gadgets

2000 ரூபாய் முதலீட்டில் வீட்டிலேயே மீத்தேன் தயாரிக்கலாம்..!

ஒரு நாடு தனக்குத் தேவையான எரிசக்தியை அதுவே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். அந்தத் தன்னிறைவுதான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிறார்கள். அதற்காகத்தான் பல பேரின் எதிர்ப்புக்கு இடையே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு பலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். சரி. இதே வாதத்தை நாமும் முன் வைப்போம். இங்கே நாட்டுக்கு பதிலாக வீட்டுக்கு என மாற்றிக்கொள்வோம். அதாவது, ஒவ்வொரு வீடும் தனக்குத் தேவையான எரிசக்தியை அதுவே உற்பத்தி செய்தால்தான் நாடு முன்னேறும். சரியா?

நாட்டுக்குத் தேவையான எரிசக்தியை நெடுவாசல் போன்ற இடங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். வீட்டுக்குத் தேவையானதை? 

அதை உங்கள் வீடுகளில் இருந்து எடுக்கலாம். மலிவு விலையில், பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லாமலே ஒரு வீட்டுக்குத் தேவையான எரிபொருளை நாமே தயாரிக்கலாம் என்பதை பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அதில் கேரளாவை சேர்ந்த ஶ்ரீதரும் ஒருவர்.

ஶ்ரீதர் வீட்டில் ஒரு எளிமையான மீத்தேன் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. தொழிற்சாலை என்றதும் ஜெர்க் ஆக வேண்டும். தண்ணீர் ஊற்றி வைக்கும் நீல நிற டிரம், இரண்டு லாரி டயர்கள், கொஞ்சம் பைப் லைன். அவ்வளவுதான். 

எப்படி செயல்படுகிறது?

முதலில் டிரம்மில் மூன்று வழிகளை உருவாக்க வேண்டும். ஒன்று, குப்பைகளை உள்ளே கொட்டும் இன்லெட். அடுத்தது, கழிவுகளை வெளியேற்றும் அவுட்லெட். கடைசியாக மீத்தேன் செல்லும் அவுட்லெட். மூன்று துளைகளும் காற்று புகாவண்ணம் உறுதியாக சீல் செய்யப்பட வேண்டும். 

நீல நிற டிரம்மில் 60 கிலோ  மாட்டுசாணத்தையும், தண்ணீரையும் போட வேண்டும்.அது அவுட்லெட் வால்வுக்கு சற்று மேல் வரை இருக்க வேண்டும்.முதல் முறை மீத்தேன் உற்பத்தி ஆக சில நாட்கள் ஆகும். அந்தந்த ஊர் காலநிலையை பொறுத்து சில வாரங்கள் வரை கூட ஆகலாம். அப்படி மீத்தேன் உருவானதும், தினமும் வீட்டில் இருந்து கிடைக்கும் குப்பைகளை போடலாம்.

கழிவுகளில் திட, திரவ வகைகள் உண்டு. முதலில் திடக்கழிவுகளை சிறியதாக நறுக்கி அதை போட வேண்டும். அதன் பிறகு திடக்கழிவுகளை போட வேண்டும். உருவாகும் மீத்தேனை குழாய் வழியாக ஸ்டோரேஜ் டேங்கில் சேகரிக்க வேண்டும். ஶ்ரீதர் வீட்டில் லாரி ட்யூப் தான் ஸ்டோரேஜ் டேங்க். அங்கிருந்து இன்னொரு குழாய் மூலம் சமையலறைக்கு மீத்தேனை எடுத்துச் செல்கிறார். அது மட்டுமில்லாமல், இதிலிருந்து கிடைக்கும் கழிவு ஒரு பிரமாதமான இயற்கை உரம். 

வெறும் 2000ரூபாய் மூலதனத்தில் தினமும் ஒன்றரை மணி நேரம் எரியக்கூடிய மீத்தேனை உற்பத்தி செய்கிறார். யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படிச் செய்தால், நாட்டுக்கு எத்தனை கோடி மிச்சம்? நெடுவாசல் போன்ற பச்சை பசேல் கிராமங்களையும் நாம் பலி கொடுக்கத் தேவையில்லை.

இவ்வளவு எளிமையான முறை இருந்தால், அதை மேலை நாடுகள் பயன்படுத்தி இருப்பார்களே… என்ற சந்தேகம் வருகிறதா? அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மட்கும் குப்பையிலிருந்து ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவவுக்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது. நம் நாட்டில் குப்பைக்கா பஞ்சம்?

இது சாத்தியமா எனக் கேட்கவே வேண்டாம். வீடியோ ஆதாரமே இதோ இருக்கிறது. இதில் சில ஆபத்துகள் இருப்பதாக தோன்றலாம். அதை அரசு சரி செய்து, பாதுகாப்பான முறையாக்கி அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் எந்த அரசும் செய்யும். ஆனால், இந்த அரசு எல்.பி.ஜி மானியத்தை கூட விட்டுக்கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.