temples

`300 ஆண்டுகளாக நடக்கும் பிடாரி அம்மன் தூக்குத் தேர்த் திருவிழா’ - பக்தர்களின் தோளில் ஏறி பவனிவரும் தேர்!

'நகரும் கோயில்' என்று சிறப்பிக்கப்படுவது தேர். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பானது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, இறைவன் எழுந்தருளியிருக்கும் தேர் ஆடி அசைந்தபடி வரும் காட்சி, காண்பவரையெல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும். ஆனால், ஒரு தேரையே பக்தர்கள் சுமந்து வந்தால், அந்தக் காட்சி நம்முள் ஏற்படுத்தும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இருக்காது. 

பக்தர்கள் சுமந்து செல்லும் தேருக்குப் பெயர், `தூக்குத் தேர்.' 

கோபம் என்பதையே குணமாகக் கொண்டவள் பிடாரி. கிராம தேவதை அவள். கிராமத்தின் காவல் தெய்வம்; காளியின் அம்சமாக விளங்குபவள். பக்தர்கள் தேரைத் தூக்கிச் செல்லும் திருவிழா பிடாரி அம்மன் கோயில்களில் மட்டுமே இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே இருக்கிறது சூரப்பள்ளம் எனும் கிராமம். அங்குதான் பிடாரி அம்மனின் கோயிலான ஸ்ரீ சூரமகா காளியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில்தான் முந்நூறு வருடங்களுக்கும் மேலாக  தூக்குத் தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்டவர் சாளுவ நாயக்கன் எனும் சிற்றரசர். அவரது காலத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திடீரென்று தேர் மண்ணுக்குள் புதையத் தொடங்கியதாம். பிறகு, மண்ணில் புதையத் தொடங்கிய தேரைத் தூக்கி தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு கோயிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்களாம். அப்போதிருந்து தொடங்கப்பட்டதுதான் இந்த 'தூக்குத் தேர் திருவிழா' என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இன்றும் கோயில் இருக்கும் பகுதி 'சாளுவன் நாயக்கர் கொல்லை' என்றே அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதத்தில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்று காப்பு கட்டி திருவிழாவைத் தொடங்குகிறார்கள். காப்புக் கட்டிய செவ்வாய்க் கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை முதல்  மண்டகப்படி தொடங்குகிறது. முதல் இரண்டு நாள்களில் நடைபெறும் கீழத்தெரு மண்டகப்படியில் பிடாரியம்மன் யாளி மீது அமர்ந்து உலா வருகிறாள். அடுத்த இரு நாள்கள் நடைபெறுவது 'நடுத்தெரு மண்டகப்படி'. இந்த இரண்டு நாள்களிலும் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளுகிறாள் பிடாரி. அடுத்த இரண்டு நாள்கள் காமதேனு வாகனத்தில் பிடாரி எழுந்தருளும் மண்டகப்படி மேலத்தெரு மண்டகப்படி எனப்படுகிறது. ஏழாவது நாள் கட்ட வேளாளர் தெரு மண்டகப்படி. அன்று ரிஷப வாகனத்தில் காளி அருள்புரிகிறாள். எட்டாவது நாளில் வெண்ணெய்த் தாழியுடன் தவழ்ந்த கோலத்தில் பவனி வருகிறாள் காளி தேவி. 9 - வது நாள் காவடியில் வலம் வருகிறாள். விழாவின் பத்தாவது நாளே தூக்குத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

10-ம் நாள் மதியம் காளிதேவி சூல வடிவமாக ஊர் மக்களைத் தேடிச் செல்கிறாள். இவளுக்குப் பெயர் சூலப் பிடாரி. சூலப் பிடாரி வலம் வரும் வேளையில் ஊரில் இருக்கும் துர் சக்திகள் அனைத்தும் பயந்து விலகிவிடும். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அருள் வழங்கிச் செல்கிறவள் அடுத்த நாள்தான் கோயிலுக்குத் திரும்புகிறாள். சூலப் பிடாரி கோயிலுக்குத் திரும்பிய  பிறகே தூக்குத் தேர் விழா தொடங்கும். தூக்குத் தேர் விழாவின்போது துர்சக்திகளால் இடைஞ்சல் எதுவும் ஏற்படாமலிருக்கவே முந்தின தினம் சூலப் பிடாரி வீதியுலா வருகிறாள் என்பதால், சூலப் பிடாரியை, `வழிகாட்டி பிடாரி’ என்றே அழைக்கிறார்கள்.

மற்ற தேர்களைப் போன்று அல்லாமல், தூக்குத் தேரை ஒரு நாளைக்கு முன்பாகத்தான் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து செய்கிறார்கள். மூங்கில் கழிகளையும், மூங்கில் கீற்றுகளையும் கொண்டே தேர் கட்டமைக்கப்படுகிறது. பக்தர்கள் தேரைச் சுமப்பதற்கு வசதியாக இரண்டு வாரை கொண்டு தேர் கட்டப்படுகிறது.  தேர் கட்டப்பட்ட பிறகு, தேருக்கு அலங்காரம் செய்வார்கள். நன்றாக அலங்கரிக்கப்பட்ட தேரில்  பிடாரி அம்மனை எழுந்தருளச் செய்வார்கள். அம்மன் எழுந்தருளியிருக்கும் தேரை, கங்கணம் கட்டி விரதமிருக்கும் பக்தர்கள்தான் தூக்கிச் செல்ல வேண்டும். பக்தர்களின் ஆரவார முழக்கத்துடன், இசை வாத்தியங்கள் முழங்க பவனிவரும் தேரைக் காணும்போது ஏற்படும் பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

வாழ்வாதாரம் தேடி இளைஞர்கள் நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், பல கிராமங்களில் அம்மன் அமர்ந்திருக்கும் தேரும் சரி, மற்ற வாகனங்களும் சரி... மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் வைத்து வீதியுலா வரும் இந்தக் காலத்திலும், சூரப்பள்ளத்தில் நடைபெறும் திருவிழாவில், பிடாரி அம்மன் எழுந்தருளியிருக்கும் தேரை, பக்தர்களே தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். முந்நூறு வருடங்களாக நம் பண்பாடும், பழக்க வழக்கங்களும் தொடர்ந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பர்யத்திலிருந்து விலகாமல் இன்றைக்கும் தூக்குத் தேரில் பவனி வரும் பிடாரி அம்மனை தரிசித்து, அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.

இன்று (10.5.2018) மாலை சூரப்பள்ளத்தில் நடைபெறவிருக்கிறது தூக்குத் தேர் திருவிழா. வாய்ப்புள்ளவர்கள் தவறவிட்டுவிடாதீர்கள்.