gadgets

“மீம்ஸுக்குலாம் போட்டோஷாப் பயன்படும்னு நினைக்கவே இல்லை!” - ஃபோட்டோஷாப் தமிழனின் ஆச்சரியம் #VikatanExclusive


நாம் என்னவாக ஆக நினைக்கிறோம் என்பதற்கும், என்னவாக ஆகிறோம் என்பதற்கும் இருக்கும் வித்தியாசம்தான் வெற்றி. 

1980களின் காலம் அது. புகழ்பெற்ற திருச்சி ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறையை முடித்திருந்தான் அந்த மாணவன். இந்தியாவின் முதன்மையான மூன்று ஐ.ஐ.எம் களில் முதுகலை படிக்க வேண்டும் என்பது அவனது விருப்பம். மூன்றிலும் நேர்முகத்தேர்வில் தோல்வி. தனது முதல் ஆசை நிறைவேறாது என்பதைப் புரிந்துகொண்டான் அந்த இன்ஜினீயர். அடுத்த ஆசை வந்தது கம்ப்யூட்டர் மேல். அப்போது தமிழகம் முழுவதும் இருந்த கணினிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இயந்திரங்களுடன் இயங்க வேண்டியவன், கணினி மீது காதல் கொண்டதை வழக்கம் போல் அப்பா என்பவர் ஏற்கவில்லை. பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து வந்திருந்த ஆபர்களை அவனிடம் நீட்டினார். தனது முதல் ஆசை நிறைவேறாமல் போனாலும், தனக்குப் பிடித்த அடுத்த ஒரு விஷயத்தை தான் செய்ய வேண்டும் என்பதில் அந்த மாணவன் பிடிவாதமாக இருந்தான். சென்னை, அண்ணா சாலையில் சிறியதொரு அறையில் இருந்த ஒரு கணினி நிறுவனத்தை எட்டிப் பார்த்தான்.

“ஆயிரம் ரூபா சம்பளம்.. இஷ்டமா”

தமிழகத்தின் முக்கியமான பொறியியல் கல்லூரியில் படித்த இன்ஜினீயர். அனைத்துத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள். அவை எதையுமே அந்த நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1000 ரூபாய். வர்றியா? அவ்வளவுதான்.

யோசிக்காமல் “சரி” என்றான் அந்த மாணவன். அப்பாவின் சின்ன எதிர்ப்பையும் மீறி அன்று சின்ன அறையில் தொடங்கிய அந்த மாணவனின் பயணம் இன்று சென்று சேர்ந்திருக்கும் இடம்... நம் கற்பனைக்கும் எட்டாத தூரம்.

சீத்தாராமன் நாராயணன். போட்டோஷாப்பை ஓப்பன் செய்ததும் அந்த மென்பொருளுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் வரிசையாக ஓடும். அதில் இரண்டாவது பெயர் “சீத்தாராமன் நாராயணன்”. போட்டோஷாப் மென்பொருளை உருவாக்கிய அடோப் நிறுவனத்தில் இன்று சீத்தா (அமெரிக்கர்கள் வாயில் நுழைவது இதுதானாம்) முக்கியமான நபர். 80களில் கணினி மீது அவருக்கு இருந்த காதல் இம்மி அளவும் குறையாமல் இன்றும் இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் அடோபில் இருந்தாலும், நிர்வாகம் சார்ந்து வேலையை மாற்றிக்கொள்ளாமல் அவர் விரும்பிய கணினி சார்ந்தே இயங்குகிறார். 

அடோபில் சீத்தா சேர்ந்தபோது அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. அதுவரை மேக் கணினிகளுக்கு மட்டுமே இருந்த மென்பொருளை, விண்டோஸ் அமைப்புக்கு மாற்ற வேண்டும். அதை வெற்றிகரமாக மாற்றி அமைத்தவருக்கு இன்னமும் சவால்கள் குறையவில்லை. இப்போது அந்த போட்டோஷாப்பை மொபைலுக்கு ஏற்றதாக மாற்றிக்கொண்டிருக்கிறார் சீத்தா. இத்தனை ஆண்டுகளில் போட்டோஷாப் நிறைய மாறியிருக்கிறது. மாறாத சிலவற்றில் சீத்தாவின் பெயர் முக்கியமானது.

சுந்தர் பிச்சை போல இந்தியர்கள் நிறைய பேர் சிலிக்கான் வேலியில் பல நிறுவனங்களின் உயர் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். புகழ் பெற்றிருக்கிறார்கள். சீத்தாவின் உயரம் அவை எதற்கும் குறைந்தது அல்ல. ஆனால், புகழ் வெளிச்சம் விரும்பாமல் ஒதுங்கியே வாழ்கிறார் இந்த மயிலாப்பூர்வாசி. விட்டுவிடுவார்களா நெட்டிசன்ஸ்? இவரது நீ....ளமான பெயரை போட்டோஷாப் கிரெடிட்ஸில் பார்த்த வருடமே இவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பதில் சொல்லும்போது கூட “என் பாஸ் தாமஸ் நால், பேர் சின்னதா போயிடுச்சு. என் அப்பா புண்ணியத்துல என் பேர் சீத்தாராமன் நாராயணன்னு பெருசு. அதனால ஈசியா கண்ணுபடுது” என்கிறார் சீத்தா. அந்த ரசிகர்களும், அந்த அன்பும் வெறும் பெயருக்கானது மட்டும் இல்லை என்பது சீத்தாவுக்கும் தெரியும். 

சென்ற வாரம் சீத்தா சென்னைக்கு வந்திருந்தார். அவரிடம் பேசியபோது “நானே விகடன் ஆஃபீஸ்க்கு வர்றேனே.. நாங்களும் விகடன் படிச்சுதான் வளர்ந்தோம்” என சிரித்தார். அலுவலகம் வந்தவரிடம் பேசியதில் இருந்து...

உங்கள் குடும்பம் பற்றி...

என் கூட பிறந்தவங்க அஞ்சு பேர். நான் ரெண்டாவது. அப்பா இப்ப இல்லை. அம்மா என் கூடத்தான் அமெரிக்காவுல இருக்காங்க. மனைவி ஆன்நெட், அமெரிக்கன். காதல் திருமணம் தான். இப்ப எங்களுக்கு மூணு குழந்தைங்க. எப்படா இந்தியா வரலாம்னு இருக்கேன். 

ஏன் இந்தியா திரும்ப ஆசை? ட்ரம்ப் தான் காரணமா?

அவரும் தான். ஆனால், நான் அமெரிக்க பிரஜை. எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஒரு தலைவன் என்பவன் பொறுமையாக இருக்க வேண்டும். அதுதான் முதல் தகுதி. ட்ரம்ப் எப்போதுமே பதற்றமாக இருக்கிறார். ஒரு நாட்டை ஆளும் டெம்பர்மெண்ட் அவரிடம் இல்லை. அவர் எடுக்கும் முடிவுகள் காமெடியா இருக்கு. நான் வேலை செய்யும் அடோப் நிறுவன டெவலப்பர்களில் 40% இந்தியர்கள். சிலிக்கான் வேலியில் இருக்கும் எல்லா நிறுவனங்களின் முக்கிய பொறுப்பிலும் இந்தியர்களும், மற்ற நாட்டினரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ட்ரம்ப் வெளியேறச் சொன்னால் என்ன ஆவது? 

நீங்கள் அமெரிக்கா செல்லும்போது உலகமயமாக்கல் சாத்தியமாகவில்லை... இப்போது பார்க்கும்போது ஒரு நாடாக இந்தியா எப்படி வளர்ந்திருக்கிறது?

நிச்சயம் நல்ல பாதையில் தான் இந்தியா போகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் போதாது. இன்னும் முன்னால் நாம் சென்றிருக்க வேண்டும். நான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவன் தான். ஆனால், அவர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்றபோது நம்முடைய உள்கட்டுமானம் மற்ற நாடுகளை விட சிறந்ததாக இருந்தது. ஜப்பான், ஜெர்மனி, சைனா போன்ற நாடுகளைவிட நாம் மேலான நாடாக இருந்தோம். நல்ல மனித வளமும் நம்மிடையே உண்டு. அப்படி என்றால், இந்தியா இந்நேரம் நான் சொன்ன நாடுகளை விட பெரிய சக்தியாக வளர்ந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லையே. இனிமேலாவது அந்த வேகத்தில் இந்தியா வளர வேண்டும். ட்ரம்ப்பின் முடிவு அந்த சாத்தியத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.

அடிக்கடி கம்பெனி மாற வேண்டும் என்பதுதான் இந்திய ஐ.டி கலாசாரம். நீங்கள் எப்படி 25 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் இருக்கிறீர்கள்?

அப்படியா? அதெல்லாம் கிடையாது. இந்தியாவில் சோஷியல் பிரஷர் அதிகம். நிறைய மார்க் வாங்கணும், அடுத்து நல்ல கம்பெனில வேலை கிடைக்கணும். அப்புறம், புரமோஷன். சீக்கிரம் மேனேஜர் ஆகணும்னு எல்லா ஸ்டேஜிலும் ஒரு அழுத்தம் இருக்கு. ஒரு டெக்னாலஜி ஆள் ஏன் மேனேஜர் ஆகணும்? டெக்னாலஜில எவ்ளோ பெரிய இடத்துக்குப் போனாலும் “இன்னும் மேனேஜர் ஆகலையா”ன்னுதான் கேட்பாங்க. அவங்களுக்கு மேனேஜர் மட்டும்தான் வளர்ச்சி. அதனாலதான் அடிக்கடி வேலை மாறி, மேனேஜர்ன்ற அடைமொழிக்கு ஆசைப்படுறாங்க. நான் இப்ப அடோப்ல சீஃப் பிரின்சிபல் சயிண்டிஸ்ட். ஒரு வேளை மேனேஜ்மெண்ட் பக்கம் போயிருந்தா மோசமான மேனேஜர் தான் ஆகியிருப்பேன். மனசு சொல்றத கேட்டு அதுக்காக உழைத்தால் போதும். வெற்றி தானா வரும்.

போட்டோஷாப்புக்கு வருவோம். இந்தியாவில் போட்டோஷாப் இல்லாமல் அரசியலே இல்லை. தெரியுமா?

பேனர்களைதானே சொல்கிறீர்கள். பார்த்தேன். போட்டோஷாப்பின் ஆரம்ப காலத்தில், நானோ என் பாஸோ இப்படியெல்லாம் யூஸ் ஆகும் என நினைத்ததே இல்லை. ஆனால், அவ்வளவு கிரியேட்டிவிட்டி. மீம்ஸுக்கும் போட்டோஷாப் நிறைய பயன்படுத்துகிறார்கள். எனக்கும் மீம்ஸ் பிடிக்கும். கேப்டன் மீம்ஸ் தான் என் சாய்ஸ். வெடித்து சிரிப்பேன்.

உங்கள் பொழுதுபோக்குகள்...

கிரிக்கெட் பார்ப்பேன். ஜி.ஆர்.விஸ்வநாத் தான் என் ஃபேவரைட். இப்ப புஜாரா, முன்ன டிராவிட். அந்த டைப் ஆட்களை பிடிக்கும். அப்புறம் சைக்கிளிங். இப்ப நான் இருக்கிற வீட்டுல இருந்து ஆஃபீஸ் 17 கிமீ. ஆனா, தினமும் சைக்கிள்ளதான் ஆஃபீஸ் போறேன். இந்தியாவுக்கு வந்தப்ப டிரை பண்ணலாம்னு சைக்கிள் கூட வாங்கினேன். கொஞ்ச நேரம் பீச் ரோட்டுல ஓட்ட முடிந்தது. அவ்வளவுதான். மற்ற ஏரியால எல்லாம் வாய்ப்புகளே இல்லை.

தமிழனிடம் சினிமா பற்றி கேட்காம இருக்க முடியுமா? படங்கள் பார்ப்பீர்களா?

பார்ப்பேன். காமெடி படங்கள் தான் நம்ம ஏரியா. போன வருஷம் வந்ததுல 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' ரெண்டு தடவை பார்த்தேன். 'சூது கவ்வும்' பிடிச்சது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகணும்னு நினைச்சா காமெடி படங்களா போட்டுப் பார்ப்பேன். காலேஜ் டைம்ல ரஜினி தான் நம்ம ஃபேவரைட்.


- கார்க்கிபவா

படங்கள்: ஆ.முத்துக்குமார்