இ.நிவேதா
அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.
அதில் ஊடகம், செல்வம், செல்வாக்கு என்ற பிரிவுகளின் கீழ் உள்ள பட்டியலில், 39 சி.இ.ஓ-கள், நாட்டின் 10 தலைவர்கள் மற்றும் 115 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்ட 11 பில்லியனர்கள் இடம்பெற்று இருந்தனர்.
இவர்களில் நிர்மலா சீதாராமன் உட்பட 6 இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 36-வது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இவர் இடம்பெறுகிறார்.
இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் 54-வது இடத்தையும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் சோமா மோண்டல் 67-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 72-வது இடத்தையும், நியாகாவின் நிறுவனர் ஃபால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்களில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, கிரண் மஜூம்தார்- ஷா மற்றும் ஃபால்குனி நாயர் கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் 52, 72, 88-வது இடங்களைப் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.