க.ஶ்ரீநிதி
ரயில் மூலம் சென்றடையக்கூடிய குறுகிய வழித்தடங்களில், உள்நாட்டு விமான சேவையை பிரான்ஸ் தடைசெய்திருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை அந்த நாடு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜியோர்ஜி கோஸ்போடிநோவ் (Georgi Gospodinov) சர்வதேச புக்கர் பரிசை, தனது `டைம் ஷெல்டர்’ என்ற புத்தகத்துக்காக வென்றிருக்கிறார்.
பால்டிக் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க விமானங்கள், ரஷ்ய எல்லைப் பாதுகாப்புப்படையால் இடைமறிக்கப்பட்டன. இதை பென்டகன் உறுதிசெய்திருக்கிறது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ட்ரக் ஒன்று பேரியர்கள்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதிபர் ஜோ பைடனைக் கொலைசெய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த ட்ரக்கை ஓட்டிவந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை, சிறிய நில அதிர்வுடன் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிவருவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுவருகின்றனர். இந்த எரிமலையில் 2010-ல் ஏற்பட்ட வெடிப்பின்போது, 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பார்ரமட்டா ( Parramatta) பகுதியின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சமீர்.
பயனாளர்கள் தங்கள் கணக்குகளை மற்றவர்களுக்குப் பகிர்வதால், புதிய தொடர்களில் முதலீடு செய்வது கடினமாகியிருப்பதாக, பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருக்கிறது.
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடைமுறையைச் செப்டம்பர் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியிருக்கிறது.
Indoor 200 மீட்டர் தடகள விளையாட்டுகளைக் குறிப்பிடும்போது, இனி `Indoor' என்ற சொல்லுக்கு பதிலாக, `Short Track' என்ற சொல்லைப் பயன்படுத்த உலக தடகள கவுன்சில் முடிவுசெய்திருக்கிறது.
தன்பாலின ஈர்ப்பாளர்களைக் கொண்டாடும் வகையில் சுவிஸ் நிறுவனம் தயாரித்த 164 வாட்ச்சுகளை, மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நாட்டில் தன்பாலின உறவு சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் கடைசி பேரரசர் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஏலத்துக்கு வந்தது. அந்தக் கடிகாரம் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலம் சென்றிருக்கிறது.