temples

சிதையும் சிலைகள்... சேதமடையும் கல்வெட்டுகள்... தஞ்சை பெரியகோயிலின் கலவர நிலவரம்!

யிரம் ஆண்டுகள் கடந்து, தமிழர்களின் திறனுக்கும், அழகியல் உணர்வுக்கும், கட்டுமான நுட்பத்துக்கும், பண்பாட்டுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரியகோயில். 

இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும், அந்நிய மன்னர்களின் படையெடுப்புகளையும் கடந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த அற்புதமான கலைக்கோயில், அதிகாரிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக சிதைந்து வருகிறது என்று கொதிக்கிறார்கள் பொதுமக்கள். தஞ்சாவூர் பெரியகோயில், மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் அகழி, பெரிய மதில் சுவர், பிரமாண்டமான விமான கோபுரம் என மிகுந்த கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பத் தொகுப்புகளும், சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுக்குச் சான்றாக விளங்கும் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கின்றன. பெருவுடையார், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்கள் இருந்தாலும்  இதன் பிரமாண்டமே இதற்கு  பெரிய கோயில் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இந்தக் கோயிலைக் காண இந்தியா கடந்து உலகெங்கும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எவ்வித தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோயிலை நேர்த்தியுடன் கட்டியெழுப்பிய ராஜராஜனையும், தமிழ்ச் சிற்பிகளையும் வியந்து போற்றுகிறார்கள். 

சிதிலமடைந்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைக்  காண இந்த படத்தைக் கிளிக் செய்யுங்க..!
 

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலை, உலக புராதன சின்னங்களில் ஒன்றாகவும் அறிவித்துள்ளது யுனஸ்கோ. இவ்வளவு சிறப்பு மிக்க இந்தக் கோயில் கடந்த சில வருடங்களாக, உரிய முறையில் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள். 

இந்தக் கோயிலின் மதில் சுவற்றுக்கு மேல் சிறிய அளவிலான நந்திகள்  உள்ளன. இந்த  நந்திகள் பெரும்பாலும் தலை இல்லாமலும், உடல் சேதமடைந்தும் காணப்படுகின்றன. விமான கோபுரம் மற்றும் நுழைவாயில்களில் பாசி படிந்து கருவண்ணம் படர்ந்து கிடக்கிறது. அதன் காரணமாக அற்புதமான அந்தக் கட்டுமானத்தின் பொலிவே குலைந்துவிட்டது. 

பின்புறத்தில் உள்ள  விநாயகர் சந்நிதியில் உள்ள விநாயகருக்கு தலையே இல்லை. மற்றொரு பகுதியில் உள்ள விநாயகர் சிலை அரிக்கப்பட்டு எழும்பு கூடாகக் காட்சி தருகிறது. ஏராளமான கற்சிற்பங்கள் சேதமடைந்து தலைப் பகுதி, உடல் பகுதி இல்லாமல் காணப்படுகின்றன. சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள யானையின் தந்தம் உடைந்தும், குதிரை தலை சிதைந்தும் உயிரற்றுக் கிடக்கின்றன. பெருவுடையார் சந்நிதி அமைந்துள்ள வெளிப்பகுதியில் உள்ள சிங்கத்தின் சிலைகளும் தலைப் பகுதி, முகப்பகுதி சிதைந்து கம்பீரம் குன்றிக் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமான கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் சிதைந்தும் மறைந்தும் வருகின்றன.

இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் உடனடியாக குடமுழுக்குக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் மக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நகர்வும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால்,  இடி விழுந்து மூலவர் சந்நிதிக்குச் செல்லும் மேல் பகுதியில் சேதமடைந்தது. அதைக்கூட சரி செய்யாததால் இடி விழுந்ததன் அடையாளம் இன்றும் காணப்படுகிறது. கோயிலில் இருந்த யானை வெள்ளையம்மாள் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. யானை மண்டபம், வேண்டாத பொருள்களின்  சேமிப்பு கிடங்காகவும், டூ வீலர் நிறுத்தும் இடமாகவும் மாறிவிட்டது. யானை வாங்கித் தர, நன்கொடையாளர்கள் நிறைய பேர் ஆர்வமாக இருந்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். குடமுழுக்கு நடத்தப்பட்டால், அதற்கான நிதியில் சிதைவடைந்த பகுதிகளை புனரமைப்பு செய்ய முடியும். 
பெரியகோயிலுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தியதை தி.மு.க-வும், தேர் ஓட செய்ததை அ.தி.மு.க-வும் தங்கள் சாதனையாகச் சொல்லிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் கோயிலின் இன்றைய நிலையைப் பற்றி பேசுவதேயில்லை.  

நம் மூதாதைகளின் திறமைக்குச் சான்றாக, நம் பண்பாட்டின் அடையாளமாக அடுத்த தலைமுறைக்கு  விட்டுச்செல்ல வேண்டிய ஒரு கலைப் பொக்கிஷம் நம் கண் முன்னால் சிதைந்துகொண்டிருப்பது பெரும் வேதனை! நடவடிக்கை எடுக்குமா அரசு?