தங்க நகைகளுக்கு இனி `ஹால்மார்க்' முத்திரை கட்டாயம்... நகை வாங்குபவர்கள் கவனத்துக்கு!

செ.கார்த்திகேயன்

தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (BIS) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம்.

ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு 14, 18 மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்கப்படும். அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் தயாரிக்கப்படும் கலைப்பொருள்களில் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும்.

இனிமேல் நகை வாங்குபவர்கள் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீட்டு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குவது நல்லது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன.

ஹால்மார்க் மையங்களில் சுமார் 34,647 நகைக்கடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் 1 - 2 லட்சம் ஜூவல்லர்கள் வரையில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகைகள் மற்றும் தங்க கலைப்பொருள்களில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அதன் மதிப்பைப்போல ஐந்து மடங்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு 800 டன் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும் தங்கம் பெரும்பாலும் நகை உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

தகவல்: ஶ்ரீதர் சாரதி