க.ஶ்ரீநிதி
ரஷ்ய பாஸ்போர்ட்டை பெற உக்ரைனியர்கள் நிர்பந்திக்கப்படுவதாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் அடையாளத்தை ரஷ்யா அழிக்க நினைப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
சீனாவில் பரவிவரும் புதிய மரபணு மாற்றப்பட்ட XBB கொரொனா தொற்றால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த தொற்றால் வாரத்துக்கு 65 மில்லியன் பேர் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டுக்கருகே தடுப்புவேலியின் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த நபர் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.
இங்கிலாந்தில், ஆடை வடிவமைப்பு மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போலி ஆடை வடிவமைப்பாளர் ஆரிஃப் படேல் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர் 97 மில்லியன் பவுண்டு மதிப்பிலான வாட் வரியை ஏமாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தென்கொரியா தன் நாட்டில் தயாரிக்கப்பட்ட நூரி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சற்று தாமதமாக ஏவப்பட்டது.
ஜப்பானில் கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு, நான்கு பேரைக் கொன்ற நபரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக்கிலுள்ள குவாம் பகுதியைத் தாக்கியிருக்கும் மவார் புயலால் (Typhoon Mawar) மக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவித்துவருகின்றனர். 241 கிலோமீட்டர் வீசிய புயலால், மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சிலி நாட்டின் வடக்கு கடற்கரையில் ஏவியன் காய்ச்சல் (பறவைக் காய்ச்சல்) பாதிப்பால் 9,000 கடல் சிங்கங்கள், பென்குயின்கள், நீர்நாய்கள் உள்ளிட்டவை உயிரிழந்துள்ளன.
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் `பார்பி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. மார்கர் ராபி பார்பியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்விட்டரில் பலரால் பகிரப்பட்டிருக்கிறது.