க.ஶ்ரீநிதி
கிழக்கு உக்ரைனிலுள்ள ஸ்லோவியன்ஸ்க் (Sloviansk) பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் படுகாயமடைந்தனர். குடியிருப்புக் கட்டடங்கள்மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பிரேசில் அதிபர் மாளிகைமீது முன்னாள் அதிபர் போல்சனரோவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கில், அவர் நேரில் வந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என பிரேசில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருளை உற்பத்தி செய்யும் மிகவும் மேம்பட்ட, சர்வதேச வசதியில் அமைந்திருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆய்வகம் ஸ்பெயின் காவல்துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு, அரசர் மூன்றாம் சார்லஸ் மீது ஐந்து முட்டைகளை எறிந்த வழக்கில், 23 வயது மாணவர் பாட்ரிக் தெல்வெல் (Patrick Thelwell) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாக அறியப்பட்ட டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான 111 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரை நினைவுகூரும் விதமாகவும், கடல் பயணத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
நெதர்லாந்து அரசு 12 வயதுக்குட்பட்ட தாங்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிழைப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகயிருக்கும் குழந்தைகளைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) என்ற ராக்கெட்டைத் திங்களன்று சோதனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ராக்கெட், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மைக் பாம்பியோ அறிவித்திருக்கிறார். ட்ரம்ப்பின் ஆதரவாளரான இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிரான்சில் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசின் முடிவுக்கு மக்கள் போராடிவரும் நிலையில், அரசின் முடிவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மலை ஏறும் வீரரான பியாட்ரிஸ் ஃப்லமினி (Beatriz Flamini) என்பவர் 500 நாள்கள், 70 மீட்டர் ஆழமான குகையில் மனிதர்களைப் பார்க்காமல் தனியாக வசித்த பின்னர், மீண்டும் வெளியே வந்திருக்கிறார்.