சே. பாலாஜி & க.ஶ்ரீநிதி
``முன்பு எப்போதும் இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. உலகம் முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில், கடுமையான வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவு உருகி வருகின்றன. காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம்" என ஐ.நா-வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்து அரசு, புதிய அவசரக்கால எச்சரிக்கை சேவையின் முதற்கட்ட சோதனையை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இன்றைய தினம் லட்சக்கணக்கான மொபைல் போன்களில் குறிப்பிட்ட நேரத்தில் சத்தமாக அலாரம் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது.
கனடாவில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பிங்க் நிற ஹீல்ஸ் அணிந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்கள்மீது நடத்தப்படும் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் பக்லான், தாகர் பகுதிகளிலுள்ள பெண்கள், ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கத் தாலிபன்கள் தடைவிதித்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
OpenAI-ன் சாட்பாட் தயாரிப்பான ChatGPT-ஐவிட மாணவர்கள் கணக்கியல் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் ChatGPT-ன் செயல்திறன் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், அதுவொரு கேம் சேஞ்சர் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானில் பாரம்பர்யமிக்க `Crying Sumo' திருவிழா நடைபெற்றது. இதில் சுமோ ஆடைகள் அணிவிக்கப்பட்டு, குழந்தைகள் சுமோ வலையத்தினுள் நிற்கவைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.
விருது பெற்ற "கோகோமோ சிட்டி" ஆவணப்படத்தில் நடித்தவரும், திருநங்கை உரிமைகள் ஆர்வலருமான கோகோ டா டால், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மியான்மரில் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர், யாங்கூனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் உணவகத்தில் உணவு சமைக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரண்டு பேர் உயிரிழந்தனர்.