temples

பேச்சிப்பாறை அணைக்காக உயிர்கொடுத்த காணி தெய்வம் பேச்சியம்மன்!

தென்மாவட்டங்களில் தாய்தெய்வ வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெண்வழிச் சமூக மரபின் மிச்சமாக மிஞ்சியிருக்கும்  தாய்தெய்வ வழிபாடு, பெண்களால் மட்டுமல்லாமல் ஆண்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவது முக்கியமானது. தென்மாவட்டங்களில் நீலி, மாரி, இசக்கி , காளி, முத்துமாரி, ஔவை, பிரம்மசக்தி, புலச்சி,  கபாலக்காரி, நீலகேசி, தீப்பாய்ந்தாள், சீலைக்காரி உள்ளிட்ட பல தாய்தெய்வங்கள் வழிபடப்பட்டு வருகின்றன. அதைப்போல பேச்சியம்மன் வழிபாடும் பரவலாகக் காணப்படுகின்றது. பேச்சியம்மன் வழிபாடு தோன்றிய இடம், குமரியில் பேச்சிப்பாறை என்கிறார்கள் ஆய்வாளர்கள். குலசேகரம் எனும் ஊரின் வடக்குத்திசையில் 11கி.மீ தொலைவில் பேச்சிப்பாறை அமைந்துள்ளது. இது தனி ஊராட்சி. இயற்கை எழில்சூழ்ந்த இவ்வூரில் காணிப்பழங்குடிகள் உள்ளிட்ட பலசமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் பேச்சிப்பாறை எனும்  அணை ஒன்றும் உள்ளது. இந்த அணையின் தொட்டடுத்து மதகுப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் பேச்சியம்மன் கோயில் உள்ளது. 

பேச்சியம்மன் கோயில், அணையைப் பார்த்த வண்ணம் கிழக்குமுகமாக  உள்ளது. கோயிலின்  மேற்குப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் பேச்சி. கன்னிமூலையில் வலம்புரி விநாயகரும்  வடகிழக்குப் பகுதியில் உள்ள அரசமரத்தடியில் நாகராஜாவும் நாககன்னியும் குடியிருக்கிறார்கள்.

பேச்சியம்மன் பற்றி ஒரு தொன்மக் கதை உலவுகிறது. 'பேச்சிப்பாறைப் பகுதியில் காணிப் பழங்குடிமக்கள் வசிக்கிறார்கள். கி.பி.1896-ம் ஆண்டு  மூலம்திருநாள் ராமவர்மா மகாராஜா, கோதை ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையைக் கட்டத் தொடங்கினார். இதன் கட்டுமானப் பொறியாளராக இருந்தவர் ஹாம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் எனும் வெள்ளைக்காரர். தங்கள் வாழ்விடத்தில் அணையைக் கட்டுவதற்கு காணிப்பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அணை கட்டும் பணி தொடர்ந்தது. இந்நிலையில் அணைக் கட்டுமானம் அடிக்கடி இடிந்து விழுந்தது. அதற்குக் காரணம் மலைவாழ் தெய்வம் என்று பணியாளர்கள்  நம்பினர். மேலும் மலைவாழ் தெய்வத்திற்குப் பலிகொடுத்தால்தான் இது நிவர்த்தியாகும் என்று கூறி, ஒரு பெண்ணை நரபலி கொடுத்தனர். அவ்வாறு பலிகொடுக்கப்பட்ட பெண்ணை காணிமக்கள், பேச்சியம்மன் என்று பெயரிட்டு வழிபட்டனர்” என்று ஒரு வாய்மொழிக்கதை கூறுகிறது. 

பேச்சியம்மன் குறித்து சில ஐதீக வாய்மொழிக் கதைகளும் நிலவுகின்றன. அதாவது, சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அகத்தியர் பூமியைச் சமநிலைபடுத்த தென்பகுதிக்கு வந்தார். அப்பொழுது பேச்சிப்பாறையில் சுயம்புவாகத் தோன்றிய காளியை[பேச்சியை]வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் பேச்சிப்பாறை பகுதியில் வந்து தங்கினர். அப்பொழுது அர்ச்சுனனுக்கும் பீமனுக்கும் பந்தடிக்களத்தில் யார் பெரியவர் என்ற நிலையில் மோதல் ஏற்பட்டது [அந்த இடம் இன்றும் பந்தடிக்களம் என்றே அழைக்கப்படுகிறது]. கண்ணபிரானின் ஆலோசனைப்படி இருவரும்  பேச்சிப்பாறை பேச்சியம்மனிடம் நீதி கேட்டுச் சென்றனர். அப்பொழுது பேச்சியம்மன் விண்ணளாவ நின்று இருவரின் கர்வத்தையும் அகற்றினாள் என்றும் கூறப்படுகிறது. 

பேச்சியம்மன் கோயிலில் முற்காலத்தில் ஆடு, கோழி பலியிடப் பட்டன. மேலும் காணிப்பழங்குடிகள் சாற்றுப்பாடல் பாடி வழிபடும் மரபும்  இருந்துள்ளது. ஆனால் 1906-ஆம் ஆண்டுமுதல் அவ்வழக்கம் நின்றுவிட்டது. பேச்சியம்மன் வழிபாடு காளி மற்றும் பேச்சி ஆகிய இரண்டு தெய்வங்களின் பின்னிப்பிணைந்த கூட்டு வழிபாடாக மாறியுள்ளது.பேச்சியம்மன் காளியாக மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பின்பு சைவ பூசையே செய்யப்படுகிறது. எனினும் முன்பு பலி கொடுத்ததன் அடையாளமாக இன்றும் தனிப்பந்தல் போட்டு ரத்தபுஷ்பாஞ்சலி [குருதிபூசை] நடத்தப்படுகிறது.   

பேச்சியம்மன் கோயில்விழா மாசி மாசம், பரணிநட்சத்திரம் வரும் நாளில் 10 நாள்கள் நடைபெறும். இவ்விழாவில் சிலகாலம் காணிப்பழங்குடிமக்கள் பங்கெடுக்காமல் இருந்துள்ளனர். தற்பொழுது மீண்டும் கலந்துகொள்வதோடு, விழாவினைத் தொடங்கிவைத்து, முதல்நாள் கொடியும் கொடிக்கயிறும் கொண்டு வந்து கொடுக்கின்றனர். அதை பிறமக்கள் எதிர்சென்று பெறுகின்றனர். மேலும் காணிப்பழங்குடிகள் அன்று சாற்றுப்பாட்டு பாடியும் வழிபடுகின்றனர். பத்துநாள்கள் நடைபெறும் விழாவின்போது கொடிஏற்றம், அம்மன்பவனி, அபிஷேகக் குடமெடுத்தல், திருவிளக்குப்பூசை, புஷ்பஅபிஷேகம், பொங்கல் வழிபாடு, துலாபார நேர்ச்சை,   25 அஷ்டகந்த கலசநீர் அபிஷேகம், தாந்திரிபூசை ஆகியன நடை பெறுகிறது. பத்தாம்நாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.  பேச்சியம்மனுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் பூசை நடத்தப்படுகிறது. மேலும் 1906-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னரே அணையின் மதகு திறப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. பேச்சியம்மன் வழிபாடு குமரி,நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவியுள்ளது.