gadgets

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தெரிந்துகொள்ளவேண்டிய 5 ஷார்ட்கட்ஸ்! #MobileMania

லகம் முழுவதும் சுமார் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டில் இருக்கும் சில ஷார்ட்கட்கள் நமது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, நமக்கு பெரும் உதவியாகவும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள சிறு அறிமுகமே இந்தத் தொகுப்பு.

உரிமையாளர் விவரம் :

உங்கள் ஸ்மார்ட் போன் எங்காவது திடீரெனத் தொலைவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நல்ல மனிதர் உங்கள் மொபைலை தொலைந்த இடத்தில் இருந்து எடுக்கிறார் (அட! சும்மா பேச்சுக்குதான் பாஸ்). உங்களிடம் மொபைலை எப்படியாவது சேர்த்துவிட அந்த நல்ல மனிதர் நினைக்கிறார். ஆனால், எந்த விவரமும் தெரியாவிட்டால், அவர் எப்படி உங்களிடம் மொபைலை சேர்ப்பார்? லாக் செய்யாத மொபைல் என்றால், சமீபத்தில் யார் கால் செய்தது என்பதைப் பார்த்து விவரத்தைச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், நாம்தான் லாக் செய்திருப்போமே! மொபைலில் சிக்னல் இல்லையென்றால், நீங்கள் தொலைந்த மொபைலுக்குத் தொடர்புகொள்ளவும் முடியாது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில்தான் Owner Info எனப்படும் 'உரிமையாளர் விவரம்' உங்களுக்கு உதவும்.

Settings சென்று Screen Security மெனுவில் Owner Info இருக்கும். ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்றால் Settings -> Lock Screen சென்றால் Owner Info இருக்கும். இந்த இடத்தில் உங்கள் பெயர், தொடர்புகொள்ளவேண்டிய மாற்று அலைபேசி எண் போன்ற சில விவரங்களை டைப் செய்து சேமிக்கலாம். உங்கள் லாக் ஸ்க்ரீனிலேயே தற்போது இந்த விவரங்கள் காண்பிக்கப்படும். மேலும், விபத்து போன்ற நேரங்களில் உங்களுக்கு வேண்டப்பட்டவருக்கு விவரங்கள் தெரிவிக்கவும் இது உதவக்கூடும். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்!

டேட்டா இல்லாமல் மேப் பயன்படுத்தலாம் :

புதிதாக ஓர் இடத்துக்குச் செல்லும்போது 'மேப்ஸ்' அப்ளிகேஷன் மூலமாக நாம் செல்லவேண்டிய அலுவலகம் அல்லது வீட்டை கண்டறிந்து, வாசலிலேயே போய் நிற்போம். ஆனால், சிக்னலே கிடைக்காத இடத்துக்குச் செல்ல நேர்ந்தால், 'மேப்ஸ்' லோட் ஆகாமல் சுற்றிக்கொண்டிருப்பதையே வெகுநேரம் பார்த்துவிட்டு, வந்த வழியாகவே திரும்பவேண்டியதுதான். இதைச் சமாளிக்க, ஓர் எளிய வழி இருக்கிறது. இணைய வேகம் அதிகமான இடத்திலேயே புதிதாக செல்லவிருக்கும் இடத்தை கூகுள் மேப்பில் ஓப்பன் செய்தபின், சர்ச் பாரில் 'Ok Maps' என டைப் செய்யுங்கள். தற்போது அந்த இடத்தின் மேப்பை டவுண்லோட் செய்ய முடியும். அதன்பின் டேட்டா இல்லாமலும் டவுண்லோட் செய்த மேப்பை நாம் வழக்கம்போல பயன்படுத்த முடியும்.

சில நொடிகளில் கால் செய்யலாம் :

ஒரு நாளில் சிலருக்கு மட்டும் நாம் அடிக்கடி கால் செய்யவேண்டியிருக்கும். டயல் லிஸ்ட் சென்று அவர் பெயரை க்ளிக் செய்து கால் செய்வோம் அல்லது ஒவ்வொரு முறையும் காண்டக்ட் சென்று... அவர் பெயரைத் தேடியெடுத்து... டயல் செய்து... அவசரத்தில் இப்படித் தேடுவது ரொம்ப கஷ்டமா இருக்குல்ல! எளிய ஷார்ட்கட் மூலம் இனி சில நொடிகளில் கால் செய்யலாம் பாஸ். உங்கள் ஸ்க்ரீனை இரண்டு நொடிகள் லாங்க் ப்ரெஸ் செய்யுங்கள். கீழே ஷார்ட்கட்ஸ் சேர்க்கும் மெனு வரும். அதில் கான்டக்ட் க்ளிக் செய்தால் வரும் ஆப்சனில், அந்த நபரின் பெயரைத் தேர்ந்தெடுங்கள். அவரின் கான்டக்ட் தற்போது உங்கள் ஸ்க்ரீனில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த ஐகானை கிளிக் செய்து சில நொடிகளில் கால் செய்யவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ முடியும் பாஸ்!

ஒரே மொபைல் பல ப்ரொஃபைல்கள் :

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை சிலநேரம் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது வேறு யாருக்காவது பயன்படுத்தத் தரவேண்டியிருக்கலாம். குழந்தைகளிடம் மொபைலை கொடுக்கும்போது அவர்கள் தெரியாமல் சில அப்ளிகேஷன்களை டெலீட் செய்ய வாய்ப்பிருக்கிறது. உங்கள் மேனேஜருக்கு அவர்களை அறியாமல் கால் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. மூன்றாம் நபருக்கு மொபைலைத் தரும்போது உங்கள் ப்ரைவசியை பாதுகாப்பது சிரமம். இதற்கு ஒரு தீர்வாக ப்ரொஃபைல் ஆப்சன் இருக்கிறது. நோட்டிபிகேசன் பாரில் இருக்கும் ப்ரொஃபைல் ஐகானை க்ளிக் செய்தால் Guest என்ற ப்ரொஃபைல் இருக்கும். அதை தேர்வு செய்தபின் மொபைலை மற்றவர்களிடம் கொடுத்தால், அவர்களால் உங்கள் கேலரியை அக்சஸ் செய்ய முடியாது. கால் செய்யவும் கட்டுப்பாடுகள் உண்டு. Settings -> Users என்ற ஆப்சனில் நீங்களே புதிதாக ப்ரொஃபைலை உருவாக்கவும், அதற்கென சில கட்டுப்பாடுகளை உருவாக்கவும் முடியும். தேவையானபோது ஓனர் ப்ரொஃபைலுக்கு மாறினால் உங்கள் பழைய செட்டிங்ஸ் அப்படியே இருக்கும். ஆனால், இந்த வசதி ஆண்ட்ராய்டு லாலி பாப் மற்றும் அதற்கடுத்த வெர்சன்களில் மட்டுமே கிடைக்கிறது.


டேட்டா அலர்ட் :

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஜிபி அளவுக்கு மட்டுமே டேட்டா பேக் ரீசார்ஜ் செய்திருப்போம். டேட்டா பேக்கின் பேலன்ஸ் தீர்ந்தால், நமது டாப்-அப் பேலன்ஸ் பணத்தில் பெரும்பகுதி தீர்ந்திருக்கும். இதைத் தடுக்க நம் ஸ்மார்ட் போனில் ஒரு வழி இருக்கிறது. Settings சென்று Data usage ஆப்ஷனில் படத்தில் உள்ளவாறு நமது டேட்டா பேக்கின் கால அளவு மற்றும் டேட்டாவின் அளவை செட் செய்து விடலாம். டேட்டா பேக்கின் கால அளவு முடியும்போதும், டேட்டாவின் அளவு தீரும்போதும் ஸ்மார்ட்ஃபோன் தானாகவே டேட்டாவைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடும்.

- கருப்பு