கேரளாவில் தென்பட்ட கொம்பன்... திசை மாறும் `ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்'... திணறும் வனத்துறை!

சதீஸ் ராமசாமி & கே.அருண்

நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களைத் தாக்கி வரும் உடைந்த கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை, கடந்த 5 நாள்களாகப் பந்தலூர் வனப்பகுதியில் வனத்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த யானை கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் தென்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 5 நபர்கள் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழந்த மூன்று நபர்களையுமே‌ குறிப்பிட்ட ஒரு யானை‌ தாக்கியுள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஆபரேஷன் புரோக்கன்‌ டஸ்கர்' என்ற பெயரில் குறிப்பிட்ட அந்தக் காட்டு யானையைப் பிடிக்க, 4 கும்கிகள், 3 ட்ரோன் கேமராக்கள், 35 கண்காணிப்பு கேமராக்கள், நூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் கடந்த 5 நாள்களாகப் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகலாகத் தேடி வந்தனர்.

கால்நடை மருத்துவர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு யானையின் உடலில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். உடலில் பாய்ந்த மயக்க ஊசியோடு, அரை மயக்கத்தில் தப்பித்த காட்டு யானையை பல இடங்களில் தேடியும் வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கேரள மாநிலம் நிலம்பூர் வழிக்கடவு இருட்டுக்குத்தி பழங்குடியினர் கிராமத்தின் அருகில் இந்த யானை‌ இருப்பதைக்‌ கண்டு தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக வனத்துறையினரும்‌ இந்த யானையை உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், "உடைந்த கொம்பன் என்ற காட்டு யானை பல ஆண்டுகளாகத் தமிழகம் மற்றும் அதன் எல்லை ஓரத்தில் அமைந்துள்ள கேரள வனப் பகுதிகளையும் பயன்படுத்தி வந்தது. இங்கு வைத்து அந்த யானையைப் பிடிக்க முயன்றதால் ஒருவேளை கேரள வனப்பகுதிக்குள் தப்பலாம் என்பதை அறிந்து, ஏற்கெனவே ‌கேரள வனத்துறையினரிடம் இந்த யானையின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தோம். அவர்களும்‌ எச்சரிக்கையுடனே இருந்தனர்.

இப்போது கேரள மாநிலம் வழிக்கடவு அருகிலுள்ள இருட்டுக்குத்தி பகுதியில் யானை இருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தனர். தற்போது இந்த யானை மிகுந்த ஆக்ரோஷமாகக் காணப்படுவதால், அங்கேயே வைத்து யானையைப் பிடிக்கலாமா அல்லது தமிழக வனப்பகுதிக்குள் விரட்டலாமா என இரு மாநில வனத்துறை உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அங்குள்ள‌ மக்களையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.