temples

மாசி மக மகத்துவங்களும்... பாவங்கள் போக்கும் 20 தீர்த்தங்களும்...

னிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம். இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் – தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம்.  மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் `கடலாடும் மாதம்’ என்றும், `தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாத நாள்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டுவந்தால், எல்லாவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், `மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திருநாள் கலைவாணிக்கு உகந்த திருநாள்’ என்கின்றன பல்வேறு ஞான நூல்கள். இந்த மாதம் முழுவதும், சரஸ்வதி அந்தாதி போன்ற துதிப்பாடல்களைப் பாடி, வண்ண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், கல்வி கற்கும் மாணவ மாணவிகள் அனைவரும் கல்வியிலும், ஞானத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

ஜோதிடரீதியாகப் பார்த்தால், கும்ப ராசியில் சூரியன் இருக்க, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளில் பௌர்ணமி வரும். இந்த பௌர்ணமி திருநாளை மாசி மகம் என்று சொல்கிறோம். அதேபோல், கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சிம்மத்தில் சந்திரனும் குருபகவானும் இணைந்து இருந்தால் அது மகாமகம் என்று சொல்லப்படுகிறது. இந்த மகாமகம் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். சில நேரங்களில் 11  வருடங்களில் இந்த மகாமகம் ஏற்படும். அதனை `இளைய மாமாங்கம்’ என்பார்கள்.

இந்தியாவிலேயே, மகாமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது கும்பகோணத்தில்தான். இதேபோல வட இந்தியாவில், `கும்பமேளா’ என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த மாசி மகம், மகாமகத்தின்போது குளத்தில் நீராடுபவர்களின் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், தோஷங்கள்,நோய்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் ஞானமும் ஆரோக்கியமும் பெறுவார்கள். இந்தக் குளத்தில் உள்ள 20 வகையான தீர்த்தத்தில் ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு வகையான பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.

தீர்த்தங்களின் பெயரும், புண்ணியங்களும்!

1. வாயு தீர்த்தம் – நோய்கள் அகலும்.

2. கங்கை தீர்த்தம் – கயிலைப் பதவி அளிக்கும்.

3. பிரம்ம தீர்த்தம் – இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்.

4. யமுனை தீர்த்தம் – பொருள் சேர்க்கை உண்டாகும்.

5. குபேர தீர்த்தம் – சகல செல்வங்களும் உண்டாகும்.

6. கோதாவரி தீர்த்தம் – எண்ணியது நடக்கும்.

7. ஈசான்ய தீர்த்தம் – சிவனடி சேர்க்கும்.

8. நர்மதை தீர்த்தம் – உடல் வலிமை உண்டாகும்.

9. இந்திர தீர்த்தம் – மோட்சம் அளிக்கும்.

10. சரஸ்வதி தீர்த்தம் – ஞானம் உண்டாகும்.

11. அக்னி தீர்த்தம் –பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

12. காவிரி தீர்த்தம் – புத்தியை மேம்படுத்தும்.

13. யம தீர்த்தம் – மரண பயம் நீங்கும்.

14. குமரி தீர்த்தம் – வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்.

15. நிருதி தீர்த்தம் – பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீங்கும்.

16. பயோஷினி தீர்த்தம் (பாலாறு) – கோலாகலம் அளிக்கும்.

17. அறுபத்தாறு கோடி தீர்த்தம் – துன்பம் நீங்கி இன்பம் கூடும்.

18. வருண தீர்த்தம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.

19. சரயு தீர்த்தம் – மனக்கவலை தீர்க்கும்.

20.தேவ தீர்த்தம் – சகலப் பாவங்களையும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.

(20  தீர்த்தங்களையும் மகத்துவத்தையும் புகைப்படங்களுடன் பார்க்க... மேலே உள்ள படத்தை  க்ளிக் செய்யவும்.)                          

நீராடும் முறைகள்...

புண்ணிய நதிகளில் நீராடுபவர்கள், ஒரே ஆடையை உடுத்தி நீராடக் கூடாது. இடுப்பில் மற்றொரு ஆடையை உடுத்திக்கொண்டு நீராட வேண்டும். அதற்கு முன்னர், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு நீரை  உள்ளங்கையில் எடுத்து தலையின் மீது தெளித்துக்கொள்ள வேண்டும். இரவில் நீராடக் கூடாது.

புண்ணிய நதியில் புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் பல்வேறு பலன்களை வழங்குவர். மூன்று முறை நீராடுவதற்கும் நன்மைகள் உண்டு. முதல் முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்துக்கு ஈடே கிடையாது என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், மாசி மகத்தின்போது அதிகாலையில் எழுந்து நீராடி, பக்தியுடன் துளசி கொண்டு மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும் வெற்றியும் கிடைக்கும்.சரஸ்வதியை மணமுள்ள மலர்களால் வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மகத்தின்போது நாம் செய்யும் எல்லாக் காரியங்களும் இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

மாசி மாதத்தின் சில முக்கிய நாள்கள்!

மாசி 3 - அமாவாசை

அன்று முன்னோர்களுக்காக ஆராதனை செய்ய வேண்டும். இதன் மூலம் நம்முடைய முன்னோர்களின் ஆசிகளைப் பெற முடியும். தர்ப்பணம்  முதலான காரியங்கள் செய்தால் பித்ரு சாபம் இல்லாமல் இருக்கலாம்.

மாசி 5 - சந்திர தரிசனம் 

இந்த சந்திர தரிசனம் மூன்றாம் பிறையாகும். இந்த மூன்றாம் பிறையை `தெய்விகப் பிறை’ என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் இந்த பிறையைத்தான் சிவபெருமான் தம்முடைய திருமுடியில் தரித்திருப்பார். இந்தப் பிறையை பார்க்கும்போது, மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கிவிடும்.

மாசி 17 - பௌர்ணமி, மாசிமகம்

மாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்குத் தெரிவிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில்  உள்ள ஆலயங்களிலும் உள்ள தெய்வ  மூர்த்தங்கள், அருகில்  உள்ள புனித நீர்நிலைகளுக்கு அருகில் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறும். அது மட்டுமில்லாமல் அங்கு மக்களும் புனித நீராடுகின்றனர்.

புராணத்தில் என்ன சொல்லப்படுகிறது?

வருண பகவானுக்கு ஒருமுறை கடுமையான தோஷம் பிடித்துவிட்டது. எனவே, அவர் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். வருணன் கடலில் வீசப்பட்டதால் உலகில் மழை பொழியாமல் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்துயிர்களும் அதிகத் துன்பம் அடைந்தன.  தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையைக் கேட்ட சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார்.  அவ்வாறு வருண பகவான் விடுதலை பெற்ற நாள் மாசி மாத மகம் நாளாகும். அதனையே நாம் மாசி மகத் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மேலும், விடுதலை பெற்ற வருண பகவான், சிவபெருமானிடம், ''நான் கடல் நீரில் கட்டப்பட்டு இருந்தபோது, தங்களை நோக்கி பிரார்த்தனை செய்ததால், என்னுடைய தோஷம் நீங்கியது. அதேபோல், இந்த நாளில் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, தங்களை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவங்கள், தோஷங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்க அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவபெருமானும், வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். இதையடுத்து அன்று முதல் புனித நீராடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதேபோல், மேலும் பல நிகழ்வுகளைப் புராணங்கள் கூறுகின்றன.