டுகோளை ஏற்று இங்கே நிரந்தரமாக எழுந்தருளிவிட்டார்.
மேலும் இந்தக் கோயிலில் விநாயகர், சூரியன், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்புரிகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு வந்து இவரை வழிபடும் பக்தர்களுக்கு சகோதர ஒற்றுமை பலப்படுவதுடன், சகோதர வகையில் நன்மைகளும் ஏற்படும் என்பது ஐதீகம். 

முகக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும் அருள்மிகு மவுத்திகேஸ்வரரை தரிசித்து வழிபட்டால், ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

அன்னை நிமிஷாம்பாள் நான்கு திருக்கரங்கள் கொண்டு, சூலம், உடுக்கை, அபய, வரத ஹஸ்தம் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் திருமுடிக்கு மேல் இருக்கும் வெண்கொற்றக்குடை தர்மத்தை நிலைபெறச் செய்வதாகத் திகழ்கிறது.
ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இந்த அம்பாளை தரிசித்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். மேலும் எதிரிகளின் தொல்லை அகலவும், வழக்குகளில் வெற்றி பெறவும் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். இந்தத் தலத்தில் அன்னை நிமிஷாம்பாள் துர்கையின் அம்சமாக இருப்பதால், ராகுகாலத்திலும், அஷ்டமி தினங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.