ரிஷி சுனக்: பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளி பிரதமர்; காதல் டு அரசியல் - சுவாரஸ்ய தகவல்கள்

VM மன்சூர் கைரி

ரிஷி சுனக்கின் தாத்தா பாட்டி பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் இருந்தவர்கள் 1960-களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். ஆகையால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனானார்.

சுனக்கின் தந்தை யாஷ்வீர் சுனக், தேசிய சுகாதார சேவை மையத்தின் பொது மருத்துவராக சேவை புரிந்தவர். இவரது தாயார் உஷா சுனக் ரசாயன மருந்துக்கடை ஒன்றை நடத்தி வந்தவர்.

இங்கிலாந்தில் பிறந்தாலும் ஆங்கிலம் தவிர, அவருக்கு இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளும் தெரியும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவமும், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்தார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் ரிஷி சுனக், தன் மனைவி துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார்.

அரசியல் ஆசையால் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்த ரிஷி சுனக், 2014-ல் வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றியும் பெற்றார்.

ரிஷி சுனக், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபோது பகவத்கீதையின் மீது உறுதிமொழி எடுத்திருக்கிறார். ரிஷி சுனக்கின் ஆண்டு வருமானம் 700 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் எனக் கூறப்படுகிறது.

பிரிட்டன் வரலாற்றில், இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் பிரதமர் பதவி வகிக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.