gadgets

அமைச்சர்கள் சிக்கிக்கொள்ளாமல் கணக்கு வைத்துக்கொள்ள உதவும் 5 ஆப்ஸ்! #FinancialApps

செய்வன திருந்தச் செய் என்ற ஔவையாரின் வாக்குக்கு, வாழும் உதாரணங்களாக திகழ்கின்றனர் நம் தமிழக அமைச்சர்கள். சமீபத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வருமானத் துறையினர் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆவணங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். யாருக்கு, எவ்வளவு எனத் தனித்தனியாக எழுதிவைக்கப்பட்ட கமிஷன் கணக்குகளால், வேறுவழியின்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையே தள்ளிவைத்துள்ளது தேர்தல் கமிஷன். இப்படிக் காகிதத்தில் கணக்கு எழுதிவைப்பது எல்லாம் பழசு பாஸ். ஆண்ட்ராய்டு கணக்குதான் இப்பப் புதுசு! 

பச்சிலையைக் கசக்கி, வீட்டுச் சுவரில் பால் கணக்கு எழுதியதுதான் பலருக்கும் பால்ய காலங்களில் நடந்திருக்கும். ஆனால் தற்போது நிலைமையே வேறு. நீங்கள் சம்பளம் வாங்கியது முதல் டெபிட் கார்டில் செய்யும் ஷாப்பிங் வரை அனைத்தையும் ஆப்ஸ் மூலமே நிர்வகிக்கலாம். சிங்கிள் ஸ்வைப்பில், உங்கள் கணக்குப் பிள்ளையிடம் கணக்குக் கேட்பது போல இவை மூலம் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அப்படி உங்களுக்கு உதவக்கூடிய சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் அறிமுகங்கள் இங்கே...

மை ஃபைனான்ஸஸ்! (My Finances)

இந்த ஆப்பை டவுன்லோட் செய்தாலே, உங்களுக்கான கணக்கை உருவாக்கிவிடும். பிறகு, உங்களின் தினசரி வரவு செலவுக் கணக்குகளை இதில் பதிவிட்டு நிர்வகிக்கலாம். நீங்கள் தினந்தோறும் செய்யும் செலவுகளான உணவு, துணிமணிகள், கணினி, பெட்ரோல், சினிமா ஆகிய அனைத்துவிதமான செலவுகளையும் தனித்தனியாகப் பதிவிட முடியும். இதன்மூலம் உங்களால் நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் செய்த செலவு மற்றும் வரவு குறித்த விவரங்களைத் தெளிவாகக் கணக்கிட முடியும். அத்துடன், அந்த மாதத்தில் நீங்கள் உணவுக்காக எந்த அளவுக்குச் செலவு செய்துள்ளீர்கள், உடைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்பன போன்ற விவரங்களையும் கணக்கிட முடியும் என்பதால், அதிக அளவில் செலவு பிடிக்கும் விஷயங்களைக் கண்டறிந்து, குறைக்க முடியும். எனவே அமைச்சர்கள் இதனை இன்ஸ்டால் செய்தால் தஞ்சாவூர்ச் செலவு எவ்வளவு, அரவக்குறிச்சிச் செலவு எவ்வளவு என்றெல்லாம் தனித்தனி பைல் போட்டுக்குழம்ப காகிதங்களை வீணாக்கவேண்டாம். இந்த ஆப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

இதே விவரங்களை சார்ட் மூலமாக, தெளிவாகப் பார்க்கும் வசதியும் இருக்கிறது. வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களுக்குமான வரவு செலவு விவரங்களைக் கணக்கிட வேண்டுமானால், இரண்டுக்கும் தனித்தனியே கணக்குகளைத் தொடங்கி நிர்வகிக்க முடியும். 
ஒரு வேட்பாளருக்கு இவ்வளவுதான் எனத் தேர்தல் ஆணையம் செலவு வரம்பு நிர்ணயித்தாலும், அதைத்தாண்டி செலவு செய்வதுதானே இடைத்தேர்தலின் சாமுத்ரிகா லட்சணம். ஆனால் உங்களின் லிமிட்டைத் தாண்டாமல் இருப்பதற்காக, வரவை விடவும், செலவு அதிகமாகப் போனால், அதை இந்த ஆப் எளிதாகக் காட்டிவிடுகிறது. இணையம் இல்லாத சமயங்களிலும் இது இயங்குகிறது.

ஃபைனான்ஷியல் ஆப்களில் இருக்கும் சிக்கல்களில் ஒன்று, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தப் புரிதல் இல்லாததே. இந்த ஆப்ஸை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சி வீடியோக்கள் இதில் உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பு  மற்றும் நிறங்களுடன் சிக்கல்கள் இல்லாத, எளிதான பொருளாதார ஆப்பாக இருக்கிறது இது. 

ஃபாஸ்ட் பட்ஜெட் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Fast Budget - Expense Manager)

பெயருக்கு ஏற்றாற்போல, விரைவாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது ஃபாஸ்ட் பட்ஜெட் ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, திறந்தாலே எப்படிப் பயன்படுத்துவது என்பதை கிராஃபிக்ஸ் மூலம் விளக்கி விடுகிறது. உங்களுடைய வரவு செலவு விவரங்களை மற்ற ஆப்ஸில் இருப்பதைப் போலவே, இதிலும் உள்ளீடு செய்துகொள்ள முடியும். 

இதில் நீங்கள் இ-மெயில் உதவியுடன் கணக்கு ஒன்றைத் தொடங்கி லாக்-இன் செய்வதன் மூலமாக, மேலும் நான்கு டிவைஸ்களில் இந்த பட்ஜெட் விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். அத்துடன் கிரெடிட் கார்டு விவரங்களையும் இதில் இணைத்து நிர்வகிக்க முடியும். இதில் இருக்கும் உங்கள் தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க, பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யவும் முடியும். எனவே எந்த டிரைவரிடமும் கொடுத்து வீசச்சொல்லும் தேவை அமைச்சர்களுக்கு இருக்காது. 

தகவல்களை csv மற்றும் xls பார்மேட்டில் சேமித்துக் கொள்ளவும் முடியும். ஆனால், இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது மைனஸ். 

ட்ரைகவுன்ட் (Tricount)

குழுவாகச் செலவு செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடிய எளிதான ஆப்தான் இந்த ட்ரைகவுன்ட். எனவே இடைத்தேர்தல் சேவையாற்றும் மொத்த அமைச்சர்களும் இதில் ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளலாம். 

சுற்றுலா செல்பவர்கள், ஒன்றாகத் தங்கியிருப்பவர்கள், ஏதேனும் திட்டமிட்ட செலவுகள் ஆகியவற்றின்போது, ஒரு குழுவில் இருக்கும் அனைவருமே செலவு செய்வோம். ஆனால், யார் எவ்வளவு செலவு செய்தார்கள், யார், யாருக்குப்  பணம் தர வேண்டும், மொத்தச் செலவு எவ்வளவு என எந்த விஷயமுமே நமக்கு தெரியாது; அல்லது சரியாகக் கணக்கிட மிகவும் கடினமாக இருக்கும். ‘அந்த வேலையை என்னிடம் விட்டுவிடுங்கள்’ எனச் சொல்கிறது இந்த ஆப். 

உதாரணமாக, மூன்று நண்பர்கள் ஒரு சுற்றுலா செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவு என அனைத்துச் செலவுகளையும் மூவருமே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு தொகையை செலவிடுவார்கள். ஒருவர் செய்யும் செலவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். ஆனால், அந்தப் பயணத்தின் இறுதியில் மூவருமே ஒரே தொகையைச் செலவு செய்ய வைப்பதுதான் இந்த ஆப்பின் பணி. யார் அதிகமாகச் செலவு செய்துள்ளார்களோ, அவருக்குக் குறைவாகச் செலவு செய்தவர் எவ்வளவு தரவேண்டும் என இந்த ஆப் சொல்லிவிடும். இந்த லாஜிக்தான் இந்த ஆப்பின் சக்சஸ் பாயின்ட்.

ஒரு குழுவில் 30 பேர் வரை இதில் சேர்க்க முடியும் (இதை டெவலப் பண்ணவர் எந்த லாஜிக்கில் இந்த எண்ணிக்கையை வைத்தாரோ!). அத்துடன் இந்த ஆப்பை, குழுவில் உள்ள அனைவருமே ஒரே நேரத்தில் பயன்படுத்தி, தங்கள் செலவு விவரங்களை இதில் பதிவு செய்யலாம். குழுவில் இருக்கும் மற்றவர்கள் செய்யும் செலவு விவரங்கள் தானாக உங்கள் போனில் சிங்க் ஆகிவிடும். கணினியிலும் இதனைப் பயன்படுத்தலாம். குழுவை உருவாக்குபவர் அந்த லிங்க்கை, நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த இணைப்பு மூலம் குழுவில் புதியவர்கள் இணைந்துகொள்ளலாம். எனவே ஒவ்வொருவர் பெயரையும் போட்டு, போன் நம்பர் எல்லாம் போட்டுவைக்க வேண்டாம் மாண்புமிகுக்களே!

மொபில்ஸ்: பட்ஜெட் ப்ளானர் (Mobills: Budget Planner)

உங்களின் தினசரி வரவு செலவுகளை நிர்வகிக்க உதவும் ஆண்ட்ராய்டு டைரிதான் இந்த ஆப். இதனை போனில் இன்ஸ்டால் செய்தவுடன் கூகுள், ஃபேஸ்புக் ஐ.டி-கள் மூலமாகவோ தனியாகக் கணக்கு ஒன்றைத் தொடங்கியோ பயன்படுத்த முடியும். மற்ற ஃபைனான்ஸ் ஆப்களில் இருப்பது போன்றே வரவு செலவுகளைக் குறித்துக்கொள்ளும் வசதி, மாதாந்திர மற்றும் வாராந்திர செலவுகளை பைசார்ட் மூலம் காணும் வசதி, கிராஃப் வசதி, பாஸ்வேர்டு லாக் வசதி ஆகியவை இதிலும் உண்டு. 

ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் செலவுகளை, தனித்தனியாக பிரித்துக் குறித்துக்கொள்ளலாம். நீங்கள் இதுவரை செலவு செய்த பணத்தின் மதிப்பு, உங்களிடம் இன்னும் மீதம் இருக்கும் பணத்தின் மதிப்பு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்தையும் இதில் எளிதாகப் பார்க்க முடிகிறது. இதனைப் பயன்படுத்த எப்போதும் இணையவசதி தேவையில்லை. ஆஃப் லைனிலும் இதனைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஆன்லைன் வந்தவுடன் உங்கள் கணக்கு விவரங்களை இணையத்தில் சிங்க் செய்துகொள்ளும்.
ஆப்பை முதல்முறை இன்ஸ்டால் செய்து திறந்ததுமே, ஆப் பற்றிய டிப்ஸ் இருக்கின்றன. புதியவர்கள் எளிதில் புரியும்படி இல்லாமல், கொஞ்சம் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்கிற மாதிரி  இருக்கிறது இந்த ஆப் டிசைன். சில கூடுதல் வசதிகளைப் பயன்படுத்த, இதன் ப்ரோ வெர்ஷனைப் பயன்படுத்தவேண்டும். ஆனால், இதன் இலவச வெர்ஷனிலேயே தேவையான அளவுக்கு வசதிகள் இருப்பதால், அதற்கு அவசியம் ஏற்படாது. 

இந்த மாதத்தில் உங்கள் பட்ஜெட்டுக்கான வரம்பு எவ்வளவு என்பதை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கேற்றபடி உங்கள் செலவுகளைத் திட்டமிட முடியும். அதிக ஆப்ஷன்கள் இல்லாமல், எளிமையான ஒரு ஆப் வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆப் நல்ல சாய்ஸ். 

மணி மேனேஜர் எக்ஸ்பென்ஸ் & பட்ஜெட் (Money Manager Expense & Budget)

நீங்கள் இன்ஸ்டால் செய்து, திறந்தாலே இந்த ஆப் பயன்படுத்தத் தயாராகிவிடுகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தும்படியும், அதிக ஆப்ஷன்களுடனும் இருக்கிறது இந்த மணி மேனேஜர். உங்களுடைய வரவு மற்றும் உங்களுடைய செலவு இரண்டையும் வெகு எளிதாகக் கணக்கிடவும் நிர்வகிக்கவும் உதவும் ஆப் இது. 

உங்களுடைய வருமானம், தினசரி செலவுகள், எந்த விஷயங்களுக்காக எவ்வளவு செலவழிக்கிறீர்கள், அலுவலகக் கணக்குகள், வாராந்திர, மாதாந்திரக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்கும் வசதி எனத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கின்றன. ஆன்லைனில் இருக்கும்போது, ஆப்பில் வரும் விளம்பரங்கள் மட்டுமே எரிச்சல் தருவதாக இருக்கிறது. மற்றபடி எல்லா ஏரியாவிலும் கில்லியாக இருக்கிறது இந்த ஆப். அதேபோல, உங்கள் பட்ஜெட் தகவல்களை பேக் அப் எடுத்துக்கொள்ளவும் மின்னஞ்சல் அனுப்பிக்கொள்ளவும் கூகுள் ட்ரைவில் பதிவு செய்துகொள்ளவும் இதன்மூலம் முடியும். எனவே தகவல்களை மூட்டையில் போட்டு, பண்ணை வீட்டுக்கு அனுப்பும் பழைய சிவாஜி பட ஸ்டைல் எல்லாம் இங்கே தேவைப்படாது.

உங்கள் செலவு மற்றும் வரவு விவரங்களைப் பதிவு செய்யும்போது, எளிதாகக் கணக்கிட உதவுவதற்காக இன்பில்ட் கால்குலேட்டர் வசதி இருக்கிறது. அதேபோல மாதம், வருடம் என உங்கள் வரவு செலவுகளை சார்ட் மூலமாகக் காணலாம். ஏகப்பட்ட ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் இருந்தாலும், ஆப்பின் தரமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் மூலமாக, சிறந்த பட்ஜெட் ஆப்களில் ஒன்றாக இருக்கிறது இது. 

'கஷ்டப்பட்டு டைப் பண்ணி, ஏ 4 ஷீட்ல பிரிண்ட் எடுத்து, பீரோவுக்குள்ள பூட்டி வச்சதையே எடுத்துட்டாய்ங்க! போனை ஈஸியா ஹேக் பண்ணிட மாட்டாரா நம்ம மித்ரோன் ஜி?' - அப்படின்னு கேக்கறீங்களா! அதுக்கும் ஒரு வழி இருக்கே!

- ஞா.சுதாகர்.