பள்ளி ஆசிரியர் டு குடியரசுத் தலைவர் - திரௌபதி முர்மு கடந்துவந்த பாதை!

VM மன்சூர் கைரி

1958-ம் ஆண்டு, ஜூன் 20-ம் தேதி ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாநிலத்திலுள்ள பாடிபோசி எனும் கிராமத்தில் பிறந்தார் திரௌபதி முர்மு.

சந்தால் பழங்குயினத்தைச் சேர்ந்த இவர், தனது கல்லூரிப் படிப்பை புவனேஸ்வரிலுள்ள ரமா தேவி மகளிர் கல்லுாரியில் முடித்தார். அதன் பிறகு, பள்ளி ஆசிரியையாக நீண்டகாலம் பணியாற்றினார்.

ஷ்யாம் சரண் முர்மு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார் முர்மு. அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார்.

திரௌபதி முர்மு பா.ஜ.க-வில் இணைந்து முதன்முதலாக 1997-ம் ஆண்டு நடந்த ராய்ரங்பூர் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000, 2004-ம் ஆண்டுகளில் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ராய்ரங்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000 - 2002 வரை ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

திரௌபதி முர்முவுக்கு 2007-ம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை, சிறந்த உறுப்பினருக்கான நீலகந்தா விருது வழங்கியது. அதன் பிறகு 2009 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார். 2006-2009 வரை பா.ஜ.க-வின் பழங்குடிப் பிரிவான `எஸ்.டி.மோர்ச்சா'வின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

2015-2021 ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரௌபதி முர்மு பதவி வகித்தார். இதன் மூலம் `மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்’ என்ற புகழை அடைந்தார்.

தற்போது நடைபெற்ற 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், அமோக வெற்றிபெற்று `இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்’ என்ற புகழையும், `இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் முர்மு.