அஜித் 10,000 கி.மீ பயணம் சென்ற `BMW 1200 GS' பைக்கின் ஸ்பெஷல் என்ன? |Photo Story

மு.பூபாலன்

2021 பிப்ரவரி மாத இறுதியில் நடிகர் அஜித்குமார் தனது பைக்கர் கிளப் நண்பர்களுடன் சேர்ந்து சிக்கிம் வரை சுமார் 10,000 கிமீ தூரம் பைக் ரைடு சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் அவர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ R1200 GS அட்வென்சர் பைக்கில் ஏகப்பட்ட ஸ்பெஷல் உண்டு.

2014 மாடலான இந்த பிஎம்டபிள்யூ R1200 GS பைக் 220கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்ட ஒரு அட்வென்சர் பைக். இதன் சிறப்பம்சம், மூன்றிலக்க வேகங்களில் போனாலும், பைக் காற்றில் அலைபாயாமல் செல்லும்.

இதன் முன்பக்கம் உள்ள வைஸர் பைக் வேகமாகச் செல்லும்போது , காற்று முகத்தில் அறையாமல் தடுக்கும். எனவே நீங்கள் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் எதிர் வரும் காற்று குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த பைக்கில் இருப்பது 1,170சிசி பாக்ஸர் இன்ஜின். அதுவும் ட்வின் சிலிண்டர். இதன் பவர் 125bhp. எனவே இதன் பிக்–அப் வேகமாக இருக்கும். 0-100 வேகத்தை சில நொடிகளில் அடைந்துவிடலாம்.

அட்வென்ச்சர் ட்ரிப்புக்கு ஏற்றபடி சில ரீ–மாடிஃபிகேஷன் செய்யபட்ட இந்த பைக்கின் இன்னொரு ஸ்பெஷல் இதில் உள்ள ரைடிங் மோடுகள்.

இதில் உள்ள Rain எனும் மோடு, எப்படிப்பட்ட மலைச் சாலை – மழைச் சாலையிலும் ஓட்டுவதற்கு செம ஃபன்னாக இருக்கும். எவ்வளவு வேகத்தில் போனாலும் வழுக்காது இதன் டயர். எனவே நீங்கள் தைரியமாக சடர்ன் பிரேக் அடிக்கலாம்.

கார்களில் இருப்பதுபோல் இதை HSC (Hill Start Control) எனும் மோடு உள்ளது. இதனால் மலைச் சரிவுகளில் தேவையில்லாமல் பைக் இறங்காது.

இது அட்வென்ச்சர் என்பதால் ஆஃப்ரோடு செய்வதற்கும் `Enduro Pro’ எனும் ரைடிங் மோடு இருக்கிறது. ஆக்ஸிலரேட்டரைத் திருகியதும், பின்னால் அமர்ந்திருப்பவர் பிக்கப் வேகத்தில் பின்னால் போகும்படி டார்க் கொப்புளிப்பது நமக்கே தெரியும்.

`Enduro Pro’ எனும் ரைடிங் மோடு பைக்கின் ட்ராக்ஷனை அதிகரிப்பதால் பீச் மணலில் கூட இந்த பைக்கில் சுற்றிச் சுற்றி வீலிங் செய்யலாம்.

நெடுஞ்சாலையில் செல்வதற்கும் `Dynamic Pro’ என்றொரு மோடு உள்ளது. இதில் பவர் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும். இதிலுள்ள த்ராட்டில் எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் இயங்குவதால், பவரும் எரிபொருளும் தேவையில்லாமல் செலவாகாது.

TFT Display

இதன் சீட் உயரம் 850 மிமீட்டர். எடை சுமார் 244 கிலோ. அதனால் அஜித் போன்று 'வலிமை'மிக்கவர்கள்தான் இந்த பைக்கை கையாள முடியும். அதாவது உயரமானவர்களுக்குத்தான் இதன் ஹேண்ட்லிங் எளிமையாக இருக்கும்.