இ.நிவேதா
துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 அதிகாலை 4.17 மணியளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 24 மணிநேரத்துக்குள் ஏற்பட்ட 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், 4,300 க்கும் அதிகமான மக்கள் பலியானார்கள்.
சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரம் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள் அனைத்தும் சீட்டுக் கட்டுபோல சரிந்து விழுந்தன.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை நிறுவனமும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கு தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கட்டடங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கட்டட இடிபாடுகளில் சிக்கிய 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்திருக்கின்றனர்.
நிலநடுக்கம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், ``இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு. முதல் நிலநடுக்கம் 7.8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட அடுத்த 12 மணி நேரத்துக்குள், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மழையும், கடுமையான பனியும், மின்சாரத் துண்டிப்பும் மீட்புப் படையினருக்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. கட்டடங்கள் இடிபட்ட நிலையில், பலரும் பனியிலும் மழையிலும் அல்லாடுகின்றனர்.
துருக்கி ஹடாய் மாகாணத்தில், விமான நிலையத்திலுள்ள ஒரே ஓடுபாதையும் பிளந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதைந்திருக்கிறது. பிரபல சுற்றுலாத்தளமாக இருந்த 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஜியான்டெப் கோட்டை நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு மீட்புக் குழுக்களை அனுப்பியிருக்கிறது. இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, இரான் ஆகிய நாடுகளும் உதவ முன்வந்திருக்கின்றன.
நெதர்லாந்து, ருமேனியாவிலிருந்து மீட்புப்படையினர் ஏற்கெனவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 76 ஆய்வு நிபுணர்கள், உபகரணங்கள் மற்றும் மீட்பு நாய்களை அனுப்புவதாக இங்கிலாந்து கூறியிருக்கிறது.
கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், துருக்கிக்கு உதவ `ஒவ்வொரு சக்தியையும்’ வழங்குவதாக உறுதியளித்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட அதேநாளில் அவர்களுக்கு ஒரு விமானத்தில் அவசரக் கால பொருள்கள் மற்றும் மீட்புப்பணியாளர்களை அனுப்பி வைத்தார்.
துருக்கி தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தனது குழுக்கள் விரைவாகக் களமிறங்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
மீண்டு வாருங்கள் எம்மக்களே!