ஆப்கனில் பெண்களுக்கு `புது' தடை | மது பழக்கத்துக்கு அடிமையான நாய் - உலகச் செய்திகள்

க.ஶ்ரீநிதி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவகங்களுக்குச் செல்வதைத் தாலிபன் அரசு தடைசெய்திருக்கிறது. இருபாலரும் இருக்கும் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் சிலர் வருவதால், இந்தத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஜெரால்டைன் கிம்ப்லெட் என்ற பெண், லாட்டரியில் இரண்டு மில்லியன் டாலர் வென்றிருக்கிறார். அவர் மகளின் புற்றுநோயைக் குணப்படுத்த தனது வாழ்நாள் சேமிப்பைச் செலவழித்த நிலையில், அவருக்கு இந்தத் தொகை கிடைத்திருக்கிறது.

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயமடைந்தனர். காவலர்கள் செல்லும் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் கோ-கோ என்ற நாய், மது பழக்கத்துக்குச் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நாயின் உரிமையாளர் சமீபத்தில் உயிரிழந்ததால், தற்போது அதற்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

மாணவர்கள் தங்களின் பாடங்களை ChatGPT உதவியுடன் செய்வதால், ஜப்பான் பல்கலைக்கழகங்களில் ChatGPT பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருக்கின்றன.

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், முன்னாள் சட்டம் மற்றும் நிதிப் பிரிவின் தலைமை அதிகாரிகள், ட்விட்டர் நிறுவனம் தங்களுக்கு மொத்தம் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலுத்த வேண்டியிருப்பதாக வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

மருத்துவர் ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ம் தேதி `உலக பார்கின்சன்' தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் பார்கின்சனை ஒரு மருத்துவ நிலையாகக் கண்டறிந்து 1817-ல் "An Essay on Shaking Palsy" என்ற கட்டுரையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிலுள்ள Shiveluch எரிமலை வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலிருந்து வரும் சாம்பல் 10 கிலோமீட்டர் வரை பரவுவதால், அந்தப் பகுதி சாம்பல் மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

Alexander Ledyayev

அமெரிக்காவில் வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில், அவர் வங்கியில் பணியாற்றியவர் என்பது தெரியவந்திருக்கிறது.

போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததால், இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது.

Eranga Jayawardena