gadgets

'ஐ அம் பேக்' -சவுதிக்கு ஷாக் கொடுத்த ஷாமூன் வைரஸ்! #shamoonVirus

கடந்த நவம்பர் மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான சவுதி அரேபியா, இன்னும் அதில் இருந்து மீளவில்லை. ஹேக்கர்களின் இந்த வேலை, உலக நாடுகள் பலவற்றுக்கும் பதற்றத்தைக் கொடுத்துள்ளது. 

ஏற்கெனவே 2012-ம் ஆண்டு சவுதியை அதிரவைத்தது சைபர் தாக்குதல். நான்கு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மீண்டும் 'கம் பேக்' கொடுத்து, அந்நாட்டையே கதிகலங்கவைத்தது இத்தாக்குதல். குறிப்பாக, அரசு நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் போன்றவற்றின் வலைதளங்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தாக்குதல் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இது குறித்து சவுதியின் மாநில தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், '15 அரசு சார் நிறுவனங்கள் மற்றும் சவுதியின் தொழிலாளர் துறை என இவற்றின் அனைத்து தளங்களும் 'ஷாமூன் வைரஸ்' மூலம் ஹேக் செய்யப்பட்டன' என்று தெரிவித்தது. ஷாமூன் வைரஸ் என்பது, கணினியில் உள்ள அனைத்து ஃபைல்களையும் கரப்ட் செய்து அழித்து விடக்கூடியது. மேலும் ஃபைல்களை அன்பூட் செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரேபியாவின் வாரயிறுதி வேலைநாள் வியாழக்கிழமை என்பதால், அந்த நாளை சைபர் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்தனர் ஹேக்கர்கள். இரவு 8:45 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் வைரஸ்களின் ஊடுருவலைக் கண்டுபிடிக்க நேரம் ஆகும் என்பதுடன், அதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்பது ஹேக்கர்களின் எண்ணம். 

சவுதி அரேபியாவின் பொருளாதாரம் பெரிதும் சார்ந்திருப்பது எண்ணெய் நிறுவனங்களைத்தான். எனவே அவற்றின் வலைதளங்கள், தொழிலாளர் சார்ந்த தகவல்கள் என அனைத்தும் ஹேக் செய்யப்பட்டால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பில் இருந்து சவுதி வெளியே வர பல நாட்கள் ஆகும் என்பது ஹேக்கர்களிம் திட்டம். மேலும், இந்த மிகப் பெரிய தாக்குதல் மூலமாக ஹேக்கர்கள் தங்களின் பேரத்தை வலுவாக தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இன்றுவரை இதைச் செய்தது யார், எந்த அமைப்பு என்பது பற்றி எந்தத் தகவல்களும் இல்லை. 

'ஷாமூன் 2 வைரஸ்' தாக்குதல் பற்றி சவுதியின் பாதுகாப்பு துறை தன் அறிக்கையில், 'இது நாட்டுக்கு மிகப்பெரிய சேதம்' என்று குறிப்பிட்டுள்ளது. சவுதியின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பு, 'அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வமான அலுவலங்களின் வலைதளங்கள், சைபர் தாக்குதல் மூலம் தாக்கப்பட்டு உள்ளன. இதனால் நெட்வொர்க்கின் வேகம் குறைந்துள்ளது' என்று தெரிவித்திருந்தாலும், சேதத்தின் அளவு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 

2012-ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் ஹேக் ஆன கணினி திரைகளில், எரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியைப் பார்க்க முடிந்தது. இப்போது நடந்த 'ஷாமூன்-2' தாக்குதலில் மெடிட்டரேனியன் கடலில் மூழ்கி இறந்து போன சிரிய அகதியான மூன்று வயதுச் சிறுவன் ஆலன் குர்டி-யின் புகைப்படம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பட்ட அடியால், சவுதி அரசு சைபர் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த சூழலிலும், அது மீண்டும் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவுகளை சரிசெய்து, நஷ்டங்களை ஈடுகட்டுவது என்பது அரசுக்கு மிகக் கடினமான, அதிக செலவுகளை ஏற்படுத்தும் காரியம்.

விரைவில் மீளட்டும் சவுதி! - எஸ்.எம்.கோமதி(மாணவப் பத்திரிகையாளர்)