Land Cruiser 300: முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற புதிய கார் - இத்தனை கோடிக்கு வொர்த்தா? | Visual Story

மோட்டார் விகடன் டீம் & மு.பூபாலன்

லேட்டஸ்ட்டாக 2 கோடி ரூபாய் மதிப்பில் லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கிய ஸ்டாலின், இப்போது லேண்ட்க்ரூஸர் LC300 காரில், வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் சென்ற இந்தக் கார் CBU (Completely Built Unit) முறையில் துபாயிலிருந்து இறக்குமதி செய்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை – இது தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான காராக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

LC300 காரில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை டொயோட்டா ஷோரூம்களில் இதை புக் செய்தால், இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.2.25 கோடி. துபாயிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து வாங்கியதால், இதன் விலை சுமார் ரூ.3.5 கோடிக்குள் இருக்கலாம். சென்னையைப் பொருத்த வரை முக்கியமான 5 விஐபிக்கள் இந்த கரை புக்கிங் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக டொயோட்டா மற்றும் LC சீரிஸ் வகை கார்கள் அரசியல்வாதிகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்போல! கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி என எல்லோருமே டொயோட்டா கார்களில்தான் கெத்தாக வலம் வந்தார்கள். அந்த வகையில் இப்போது ஸ்டாலின் இந்தப் புது LC 300-ல் வலம் வரத் தொடங்கியுள்ளார்.

இப்படி மதிப்புமிக்க இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் LC300 காருக்கு இவ்வளவு டிமாண்ட் ஏன்? இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்.

ஸ்டாலின் வைத்திருக்கும் இந்தப் புது LC 300, லேண்ட்க்ரூஸரின் 8–வது ஜெனரேஷன் மாடல்.

LC என்பது Land Cruiser என்பதைக் குறிக்கிறது. அதாவது, சாலைகளில் மட்டுமில்லை; எப்படிப்பட்ட நிலங்களிலும் க்ரூஸ் ஆகிச் செல்லும் எஸ்யூவி என்பதுதான் இதன் பொருள்.

1953–ல் இருந்து லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி கார்கள் புழக்கத்தில் இருக்கின்றன. டொயோட்டாவின் ஆகப்பெரிய சீனியர் கார் இதுதான்.

2007-ல் அறிமுகமான LC 200 சொகுசு கார் செக்மென்ட்டில் சக்கை போடு போட்ட கார். இதையடுத்து 14 வருடங்களுக்குப் பிறகு அதன் அடுத்த ஜென்ரேஷனாக இந்த 'Land Cruise 300' காரை அறிமுகப்படுத்தியுள்ளது டொயாட்டா நிறுவனம்.

இதற்கு வெயிட்டிங் பீரியட் ரொம்ப ரொம்ப அதிகம். உலகளவில், 3 முதல் 4 ஆண்டுகள் வரை இதற்குக் காத்திருப்புக் காலம் இருக்கும். இந்த காருக்கு உள்ள டிமேண்ட் மற்றும் செமி கண்டக்டர் சிப் ஷார்ட்டேஜ் போன்றவைதான் இதற்குக் காரணம்.

‘Squarish Design’ எனும் தீம் கோட்பாட்டில் இந்த லேண்ட்க்ரூஸரை டிசைன் செய்திருக்கிறது டொயோட்டா. பார்ப்பதற்கு உருவத்தில் பெரிய ஆப்பிரிக்க யானையைப் போலவும், கட்டுறுதியில் காண்டாமிருகத்தைப்போலவும் இருக்கும் இந்த கார்.

இதில் ஃபிங்கர் ப்ரின்ட் ஆத்தரைசேஷன் சிஸ்டத்தை முக்கிய வசதியாகச் சொல்லாம். இந்த ஃபிங்கர் பிரின்ட் வைத்து காரின் கதவைத் திறப்பது, ஸ்டார்ட் செய்வது என ஏரளமான வசதிகள் உள்ளன.

இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை டொயோட்டா லாஞ்ச் செய்யவில்லை. அநேகமாக ஸ்டாலின் கார் டீசலாகத்தான் இருக்க வேண்டும். இதில் இருப்பது 3.3 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின்.

இதன் டார்க் 700Nm. நம் ஊர் எஸ்யூவிகளில் அதிகபட்சமாக 400Nm இருக்கும். மேலும், 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 305 bhp குதிரை சக்தி இதில் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு பெரிய கேரவனையே இழுத்துச் செல்லும்.

எஸ்யூவி என்றாலே ஆஃப்ரோடுதான். இந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸரில் அது இல்லாமல் இருக்குமா? பெரிய பள்ளத்தில் இருந்து வேகமாக இறங்கினாலும், பம்பர்களில் பெரும்பான்மையாக அடிபடாத அளவு இதன் ஆங்கிள்கள் அற்புதமாக இருக்கும்.

இதில் 4 வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக வந்தாலும், அட்வான்ஸ்டு மல்ட்டி டெரெய்ன் செலெக்ட் சிஸ்டம்… அதாவது டிரைவிங் மோடுகள் உண்டு. Deep Snow, Auto Mode என்று 2 டிரைவிங் மோடுகள் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சாலையே இல்லாத சாலையிலும் இந்த லேண்ட்க்ரூஸர் யோசிக்காது.

மேலும், இதில் மல்ட்டி டெரெய்ன் மானிட்டர் சிஸ்டம் எனும் வசதி இருக்கிறது. காருக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்ட, காருக்குக் கீழே கேமரா பொருத்தியிருக்கிறார்கள். இதுதான் ரியல் 360 டிகிரி கேமரா.

இந்தக் காரில் Revised Control System என்றொரு வசதி உண்டு. இந்த எஸ்யூவியின் வேகத்தை கன்ட்ரோல் செய்யும் வசதி இது. ‘தண்ணீர் மற்றும் சேறு, பாறைகள் நிறைந்த ஆஃப்ரோடுகளில் இதுக்கு மேல் வேகம் போகக் கூடாது ராஜா’ என்று நம்மை அலெர்ட் செய்யும் இந்த சிஸ்டம்.

வாடிக்கையாளர்களுக்கு வாரன்ட்டியை அள்ளித் தெளிப்பதில் டொயோட்டா கஞ்சத்தனம் காட்டாது. இந்த காருக்கு 3 ஆண்டுகளும்/1 லட்சம் கிமீ வாரன்ட்டியும் கொடுக்கிறது டொயோட்டா.

இதுதவிர, ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, ஒயர்லெஸ் சார்ஜிங், கார் ஓட்டும்போது, சாலைகளில் பார்வை விலகாமல் கவனிக்க ஹெட்அப் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யப்படக் கூடிய ஸ்டீயரிங் வீல் போன்ற ஏகப்பட்ட வசதிகள் இதில் உண்டு.

குளோபலாக 7 சீட்டர் மாடலில் கிடைக்கும் இந்த லேண்ட்க்ரூஸர் LC 300, இந்தியாவில் 5 மற்றும் 7 சீட்டர் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கலாம்.

இந்தியாவில் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் இந்த டொயோட்டா LC 300 கிடைக்கிறது.