பேரறிவாளன் விடுதலை: 1991 முதல் 2022 வரை... வழக்கு கடந்து வந்த பாதை!

சாலினி சுப்ரமணியம்

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்கு, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ் கொண்ட இரண்டு பேட்டரி செல்கள் வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டில் 19 வயதில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார்.

பேரறிவாளனின் விடுதலைக்காக அவர் தாயார் அற்புதம்மாள், 31 ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தார். அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துவந்தன.

சிறையிலிருந்தபடியே பேரறிவாளன் பி.சி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்திருக்கிறார்.

2022, மார்ச் 9-ம் தேதி தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவானனுக்குக் கிடைத்த முதல் ஜாமீன் இது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதப்படுத்தியது தவறான காரியம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

1991, ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், மே 18-ம் தேதி இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.