இந்தியாவைப் பாராட்டிய இம்ரான் கான் | அதிபர் புதினைச் சாடிய எலான் மஸ்க் - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

பிரான்சில் ப்லான்க் மலைப்பகுதி அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். அந்த நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான அர்மான்செட் பனிப்பாறையில் (Armancette glacier) இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

கனடா மசூதியில் வெறுப்பைத் தூண்டும் விதமாக நடந்துகொண்டதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷரண் கருணாகரன் (Sharan Karunakaran) என்ற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இஸ்லாமியர்கள்மீது வெறுப்பைச் செலுத்தும் இது மாதிரியான சம்பவங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாட்டின் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் கால்சியா ஜான்சன், நேக்கியா ஜாக்சன் என்ற இரு மாணவர்கள், தியரத்தை ட்ரிக்னோமெட்ரி (Trigonometry) மூலம் நிரூபிக்கும் புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இது கணித உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகெங்கும் கிறிஸ்தவர்களால் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட ஈஸ்டர் விழாவில் பேசிய போப் ஃப்ரான்சிஸ், ``உக்ரைன்மீது போர் நடத்துவதன் உண்மையை ரஷ்யா கண்டறிய வேண்டும்'' என்றார். மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவும் கேட்டுக்கொண்டார்.

ட்விட்டர் நிறுவனம் பிபிசி நிறுவனத்தையும், அமெரிக்காவின் நேஷனல் பப்ளிக் ரேடியோ நிறுவனத்தையும், அரசு சார்ந்த ஊடகம் (‘government-funded media’) என அடையாளப்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பிபிசி விளக்கம் கோரியிருக்கிறது.

ட்விட்டர் அலுவலகம்

இம்ரான் கான், இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவதைப் பாராட்டியிருக்கிறார். அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் எழுந்தபோதும், மக்களுக்காகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இம்ரான் கான்

போரினால் ரஷ்ய எல்லையில் சிக்கிக்கொண்ட 30 உக்ரைன் சிறுவர்கள் வீடு திரும்பினர். அவர்களை மிருகங்கள்போல் நடத்தியதாக வேதனை தெரிவித்தனர்.

LIBKOS

சீனாவில், அண்டை வீட்டாரைப் பழிவாங்கும் நோக்கில், இரவு நேரத்தில் அவரின் 1,100 கோழிகளை டார்ச் லைட் அடித்து, பயமுறுத்திக் கொன்ற நபருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பிரான்சில் கட்டடங்கள் சரிந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கட்டடத்தில் தீ பற்றியிருப்பதால் மீட்பதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

துபாயில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு காரின் நம்பர் ப்ளேட் 123 கோடிக்கு ஏலம் சென்று சாதனை படைத்திருக்கிறது

``புதின் என்னை ஒரு போர்க் குற்றவாளி என்று அழைத்தார், அதனால் அவர் என்னுடைய சிறந்த நண்பர் இல்லை'' என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க்