`கொட்டும் மழை உரை முதல் டி-ஷர்ட் சர்ச்சை வரை...’ - 100 நாள்களைத் தொட்ட பாரத் ஜோடோ யாத்திரை ஹைலைட்ஸ்

ந.நீலம் இளமுருகு

பாரத் ஜோடோ யாத்திரை 150 நாள்கள் 3,570 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் என்று திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த யாத்திரை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது. தமிழக முதல்வர், ராகுல் காந்திக்கு தேசியக்கொடியைக் கொடுத்து யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.

'தேசத்தை ஒற்றுமைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது' என்று குமரியில் பேசிவிட்டு நடைப்பயணத்தைத் தொடங்கினார் ராகுல். தமிழகத்தில் தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் தொடர்ந்தது.

மைசூரில் கொட்டும் மழையில் ராகுல் ஆற்றிய உரை ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. 'புயலோ, கொட்டும் மழையோ என்னை ஒன்றும் செய்யாது' என்று பேசினார் ராகுல்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல், மீன்பிடி தொழிலாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, அங்கு நடைபெற்ற படகுப்போட்டியில் போட்டியாளர்களுடன் கலந்துகொண்டார்.

ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட் பர்பரி நிறுவனத்தின் டி-சர்ட் என்றும், அதன் விலை ரூ.41,000 என்றும் விமர்சித்து பா.ஜ.க-வினர் ட்வீட் செய்தனர்.

அக்டோபர் 6-ம் தேதி, கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்த யாத்திரையில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் சேர்ந்து பங்கேற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது காங்கிரஸ் நிர்வாகி பலியானார். அவரின் உடலுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷின் தாயாரும், அவரின் தங்கையும் பாரத் ஜோடோ யாத்திரையில், ராகுல் காந்தியுடன் இணைந்தனர்.

தெலங்கானாவில் நடைபெற்ற நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி, பள்ளி மாணவர்களிடம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஓடத் தொடங்கிவிட்டார். மாணவர்களும் உடன் சேர்ந்து ஓட இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

கர்நாடகாவில், யாத்திரையில் பங்கேற்ற ஒருவர் ராகுல் காந்தியிடம் 'இவ்வளவு வெயிலில் செல்கிறீர்கள், நீங்கள் என்ன சன் ஸ்கிரீன் பயன்படுத்துகிறீர்கள் ?' என்று கேட்டார். அதற்கு அவர், 'என் அம்மா எனக்கு சன் ஸ்கிரீன் கொடுத்துவிட்டார்... ஆனால் நான் அதைப் பயன்படுத்துவதில்லை' என்றார்.

ராகுல் காந்தி, இந்த யாத்திரையின்போது விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரையும் சந்தித்து கலந்துரையாடிவருகிறார். 100 நாள்களைக் கடந்த இந்தப்‌ பயணம் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புதிய பாதையைக் காட்டும் என்று நம்புகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.