ஒற்றைத் தலைமை சர்ச்சை: 'ஜெயக்குமார் டாக் முதல் நீதிமன்றத் தீர்ப்பு வரை!' - இதுவரை நடந்தது என்ன?

VM மன்சூர் கைரி

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்து விவாதிக்க, கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமார்

ஓ.பி.எஸ், `பொதுச்செயலாளர் பதவி ஜெ. மட்டும்தான். ஒற்றைத் தலைமை என்கிற பேச்சுக்கே தற்போது இடமில்லை. இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும். இது குறித்து 19-ம் தேதி மாலை ஆறு மணிக்குள், இ.பி.எஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்

இ.பி.ஸ் பத்திரிகையாளரைச் சந்திக்காததால், பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-க்கு கடிதம் எழுதினார்.

ஓபிஎஸ். - இபிஎஸ்

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என இருவர் வீட்டுக்கும் மாறி மாறிச் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-உக்கு ஆதரவான போஸ்டர்களும் பரபரப்பைக் கிளப்பின.

`ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ் திட்டவட்டமாக இருக்கிறார். அவரைச் சமாதானப்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், அவர் இந்த முறை விட்டுக்கொடுக்க மாட்டார்' என அவரின் ஆதரவாளர்கள் கூறினார்கள்.

ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தைப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்போவதாகத் தகவல்கள் வெளியாக, பொதுக்குழுக் கூட்டத்தையே நடத்தக் கூடாதென ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறும்' எனத் தெரிவித்தார். அதில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதியை நீக்கிவிட்டு, ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்ற இ.பி.எஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருஷ்ண ராமசாமி பொதுக்குழுக் கூட்டத்துக்குட்க் தடை இல்லை. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.