இ.நிவேதா
சில பெண்கள், கணவன் உறவுக்கு நெருங்கினாலே உடலை விறைப்பாக்கிக்கொண்டு மனதாலும் இறுகிவிடுவார்கள். இது உடம்பு தொடர்பான பிரச்னையல்ல. மனம் தொடர்பான பிரச்னை. அதனால், `கப்புள் தெரபி (Couple Therapy)' அவசியம்.
திருமணமான புதிதில் `இப்படி பண்ணலாமா; அப்படி பண்ணலாமா' என்று கணவன் அளவுக்கதிகமாக ஆர்வம் காட்டுகிறபோது, மனைவி பயந்துவிடலாம். அதன் விளைவாக, நிர்வாணத்துக்கு மறுக்கலாம். அளவுக்கதிகமான ஆர்வத்தை கணவன் கட்டுப்படுத்தினாலே, பிரச்னை தீர்ந்துவிடும்.
நம்முடைய கலாசாரத்தில் வெறும் உடலை `பப்பி ஷேம்' என்று குழந்தைகள் மனங்களில்கூட பதிய வைத்துவிட்டோம். அடிமனதில் இருக்கிற அந்த எண்ணத்தால்கூட சில பெண்கள் உறவின்போது நிர்வாணத்துக்கு நோ சொல்லலாம். இது மெள்ள மெள்ள மாறிவிடும்.
சில பெண்களுக்கு `மார்பு சின்னதா இருக்கோ', `தொப்பையோட இருக்கேனோ' என்று தன்னுடைய உடல் மீது தாழ்வு மனப்பான்மை இருக்கும். அது கணவனுக்குத் தெரிந்துவிடும் என்று நிர்வாணத்துக்கு மறுப்பார்கள்.
சில நேரத்தில், கணவனே தன் மனைவியின் உடலை கேலி, கிண்டல் செய்துவிடுவான். அதன் பிறகு, அந்த மனைவி எக்காலத்திலும் மூடிமறைத்துதான் இருப்பாள். இந்த இரண்டு பிரச்னைகள் தான் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருக்கின்றன.
தன் உடல் எப்படியிருந்தாலும் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டியது பெண்களுடைய பொறுப்பு. `அந்தரங்க நேரத்தில் மட்டுமல்ல, எந்நேரத்திலும் மனைவியை கேலி, கிண்டல் செய்யக் கூடாது' என்கிற நாகரிகம் கணவனுக்கு இருக்க வேண்டும்.
தாம்பத்ய உறவில் கணவன் - மனைவிக்கிடையே ஒளிவு மறைவில்லாத பகிர்தல் இருந்தால் தான், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உண்மையைச் சொல்லி, சம்பந்தப்பட்ட பெண்ணின் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் பிரச்னையை சரிசெய்யலாம்.