gadgets

படுக்கை பியானோ... ரேடியோ தொப்பி... பூச்சி இழுக்கும் வண்டி..! #VintageInventions

இந்த உலகைப் படிப்படியாக முன்னேற்றிக் கொண்டு வந்தது அறிவியல் தான். அறிவியல் இல்லையேல் இந்த அகிலம்...இருங்க, இருங்க... இவ்ளோ சீரியஸ் ஆன விஷயமெல்லாம் இல்ல பாஸ். சும்மா கூலா,  அப்படியே திரும்பிப் பார்க்கும் போது சில கலாட்டாவான பழைய விஷயங்கள் கண்லபட்டது. இன்னிக்கு தமிழ்நாட்டோட டாக்கே ஆர்கே நகர் தொப்பிய பத்தி தான் இருக்கு. அந்தத் தொப்பில தொடங்குன தேடல்,  எங்க கொண்டு போய்விட்ருக்குங்குறத கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்குங்க :


ஃபுல் பேஸ் ஸ்விம்மிங் மாஸ்க்  (Full Face Swimming Mask):

பதறாதீங்க... பதறாதீங்க... முகமூடிக்குப் பின்னாடி இருக்குறது அழகான முகம் தான். கருப்பை வெறுப்பாகப் பார்த்த காலகட்டம். சிகப்பை சிறப்பாக பார்த்த காலகட்டம். நடக்கும்போது வேணா ஜெனிபர் டீச்சர் மாதிரி குடை பிடிச்சு, வெயில் படாம பார்த்துக்கலாம். ஆனா, நீச்சல் குளத்திலயோ, கடற்கரையிலயோ குளிக்கும் போது கலர் கொஞ்சம் கருத்துட்டாக் கூட " ஐயோ... ஐயையோ"ன்னு பதறிய பெண்களுக்காகவே பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த "ஃபுல் பேஸ் ஸ்விம்மிங் மாஸ்க்" . இந்தக் கொடுமைய தட்டிக் கேட்க ஆளே இல்லையான்னு எல்லோரும் காத்திட்டிருந்த போது தான், ஒரு புண்ணியவான் சன் ஸ்கிரீன் லோஷனைக் கண்டுபிடித்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

பேபி கேஜ் (Baby Cage) :

"குழந்தைகளுக்கு வெயில் நல்லது. ஒரு நாளைக்கு கொஞ்ச நேரமாவது வெயில்ல குழந்தைய காட்டுங்க... இல்ல குழந்தைக்கு வெயில காட்டுங்க" இப்படி ஏதோ ஒரு லண்டன் டாக்டர் சொன்னதன் விளைவா விளைஞ்சது தான் இந்த பேபி கேஜ். 1930கள்ல வீடுகள் நிறைஞ்சிருக்கும், லண்டன் வீதிகள்ல நடந்தீங்கன்னா, " கியா...மியா...ஹா...ஹி...ஹூ...ஷூ...ஊ"ன்னு ஏக சத்தங்கள் கேட்கும். அப்படியே தலைய கொஞ்சம் நிமிர்த்திப் பார்த்தா வீட்டு சுவற்றுக்கு வெளியில கூண்டுகள் இருக்கும். அந்தக் கூண்டுகளுக்குள் இந்த "சுட்டிக் குழந்தைங்க" இருக்கும். அந்த சமயத்துல "பேபி கேஜ்" பெரிய வியாபார பொருளா இருந்திருக்கு. 

கோன் மாஸ்க் (Cone Mask):

வெயிலடிச்சா தான் மேக்-அப் கலையுமா என்ன?, பனியடிச்சாலும் மேக்-அப் கலையத் தான் செய்யும். 1930கள்ல கனடாவுல பிரபலமாக இருந்தது இந்த "கோன் மாஸ்க்". அதிகப்படியான பனிப் பொழிவின் காரணமாக பெண்கள் வெளியே போகும் போது அவங்களுடைய மேக்-அப் கலையறத தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அரிய கண்டுபிடிப்பு.

குத்தும் முள் கவசம்:

அமெரிக்காவின் ரசல் ஓக்ஸிற்கு நாடி, நரம்பு, எலும்பு, காது, வாய், மூக்கு, கண், நெற்றி, விரல்கள்... என எல்லாத்திலயும் ஏதாவது புதுசா கண்டுபிடிக்கணுங்குற வெறி ஏகத்துக்கும் ஏறியிருந்தது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால உலக சமூகத்திற்கே புது ரத்தம் பாய்ச்சிட முடியும்ன்னு நம்பினார். நாம் கூட்டமான இடத்துல இருக்கும் போது, நம்ம மேல வேற ஒருத்தர் இடிக்கும் போது அவங்கள ஊசி வச்சு அப்படியே குத்துணும் போல இருக்கும்ல?... அந்த வெறிய தீர்த்துக்க இவரு கண்டுபிடிச்ச அந்த முள் கவசம் வேற லெவல். 
"காதல் கொண்டேன்" தனுஷ் கணக்கா நூடுல்ஸ் சாப்பிட கஷ்டப்படாம இருக்க ஒரு கண்டுபிடிப்பு, தலைக்குக் குளிர்ச்சி கொடுக்க ஒரு கண்டுபிடிப்புன்னு... இவர் ஒரு "தி மாஸ் சயின்டிஸ்ட்".

பூச்சிகள் இழுக்கும் வண்டிகள்:

ராய் ஹெக்லர். இந்த நூற்றாண்டின் அவதார புருஷன். அறிவியலின் 20000.000 வெர்ஷன். சின்ன, சின்ன உண்ணி பூச்சிகளை வைத்து சர்க்கஸ் நடத்தியவர். அந்தப் பூச்சிகள் இழுக்கும் வண்டிகளை 1900த்திலேயே கண்டுபிடித்தது அறிவியலின் ஆகப்பெரும் சாதனை.

 படுக்கை பியானோ:

பிரிட்டனில் 1935ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் யாரென்று தெரியவில்லை. பொதுவாக, ஒரு ஸ்டூலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தபடியே பியானோ வாசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இது அட்டகாச கண்டுபிடிப்பாக இருந்தது. 

நகரும் வீடுகள்:

நம்ம இந்தியாவுல தான் "கேரவன்" என்றாலே ஏதோ ஹீரோ, ஹீரோயின்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டது மாதிரி இருக்கு. ஆனா, வெளிநாடுகள்ல அது ஒரு தனி கம்யூனிட்டி. அது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கு. அப்படி, அந்தக் காலத்துல கேரவன்களோட முன்னோடிகளா இருந்தது இந்த நகரும் வீடுகள். இது தான் பிற்காலத்துல ரஜினி நடிச்ச 'கழுகு' படத்துல வந்தது என்று சொன்னால், அது மிகையாகா...து

ரேடியோ தொப்பி  (Radio Hat):

இது மார்ச் மாதம். தமிழ்நாட்டளவுல இன்னிக்கு புல் ட்ரெண்டிங்க்ல இருக்குறது தொப்பி தான். அப்படியே ஆர்.கே. நகர் தொப்பிலருந்து டைம் மெஷின்ல டிராவல் செய்து 1949 அமெரிக்காவுக்குப் போனீங்கன்னா... அங்கயும் தொப்பி தான் ட்ரெண்டிங். போற இடத்தில எல்லாம் பாட்டுக் கேக்கணும்ன்னு ஆசைப்பட்ட இசை வெறியர்களுக்காக உருவாக்கபப்ட்டது தான் இந்த ரேடியோ தொப்பி. சிகப்பு, மஞ்சள், பிங்க், ஆரஞ்ச் என பல வண்ணங்கள்ல கிடைச்ச இதோட விலை 7 டாலர். பணக்காரர்களுக்கானதா மட்டுமே இருந்த ரேடியோ தொப்பி, சேல்ஸ்ல செல்ஃப் எடுக்காம வந்த வேகத்திலேயே, காணாமப் போயிடுச்சு. ( ஐயையோ... அமெரிக்க தொப்பியோட முடிவுக்கும், ஆர்.கே.நகர் தொப்பியோட முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...) 

- இரா. கலைச் செல்வன்.