தொடர் உண்ணாவிரதம், குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ராகுல் காந்தி... விவசாயிகள் போராட்ட அப்டேட்ஸ்!

துரை.நாகராஜன்

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

`இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளன. எனவே, இவற்றை வாபஸ் வாங்க வேண்டும்' என வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றிலிருந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், 28-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு 5 கட்டங்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிய, ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்தாகிவிட்டது. இந்நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசும், விவசாயிகளும் தயாராகி வருகின்றனர்.

`சட்டங்களை ரத்து செய்துவிட்டு வாருங்கள். பிறகு பேசலாம்' என்று உறுதியுடன் டெல்லி எல்லைகளில் காத்திருக்கிறார்கள், விவசாயிகள்.

தேசிய விவசாயிகள் தினமான இன்று, டெல்லியில் விவசாயிகள் மதிய உணவைக் கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பே உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியிருக்கின்றனர்.

அங்கு போராட்டக் களத்தில் இதுவரை 35 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிடக்கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு நபர்களிடம் சுமார் 2 கோடி கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் நாளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து அவரிடம் வழங்க இருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க உள்ளனர்.

ஹரியானா விவசாயிகள் 26, 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.