க.ஶ்ரீநிதி
பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 7,800 பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வைத் தற்காலிகமாக நிறுத்தவிருப்பதாக, அதன் தலைமை நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.
`வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாகச் செலுத்திருக்க வேண்டும்’ என்று அமெரிக்க அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் 11-ம் தேதியுடன் பொது சுகாதார அவசரநிலை முடிவுக்குவருவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.
நேற்று அதிகாலை சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை. மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கேண்டேஸ் சாப்மேன் ஸ்காட் (36) என்ற பெண், Oddities என்ற ஃபேஸ்புக் குழுவின் மூலம் குறிப்பிட்ட நபரைச் சந்தித்து, அவருக்கு உடல் உறுப்புகளை 11,000 டாலருக்கு விற்றது தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவில் புழுதிப்புயல் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸின் முக்கிய விமான நிலையத்தில் சுமார் எட்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டதையடுத்து 65,000 பயணிகள் வெளியில் செல்ல இயலாமல் தவித்தனர்.
சூடானில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுக் கலவரத்தால், அந்த நாட்டின் பெண்கள் குழந்தைகள் உட்பட 20,000-க்கும் மேற்பட்டோர் கழுதைகள், குதிரைகள், பிற வாகனங்கள் மூலம் அண்டை நாடான சாடை ( Chad) நோக்கிப் புலம்பெயர்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் குறைக்க, அமெரிக்க அரசு துப்பாக்கிகளைக் கொடுத்து, அதற்கு பதிலாகப் பரிசு அட்டைகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதில் ஒரே நாளில் 3,000 துப்பாக்கிகள் மக்களிடமிருந்து பெறப்பட்டன.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் கைதான ஒருவர், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சனின் பெயரில் போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.