`கபில் தேவ் முதல் நீரஜ் சோப்ரா வரை...' - மல்யுத்த வீராங்கனைகளுக்குக் குவியும் ஆதரவு!

சி. அர்ச்சுணன்

WFI தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகிவரும் சூழலில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, ``இந்த வகையான எதிர்மறை விளம்பரம், போராட்டம் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல. மேலும், இது ஒழுக்கமின்மைக்குச் சமம்" என்று கூறினார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இதற்கிடையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ``இந்த விஷயத்தில் மௌனம் காத்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க அச்சப்படுகிறார்கள்" என பகிரங்கமாக ஊடகத்திடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து கபில் தேவ், ஷேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், சானியா மிர்சா உள்ளிட்ட பல முன்னணி விளையாட்டு வீரர்களும் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

``அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்" - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இன்ஸ்டாகிராமில் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரை டேக் (tag) செய்து ஆதரவு தெரிவித்தார்.

``நாட்டுக்குப் பெருமை சேர்த்து நம்மை சந்தோஷப்படுத்திய சாம்பியன்கள் இன்று சாலையில் இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது. பாரபட்சமின்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். வீரர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" - ஷேவாக்

``சாக்ஷி, வினேஷ் ஆகியோர் நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில், தெருவில் இறங்கிப் போராடுவதைக் கண்டு வேதனையடைகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்" - ஹர்பஜன் சிங்

``இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெறும்போது மட்டுமல்ல, எப்போதுமே நம் நாட்டின் பெருமைக்குரியவர்கள்தான்." - இர்ஃபான் பதான்

``விளையாட்டு வீராங்கனையாக மட்டுமல்லாமல் ஒரு பெண்ணாக இதைப் பார்க்க கடினமாக இருக்கிறது. அவர்களுடன் நிற்க வேண்டிய நேரம் இது. உண்மை எதுவாக இருந்தாலும் விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்." - சானியா மிர்சா (டென்னிஸ் வீராங்கனை)

``இந்த தேசத்தில் ஒவ்வொரு தனிமனிதனின், விளையாட்டு வீரரின் நேர்மை, கண்ணியம் பாதுகாக்கப்படுவதற்கு நாம்தான் பொறுப்பு. இது ஒரு முக்கியப் பிரச்னை. எனவே பாரபட்சமற்ற, வெளிப்படையான முறையில் இது கையாளப்பட வேண்டும். நீதியை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." - நீரஜ் சோப்ரா (ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர்)

``ஒலிம்பிக், உலகப் பதக்கங்களை வென்ற நம் வீராங்கனைகளை இவ்வாறு பார்க்க இதயம் உடைகிறது. சட்டம் தன் வழியில் நீதி வழங்கும் என்று நம்புகிறேன்." - நிகத் ஜரீன் (மல்யுத்த வீராங்கனை)

``நம் மல்யுத்த வீரர்கள் நீதி வேண்டி தெருக்களில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கையில் வேதனையாக இருக்கிறது. கடுமையாக உழைத்து நாட்டுக்குப் பல விருதுகளை வென்று கொடுத்த என் சக வீரர்களைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது." - ராணி ராம்பால் (ஹாக்கி வீராங்கனை)