பத்திரிகை உலகின் பேராசான்... விகடன் எஸ்.பாலசுப்ரமணியன் நினைவலைகள்!

நமது நிருபர்

எஸ்.பாலசுப்ரமணியன், விகடனின் வரமும் உரமுமாக இருந்தவர். விகடனை தமிழகத்தின் செல்லமாக வளர்த்தெடுத்தவர். விகடனின் முதல் ரசிகர்; விகடனின் தீவிர விமர்சகர்.

எளிமைதான் அடையாளம். எழுத்துதான் இயக்கம். அன்புதான் ஆயுதம். பணிவுதான் கேடயம். துணிவுதான் துணை. இதழியல் அறத்தையும் செய்நேர்த்தியையும் செம்மையாகப் பயிற்றுவித்த தாயுமானவர்.

அரசியல் விமர்சனங்களையும், கடைக்கோடி மக்களின் பிரச்னைகளையும் பேச தமிழின் முதல் சமூக, அரசியல், புலனாய்வு இதழான 'ஜூனியர் விகடன்’ இதழைத் தொடங்கியவர்.

ஆசிரியர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விவசாயி... என இவருக்குத்தான் எத்தனை முகங்கள். மனிதருக்கு, பறவை வளர்ப்பிலும் அலாதி ஆர்வம்.

தமிழ்ச் சிறுகதைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய 'முத்திரைக் கதைகள்’ இவருடைய ரசனையின் அடையாளம். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு வெகுஜனப் பரப்பில் தனி மேடை அமைத்துத் தந்தவர்.

தன் வாசகர்களை போராளிகளாக, பொதுநல விரும்பிகளாக, சமூக ஆர்வலர்களாக மாற்றிய மாமனிதர். 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்பதை, எப்போதும் தன் மனதில் இருத்தியவர்.

சாதி-மதப் பிரிவினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள், சடங்குகள் அனைத்தையும் அறவே ஒதுக்கியவர். மரணத்துக்குப் பிறகும் தனது உடலை மருத்துவ மாணவர்கள் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தானமாகத் தந்தவர்.

பத்திரிகை ஆசிரியர் என தன் அறையோடு நின்றுவிடாமல், களமிறங்கிப் பணியாற்றியவர். விவசாயிகளின் துயரத்தை உணர்ந்து தக்க சமயத்தில் வாசகர்களுடன் கைகோத்து உதவிசெய்த மாமனிதர்!

தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடியாகவும், அறநெறிகளின் வழிகாட்டியாகவும் திகழ்ந்த ஞானத் தகப்பனின் அறநெறியை, அன்பின் வழியை விகடன் எப்போதும் பின்தொடரும். 'எல்லோரும் இன்புற்றிருக்க!'