நந்தினி.ரா
உலகப் பணக்காரர்களின் பட்டியலை முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 37 ஆண்டுகளாக வெளியிட்டுவருகிறது.
அந்த வகையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் பத்து இடங்களைப் பிடித்த பணக்காரர்கள் யார், யார் என்பதைப் பார்ப்போம்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட். LVMH (LVMH Moët Hennessy Louis Vuitton) என்ற பிரபல பேஷன் நிறுவனத்தின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 211 பில்லியன் டாலர் ஆகும்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட எலான் மஸ்க், 180 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் CEO ஜெஃப் பெஸோஸ் 114 மில்லியன் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்கத் தொழிலதிபர் லாரி எலிசன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். 78 வயதான இவரின் சொத்துமதிப்பு 107 பில்லியன் டாலர்.
92 வயதான வாரன் பஃப்பட் 'Berkshire Hathaway' குழுமத்தின் தலைவர் ஆவார். 106 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநரான பில் கேட்ஸ் இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயதான மைக்கேல் ப்ளூம்பெர்க் 94.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 7-வது பணக்காரராக உள்ளார்.
தொலைத்தொடர்பு ஜாம்பவானான கார்லஸ் ஸ்லிம் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அமெரிக்கா மொவில் என்ற தொலைபேசி நிறுவனத்தை நடத்தி வரும் இவரின் சொத்து மதிப்பு 93 மில்லியன் டாலர்.
கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தற்போது 9வது இடத்துக்கு முன்னேறிருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 83.4 பில்லியன் டாலர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் பால்மர் இப்பட் டியலில் 10வது இடத்தில் இருக்கிறார். 67 வயதுடைய இவரது சொத்து மதிப்பு 80.5 பில்லியன் டாலர்.