temples

சென்னையில் ஒரு நெருப்புக் கோயில்... ‘ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’! #Chennai378

உலகின் பழைமையான மதங்களில் ஒன்று ஜோரோஸ்ட்ரியம். 3200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் ‘ஜொராஷ்டிரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஈரானிய இறைதூதர் ஜோரோஸ்ட்ரரின் போதனைகளை வேதமாகக் கொண்டு, ஞான வடிவமான ‘அகுரா மாஸ்டா' என்ற இறைவனைப் போற்றி இந்தச் சமயம் உருவானது. இவர்களின் புனித நூல் ‘அவேஸ்தா’. இவர்கள் நெருப்பையே இறைவனாக வணங்குபவர்கள். இவர்களது கோயில், நெருப்புக் கோயில் எனப்படுகிறது. பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள், 1300 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமய பிரச்னை காரணமாக இந்தியாவுக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவில் இவர்கள், 'பார்சிகள்' என்று அழைக்கப்பட்டனர். இந்தியா முழுக்க தற்போது 1 லட்சத்து 50 ஆயிரம் பார்சி இன மக்கள் வாழ்வதாக தெரிகிறது.

பார்சிகளுக்கென்று நீண்ட பாரம்பர்யமும், தனித்துவமான பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இவர்கள் தங்களது கலாசார பழக்கங்களை விட்டுவிடுவதில்லை. அதில், குறிப்பிடத்தக்கது, இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு இரையாக்கிவிடும் இறுதிச்சடங்கு முறை. ஆனால், தற்போது கழுகுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் பார்சிக்களின் இந்த வழக்கமும் மாறிவிட்டது. 1795-ம் ஆண்டில் பார்சி இன மக்களில் சிலர் சென்னைக்கு வந்தார்கள் என்றும் ராயபுரத்தில் சிறுகுழுவாக வாழ்ந்தார்கள் என்றும் சென்னை வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் கடின உழைப்பால் இவர்கள் சென்னையில் காலூன்றி வணிகத்தில் சிறந்து விளங்கத் தொடங்கினர். ஒளியை கடவுளாக எண்ணி வணங்கும் இந்த மக்கள் தங்களுக்கான ஒரு நெருப்புக் கோயிலை உருவாக்க எண்ணினார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு கிட்டவே இல்லை.

ரஸ்தோம்ஜி, நவ்ரோஜி என்ற இருவரின் நிறுவனம் சென்னையில் புகழ்பெற்று விளங்கியது. ஜார்ஜ் கோட்டை ஆளுநரிடம் அனுமதி பெற்று ராயபுரம் பகுதியில் 24 கிரவுண்ட் நிலத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த நிறுவனம் தொழிலை விரிவுபடுத்தியது. அதனால் மேலும் சில பார்சி இன மக்கள் வடநாட்டில் இருந்து சென்னை ராயபுரம் பகுதியில் குடியேறினர். தாங்கள் வழிபட ஒரு கோயில் இல்லையே என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்ததும் அதற்காக நிதி வசூலிக்கும் பணி தொடங்கியது. 1896-ம் ஆண்டு பூனாவைச் சேர்ந்த வணிகர் சர் தின்ஷா பெட்டிட் 3600 ரூபாய் நன்கொடையாக அளித்தார். அந்த காலத்தில் இது மிகப்பெரியத் தொகை என்பதால் கோயில் வேலைகள் விரைவாகத் தொடங்கியது. சென்னை பார்சி மக்களின் தலைவராக இருந்த சொராப்ஜி பிராம்ஜி  என்பவரும் ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்து கோயில் பணிகளை தீவிரமாக்கினார்.

எனினும், கோயில் பணி பல காரணங்களால் தாமதப்பட்டு வந்தது. 1906-ம் ஆண்டு தனது மகனை அகாலமாக இழந்து போன பிரோஜ் கிளப்வாலா என்பவர், மகனுக்கான இறுதிச் சடங்கை செய்யக்கூட ஒரு ஆலயம் இல்லையே என்ற வருத்தத்தில் கோயில் பணியைத் தாமே ஏற்றுக்கொண்டு வேகமாக்கினார். தமது சொத்துகளை கொண்டு ஆலயப்பணியை மேற்கொண்டார். 2000 ரூபாயை ஆலய பூசாரியை நியமிக்க அளித்தார். 1910-ம் ஆண்டு முழுமையாக எழுப்பப்பட்ட பார்ஸிகளுக்கான நெருப்பு ஆலயத்துக்கு 'ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்' என்று பெயர் சூட்டப்பட்டது. அன்று ஆலயத்தின் ஏற்றப்பட்ட புனித நெருப்பு இன்றும் நூறு ஆண்டுகளை கடந்தும் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. 

சென்னை நகரின் மீது எம்டன் என்ற கப்பல் வந்து குண்டுகளை வீசிய போதும், சென்னையே இருளில் மூழ்கி கிடந்தபோதும் இந்த ஆலயத்தின் ஒளி அணையவே இல்லையாம். அப்போது இந்த ஆலயத்தின் பூசாரி பெஷோதான் என்பவர் தனது உயிரையும் மதியாது அத்தனை உறுதியோடு அந்த ஜோதியை காப்பாற்றி வந்தாராம். இந்தியாவில் நூற்றுக்கும் மேலான நெருப்புக் கோயில்கள் பார்சிக்களுக்கு இருந்தாலும், தமிழ்நாட்டின் ஒரே ஒரு நெருப்பு கோயில் சென்னையில் ராயபுரத்தில் மட்டுமே இருந்து வருகிறது. ஒளிவடிவமாக, நெருப்பின் பிழம்பாக சுடர் விட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆலயம் பார்சிகளின் தெய்வத்தையும் சென்னையின் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டியவாறு உள்ளது.