சு.உ.சவ்பாக்யதா
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் அந்த நாட்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்குமிடையேயான மோதலால் மக்கள் தவித்துவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கிடையே குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் சூடானில் அழிக்கப்பட்டிருப்பதாக UNICEF தெரிவித்திருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ``மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிச்சூட்டு விழா, ஒரு பெருமையின் தருணமாக இருக்கும்'' என்று பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி 2024-ல் நடைபெறவிருக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொழிலதிபர் விவேக் ராமசாமி, CBS YouGov என்ற குடியரசுக் கட்சியின் பிரைமரி வாக்கெடுப்பில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்டியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய மாடலும், 2022 -ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸுக்கான இறுதிப் போட்டியாளருமான சியன்னா வீர், குதிரை சவாரி செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு வயது 23.
கிழக்கு காங்கோவின், தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை, வெள்ளத்தால் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்டை நாடான ருவாண்டாவிலும் கனமழையால் பலர் பலியாகியிருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தைவானுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்பவிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
Great St. James, Little St. James ஆகிய தீவுகளை வாங்கிய Jeffrey Epstein என்ற அமெரிக்க பில்லியனர் தற்போது அதை ஒரு சுற்றுலாத்தலமாகவும், ரிசார்ட்டாகவும் மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதற்கு முன்னதாக அந்தத் தீவு, கடத்தல், பாலியல் குற்றங்களின் இடமாகச் செயல்பட்டுவந்தது.
பிரிட்டன் மன்னராகத் தங்க அங்கி அணிந்து, செங்கோல் ஏந்தி மணிமகுடம் சூட்டிக்கொண்டார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.